பேனர் வைக்கலாம்... வேண்டாம்... பால் ஊற்றவேண்டாம், அண்டாவில் ஊற்றணும்... வரும் மக்களுக்கு பால் காய்ச்சி கொடுக்கணும்... என STR வைரல்களுக்குப் பிறகு வந்திருக்கிறது 'வந்தா ராஜாவாதான் வருவேன்'.

"எனக்கு ஸ்டேட்ல பவர்னா அவருக்கு டெல்லி வரைக்கும் பவர்டா", "இன்னும் அரை மணிநேரத்துக்குள்ள ரயில்வேஸ்டேஷன் நம்ம கண்ட்ரோல்ல இருக்கணும்" என்று கூறுவதும் அதன் படியே நடப்பதும்... என பில்டப்புகளும் மாடியிலிருந்து வண்டியில் விழுவது, வண்டியில் விழுந்து மயக்கம் போடுவது, மயக்கம் போட்டதும் பழசை மறப்பது என காமெடிகளும் அழகான இரண்டு நாயகிகள், இருபது பேர் கொண்ட குடும்பம் என அத்தனை சுந்தர்.சி. அம்சங்களும் குறையாமல் கொண்டு வெளிவந்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன். பெரும்பாலான சுந்தர்.சி. படங்கள் கொடுக்கும் எண்டெர்டெயின்மென்டை இந்தப் படம் கொடுத்ததா?
மிகப் பெரும் தொழிலதிபரான நாசரின் மகள் ரம்யா கிருஷ்ணனை பிரபு காதல் திருமணம் செய்து கொள்கிறார். இது நாசருக்குப் பிடிக்காததால் இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறார். இதனால் கோபமான பிரபு, ரம்யா கிருஷ்ணன் தம்பதியினர் இனி நாசரின் வீட்டிற்கு வருவதில்லை என்ற முடிவுடன் வெளியேறிவிடுகிறார்கள். வயதான பிறகு தன் தவறை உணரும் நாசர் தனது மகள் ரம்யா கிருஷ்ணனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனை தனது பேரனான சிம்புவிடம் சொல்லி அவரை அழைத்து வர அனுப்புகிறார். தன் அத்தை ரம்யா கிருஷ்ணை எப்படியாவது சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சிம்புவும் செல்கிறார். அத்தை மகள்கள் கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ், பங்களாவில் வேலை செய்யும் ரோபோ ஷங்கர், சிம்பு அசிஸ்டன்ட் VTV கணேஷ்... இப்படி கதை முழுவதும் நாம் நினைத்தது நினைத்தபடியே இருக்கிறது, எந்த வித மாற்றமும் இல்லாமல்.

'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக்காக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுந்தர் சி. தனக்கே உண்டான பிரமாண்டத்தை அழகாகக் காட்சிப்படுத்தி படம் முழுவதும் ஆங்காங்கே இவரின் ட்ரேட் மார்க் காமெடிகளையும், காட்சிகளையும் படரச்செய்துள்ளார். காமெடிகள் சில இடங்களில் ஒர்க்கவுட் ஆனாலும் பல இடங்களில் எடுபடாமல் போகிறது. எந்த நேரமும் ஸ்க்ரீனில் நாற்பது பேர் இருக்க, பெரும்பாலான காட்சிகளை ஹீரோயிசத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்தியுள்ளார். இருந்தும் அது சிம்பு ரசிகர்களுக்கு மட்டும் பெரும் விருந்தாக அமைந்துள்ளது.
STR, கலகலப்பு கூடி, துடிப்பு, துறுதுறுப்பு, விறுவிறு ஆட்டமெல்லாம் குறைந்து ஒரு மாதிரி பக்குவமான தோற்றம் தருகிறார். அவரது முக்கிய அட்ராக்ஷனான நடனம் பாதிக்கப்பட்டுள்ளது. காரணமறிந்து சரி செய்ய வேண்டும். க்ளைமாக்ஸில் சிம்புவிற்குள்ளிருக்கும் நடிகர் சிறப்பாக வெளிப்பட்டுள்ளார். படத்தில் கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ், பிரபு, ராதாரவி, நாசர், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், மஹத், வி.டி.வி கணேஷ், விச்சு விஸ்வநாத், சுமன், ரோபோ ஷங்கர், மொட்டை ராஜேந்திரன், ராஜ் கபூர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அவரவர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருந்தாலும் மனதில் நிற்பது ரோபோ ஷங்கர், யோகிபாபு மட்டுமே. முதல் காட்சியிலிருந்தே சுந்தர்.சி படங்களுக்கே உரித்தான கலகலப்பு எதிர்பார்த்த அளவு இல்லாதது அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோபோ ஷங்கர், மொட்டை ராஜேந்திரன், வி.டி.வி.கணேஷ் மற்றும் யோகி பாபு காமெடிகள் சில இடங்களில் மட்டுமே கிச்சுகிச்சு மூட்டியுள்ளது சற்று ஏமாற்றமே.

ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் 'எனக்கா ரெட் கார்டு..." பாடல் ரகளை. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் திருவிழாக்கோலம். செல்வபாரதி எழுதியுள்ள வசனங்கள் ஆங்காங்கே சிரிப்பு வெடி, ஆங்காங்கே புஸ்வான பன்ச்கள். லாஜிக் என்பதைப் பற்றி சற்றும் கவலைப்படாத, இதற்கு முன் பல படங்களில் பார்த்துப் பழகிய சுந்தர்.சி டைப் காமெடிகள், நினைத்ததை நினைத்த இடத்தில் நடக்கச் செய்யும் நாயகன் என ஒரு பக்கம் நெகட்டிவ்களும் தன்னைத் தானே ஃபன் பண்ணும் STR, சிரிக்க வைக்கும் சில காமெடிகள் போன்ற பாசிட்டிவ்களும் கலந்த படம் இது.
'வந்தா ராஜாவாதான் வருவேன் - ராஜாதான்... ஆனால் மஹாராஜா இல்லை.