Skip to main content

என்.எல்.சியில் கொதிகலன் வெடித்து 13 பேர் பலியான விவகாரம்! என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம்!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
nlc incident... fined Rs 5 crore

 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 01-ஆம் தேதி 5-ஆவது அலகிலுள்ள கொதிகலன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர்  தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பலல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் நெய்வேலி நகரியம் 7-ஆவது வட்டத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் துணை தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தவர் இவர் கடந்த 02.07.2020 அன்றும், இன்ட்கோசெர்வ் தொழிலாளி செல்வராஜ் என்பவரும், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் என்பவரும் 05.07.2020 அன்றும், நிரந்தர தொழிலாளி வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் ஜோதி ராமலிங்கம், இன்ட்கோசெர்வ் தொழிலாளி தொப்புளிக்குப்பம் இளங்கோவன் ஆகியோர் 06.07.2020 அன்றும், நெய்வேலி நகரியம் வட்டம் 29-ஐ சேர்ந்த இன்ட்கோசர்வ் தொழிலாளி ஆனந்தபத்பநாபன் 07.07.2020 அன்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதையடுத்து என்.எல்.சி கொதிகலன் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே  இன்று இதுகுறித்து விசாரணை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த விபத்து தொடர்பாக  என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை தி.மு.க அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே. விஷ்ணு பிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தையும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் இரு கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார். அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் நான் திடமாக கூறிக் கொள்வது என்னவென்றால் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும், மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி ராஜ்யசபா உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போதுதான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதைக் காண முடிந்தது. 

“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

பாஜக அரசை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய இடமாக உள்ளார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்ற எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது உள்ள சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் இப்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க, சிறப்பு நடவடிக்கை காங்கிரஸ் அரசு நிச்சயம் மேற்கொள்ளும். தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை, தி.மு.க அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் விலை உயர்வு என்று கேட்டால் , மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால், உலக அளவில் குரூடாயில் விலை குறைந்த போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்.சி, எஸ்.டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம். இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று பேசினார்.  

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.