ADVERTISEMENT

முதல் பெண்... முதல் கொலை...  ஆட்டோ சங்கர் #13

11:16 PM Jul 22, 2018 | vasanthbalakrishnan

எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு அதிமுகவில் நடந்த கலவரத்தில், ஜா., ஜெ., இரு தரப்புக்கும் என் ஆதரவு தேவைப்பட்டது. எம்.எல்.ஏக்களுக்கு எல்லாமே சப்ளை செய்ததில் ஏகப்பட்ட பணம் கிடைத்தது. 30 லட்சத்தை ஐநூறு ரூபாய் கட்டுகளாக மாற்றி பத்திரமாக்கினேன். தாம்பரம் தொகுதியில் எம்.எல்.ஏ. சீட்டுக்கு போட்டியிட திட்டமிட்டேன்! அப்போது தேர்தல் செலவுக்கு இந்த பணத்தை பயன்படுத்த எண்ணம். ஆனால், வாழ்க்கை நாம் நினைக்கும் வழியில் செல்வதில்லை. திடீரென்று வலது பக்கம் கைகாட்டி, இடது பக்கம் திரும்பி, சுற்றியடித்து செல்லும் திசை மறக்கச் செய்யும். அது பைபாஸ் ரோடு அல்ல, பெரும் காடு. அது காட்டியதுதான் திசை.

லலிதா! அவளை நடனக்காரி என்று மட்டுமே அறிந்திருந்தேன். மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டர் எதிரில் இருந்த ப்பாலா (Pala) கேப்ரே அரங்கிலிருந்து ஒரு போதை ராத்திரியில் அவளை கூட்டிவந்தேன். லட்சுமிபுரத்தில் ஒரு பங்களாவில் குடியமர்த்தி, மினி வசந்த் அன் கோ, நகை நட்டு, துணி மணி, பண்ட பாத்திரம் போக விஸ்கியும், பிராந்தியும் ததும்பி வழிந்தது. வீட்டுவேலைகளை செய்ய ஒரு வேலைக்கார கிழவியை அவளுக்கு துணையாக அமர்த்தினேன்! நான் ஆசைப்பட்டு அழைத்துவந்த முதல் பெண்.

ADVERTISEMENT



ஒரு நாள் சாராயக்கடையில் இருந்தேன்... தொலைபேசி வீறிட்டது. எடுத்தேன். எதிர்முனையில் அந்த வேலைக்கார கிழவி!

"தம்பி! நீங்க உடனே இங்கே வரமுடியுமா?''

"ஏம்மா... லலிதாவுக்கு ஏதாவது சுகவீனமா?''

"ஆமாம் தம்பி! புத்தி சுகவீனம்'' என்றதும் பதறிப் போனேன்.

"எ... என்னம்மா சொல்றீங்க?''

"நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில வச்சுட்டீங்களே தம்பி! அந்த பொண்ணுக்கு புத்தி பிசகிதான் போயிருக்கணும்... இல்லைன்னா நீங்க இல்லாதப்ப அந்த போலீஸ்காரனை பெட்ரூமுக்கு வரவைச்சு...''

ADVERTISEMENT


காதுகளுக்குள் கோடி நாகங்கள் கொத்தின வலி. அடிவயிற்றில் ஒரு நெருப்பு மாநாடு. மனசுக்குள் கோபம் ப்ரேக் டான்ஸ் ஆடினது. வாழ்க்கையில் என்றைக்குமே அவ்வளவு விஸ்கி சாப்பிட்டதில்லை! அதுவும் "ராவாக'. போதையும் கோபமும் போட்டி போட்டுக் கொண்டு மூளைக்குள் ஏறிற்று. லட்சுமிபுரத்திற்கு மிதந்தேன். லலிதாவை பார்க்கப்போன போது அவளும் அளவுக்கு மீறின போதையில் இருந்தாள்.

வீட்டில் நாங்கள் ரெண்டு பேர் மட்டுமே! வீட்டிற்கு வந்த பின்னும் விஸ்கி பாட்டில்... கன்னித்தீவு சிந்துபாத் கணக்கா முடிவில்லாததாயிருந்தது குடி!வரவழைத்த நிதானத்துடன் லலிதாவிடம் விசாரித்தேன்.


"இன்ஸ்பெக்டர் தலையானமலை இங்கே வந்தானா லலிதா?''

லலிதாவின் முகம் பூரா வியர்வை அறுவடை அதிர்ச்சியை மறைக்க சிரமப்பட்டாள்.

"எ... என்ன... கே... கேட்டீங்க...?''

"ஏன் காதும் கெட்டுப் போச்சா...? தொழில் பண்ணி பண்ணி உடம்பு கெட்டுப்போன பன்னி... உனக்கு காதும் கெட்டுப் போச்சா''ன்னு கேட்டேன்.''

எச்சிலைக் கடித்து விழுங்கினாள்.

"ஆமா! நான் அதுதான்; தெரிஞ்சுதானே கூட்டி வந்தீங்க! குடிப்பழக்கம் இருக்கிறது தெரிஞ்சு விஸ்கியும் பிராந்தியும் வாங்கி வைச்சிருக்கிறது மாதிரி நாலைந்து ஆட்களையும் எனக்கு வாங்கி வைக்கிறதுதானே...?! நான் காமத்துக்கும் அடிக்ட் ஆனவ சங்கர்! குடிச்சதும் எனக்கு ஆம்பிளை வேணும்'' -சிணுங்கினாள் பலூன் கேட்கும் சிறுமி போல.

அத்தனை எண்ணங்களிலும் ஆத்திரமாகி கன்னம் நோக்கி கைவீசினேன்.

"பளார்” என பொறி கலங்கிப் போகும்படி ஒரு அறை! அவள் இன்னொரு கன்னத்தை காட்டவில்லை. அதற்காக நான் விட்டு வைக்கவுமில்லை. இன்னுமொரு பளார்!

"போலீஸ்காரனெல்லாம் என்னை கண்டா கிட்ட வராம பத்து அடி தள்ளி நின்னு பேசிட்டு மாமூல் வாங்கறானுங்க; எத்தனை ரௌடி பசங்களை அடக்கி வச்சிருக்கேன்? கேவலம் ஒரு...... , ஊர் பொறுக்கி நீ என்னடான்னா என் சோத்தை தின்னுகிட்டு என்கிட்டே இவ்வளவு திமிராவா பேசறே?''



கோபம், வெறுப்பு, போதை எல்லாம் சேர்ந்து கூட்டு சதி செய்ய அந்த நிமிடத்து அரக்கனானேன்! மறுபடி அவளது கன்னங்களில் அறை மழை! அடிபட்ட வலியும், வார்த்தைகளும் கோபமேற்ற எதிர்வார்த்தைகளை வீசினாள்… வார்த்தைகளா அவை...? ம்ஹும்! அதற்கு பதில் என் முகத்தில் காறித் துப்பியிருந்தால் கூட அப்படி அவமானப்பட்டிருக்க மாட்டேன். எது எனது மிகப்பெரிய பலவீனமோ எந்த அவலத்தை ஊமைக்காயமாக சுமந்து கொண்டிருந்தானோ அதை குத்தி ரத்தமும் சீழுமாக வெளியே கொண்டுவந்ததும், அதுவும் அந்த வகைப் பெண்ணே அந்த கைங்கரியத்தை செய்ததும் நொறுங்கிப் போனது பழைய மனசு.

"என்னடி சொன்னே?'' விஸ்வாமித்திர கோபத்துடன் அவளை நெருங்கினேன். கோபத்தில் பற்கள் கடிபட்டது. துரோகம் செய்ததுமல்லாமல் இந்த திட்டு திட்டுகிறாளே, அதுவும் சப்தத்துடன்! அக்கம்பக்கம் கேட்டால் மரியாதை என்னாவது?


"வாயை மூடுறி, முதல்ல!'' -பற்கள் நறநறத்தன!

"என் வாயை ஏண்டா கிளறினே...? இப்ப மூடணுமாமில்ல! உன் வண்டவாளத்தை வெளியே சொல்லாம வாயை மூடமாட்டேன்!''

"மூடமாட்டே?'' - மேலும் கிட்டத்தில் நெருங்கி... உஷ்ணக்காற்று என் முகத்தில் பட்டது. விரல்களை மடக்கி குவித்து வாயை குறிவைத்து ஆக்ரோஷமாக ஒரு குத்து...


பேசுகிற வாயை வெற்றிலை பாக்கு போட வைத்தால் அப்புறம் பேசுவாளா என்று எண்ணியதால் வாய் நோக்கி தாக்கினேன். லலிதாவுக்கு போதாத நேரம். தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக அவள் திமிற, அந்த குத்து விமான வேகத்துடன் தொண்டையைத் தாக்கினது. 'கர் கர்' என்று தொண்டையை அடைத்துக்கொண்டதைப் போல அவளிடமிருந்து சப்தம் வந்தது. கை, கால்கள் வலிப்பு வந்த மாதிரி உதறிக்கொண்டன. உள்ளுக்குள் மூச்சுக் காற்றை இழுத்துப் பிடிக்க நுரையீரல் உன்னதமாய் போராடினது.

என்னை வெறித்துப் பார்த்தபடி லலிதா சரியத் தொடங்கினாள். அவளுடன் என்னுடைய வாழ்க்கையும் சரிய ஆரம்பித்தது அப்போதுதான் என்பது எனக்குத் தெரியாது.

குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும் புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை.

முந்தைய பகுதி...

ஜெயலலிதாவுக்கும் எனக்கும் அடித்த பம்பர் பரிசு! - ஆட்டோ சங்கர் #12

அடுத்த பகுதி...

குழி தோண்டிப் புதைத்து... சிமெண்ட் பூசி மறைத்து... ஆட்டோ சங்கர் #14

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT