ADVERTISEMENT

நயன்தாராவுக்கும் சரோஜாதேவிக்கும் ஒரே ஃப்ளாஷ்பேக்! - பழைய ரீல் #1 

08:22 PM Jun 11, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

‘காற்று வாங்கப் போன இடத்தில் தமிழ் சினிமாவிற்கு அழகிய கதாநாயகி என்கிற கவிதையை வாங்கி வரப் போகிறோம்’ என்று அப்போது அவர் நினைத்திருக்க மாட்டார். அவர்? பத்திரிகையாளர், கதாசிரியர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்ட சின்ன அண்ணாமலை!

மெரீனா பீச்! நண்பர்களுடன் அமர்ந்திருந்த சின்ன அண்ணாமலையை... தற்செயலாகச் சந்தித்தார்... தன் தோழியுடன் அங்கு வந்த நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம். 'கன்னடப்படங்களில் நடித்திருக்கும் என் தோழிக்குத் தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்கித்தாருங்கள்’ என்று சொல்லி.. தன் தோழியை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது... சிவாஜி - ஜமுனா நடிப்பில் பந்துலு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த ‘தங்கமலை ரகசியம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடும் இரு இளம் பெண்களில் ஒருவராக ஆட அந்த இளம் பெண்ணுக்கு வாய்ப்பு வாங்கித் தந்தார் சின்ன அண்ணாமலை.

ADVERTISEMENT



பந்துலு கேட்டுக் கொண்டதின் பேரில் அந்த பாடல் காட்சியை படமாக்கிய டைரக்டர் ப. நீலகண்டன் “நேரில் சுமாராக இருக்கும் இந்தப் பெண், கேமரா வழியாக பார்க்குபோது... மிக அழகாக இருக்கிறாள்” என சின்ன அண்ணாமலையிடம் சொல்ல, தான் தயாரிக்கப்போகும் படத்திற்கு அந்தப்பெண்ணை புக் செய்து கொண்டார்.

எம்.ஜி.ஆரை முதன் முதலாக ஒரு சமூகக்கதையில் நடிக்கவைக்க விரும்பி ‘திருடாதே’ என்கிற படத்தை தன் நண்பர் அருணாசலத்துடன் இணைந்து தயாரிக்க முடிவு செய்து எம்.ஜி.ஆரிடம் சொன்னார் சின்ன அண்ணாமலை. சம்மதம் தெரிவித்த எம்.ஜி.ஆர்... “நான் நாலைந்து படங்களில் நடித்த வருவதால் இந்தப் படத்தை நைட் கால்ஷீட்டில் எடுப்போம். கதாநாயகி புதுமுகமாக இருந்தால் கால்ஷீட் பிரச்சனை வராது” என்றார்.


தான் ஒப்பந்தம் செய்து வைத்திருந்த பெண்ணை டெஸ்ட் ஷீட் செய்து எம்.ஜி.ஆருக்கு போட்டுக் காண்பித்தார். அந்தப் பெண் ஒரு காலை லேசாக தாங்கித்தாங்கி நடந்ததால் எம்.ஜி.ஆருக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்காது என நினைத்து அதை சுட்டிக்காட்ட, “அந்தப் பெண் அப்படி நடப்பது செக்ஸியாகத்தான் (வசீகரமாக) இருக்கிறது. கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து விடுங்கள்” என்றார்.



ஆனாலும் படத்தை தயாரிக்கும் பார்ட்னர்களுக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. இதை அறிந்த எம்.ஜி.ஆர், தான் இயக்கி, தயாரித்து, நடித்து வந்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் நாயகியாக்கினார். அவர்தான் ‘கன்னடத்துக்கிளி’ ‘அபிநய சரஸ்வதி’ என கொண்டாடப்பட்ட சரோஜாதேவி! 1950- களின் இறுதியில் தொடங்கி 1970- களின் மத்திமம் வரை தமிழ்சினிமாவை ஆண்ட ‘ராஜாதி ராணி’யானார். அன்றைய காலக்கட்டத்தின் அதிக சம்பளம் வாங்கிய சூப்பர் ஸ்டாரிணி சரோஜாதேவி!


சிம்புவுக்கு ஜோடியாக ‘தொட்டி ஜெயா’ படத்தில் நடிக்க கொச்சியிலிருந்து ரயிலில் கிளம்பி வந்தது ஒரு மயில்! சென்னை ஹோட்டல் ஒன்றில் மூன்று நாட்கள் சென்னையில் தங்கி டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்றார். நேரில் அவரைப் பார்த்த டைரக்டர் வி.இசட்.துரைக்கும் டெஸ்ட் ஷூட்டில் பார்த்த சிம்புவுக்கும் ‘டயானா குரியன்’ என்கிற அந்த இளம் பெண்ணைப் பிடிக்கவில்லை! குறிப்பாக ‘முகவெட்டு சரியில்லை’ என நிராகரித்துவிட்டு, ‘ஆட்டோகிராஃப்’ கோபிகாவை கதாநாயகியாக்கினார்கள்.



அதன் பிறகு, ஹரி இயக்கத்தில் சரத் ஜோடியாக ‘ஐயா’ படம் மூலம் அறிமுகமானார் டயானா குரியன்! 2005- ல் தொடங்கி இன்று வரை தமிழ்சினிமாவை தன் ஆளுகைக்கு உட்படுத்தியிருக்கிற அந்த இளவரசி நயன்தாரா. முதலில் நயனை நிரகாரித்த சிம்புவே ரீலில் மட்டுமல்லாது ரியலிலும் நயன்தாராவின் பக்தனாக இருந்த கதை எல்லோருக்கும் தெரியுமே!


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT