Skip to main content

துரோகிக்கு என் தண்டனை என்ன தெரியுமா? ஆட்டோ சங்கர் #17

auto sankar 17 title

 

சில வருஷங்கள் கழித்து மிக தற்செயலாக மறுபடி தேவியை மவுண்ட் ரோட்டில் சந்தித்தேன். இதயத்தை ஒரு டஜன் இடி ஒரே சமயம் தாக்கியது. ஆடிப்போனேன். அவள் தேக்கி வைத்திருந்த அழகும் இளமையும் அதற்குள் எங்கே போயிற்று? ஐஸ்வர்யாராய் வயதில் ஔவையார் தோற்றம் தருகிறாளே ஏன்?

கதறி அழுதாள் அந்தப் பெண். தனது ப்ளாஷ்பேக்கை கதை கதையாக சொன்னாள். அந்த கோடம்பாக்க கேசவனுக்குக் கல்யாணம் என்பது தினசரி அலுவலாம். ஒவ்வொரு பெண்ணாகக் கட்டிக்கொண்டு அலுத்து சலித்ததும் பம்பாயில் விற்றுப் பணம் பார்த்து விடுவானாம்.

தேவியும் அப்படித்தான் விற்கப்பட்டாள். அங்கே "ஒர்க்லோடு' ஜாஸ்தி. கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லைதான்... மற்ற விஷயத்தில்! ஆனால், அவளது உத்தியோகத்தில்...? வீ.டி.யாக விஸ்வரூபம் எடுத்தது... எந்த வைத்தியத்துக்கும் வசியப்படாததால் பம்பாய் இவளை ரயிலேற்றிவிட்டது. கண்ணைக் கசக்கினாள். அதோடு என் மனசை கசக்கினாள்.
"சரி... இனிமே என்ன செய்யப்போறே?''

"தெரியலைங்க...''

"நீ எதுவும் செய்ய வேணாம்... தனியா ஒரு வீடு பார்த்து குடிவைக்கிறேன்... டாக்டரையும் அனுப்பறேன்.... கவலைப்படாம இரு.''

கண்கலங்க  அந்தப் பெண் நன்றியுடன் கை தொழுதது. இத்தனை இழி நிலையில் கூட தனக்கு ஒருவன் சோறு போட்டு காப்பாற்ற சம்மதிக்கிறானே என அவளுக்கு ஆச்சரியம். வாழ்வில், இதைவிடவும் ஆச்சரியமெல்லாம் காத்திருக்கிறது. நாம் பிச்சையெடுத்து, இந்த பணக்காரனுக்கு பின்னால் சோறு போட வேண்டிய தினமெல்லாம் வரும் என அப்போது அவள் நினைத்திருக்கமாட்டாள்.

 

auto sankar 17-2இன்னொரு புறம்...

என்னிடம் இருந்த பெண்களிலேயே அழகியான உபத்திராவை தன்னோடு கூட்டிக்கொண்டு ஓடிய சுடலை இருக்குமிடம் தெரிந்தது. நானே அங்கு கஸ்டமர் போல போனேன். என்னைப் பார்த்த அவன் அதிர்ச்சியடைந்தான். புதுமணப்பெண் போல தலைகுனிந்தான்.

"செய்றது ப்ராத்தல்னாலும் தொழில்ல ஒரு நேர்மை வேணாமாடா நாயே?"

அவனிடம் பதிலில்லை. மன்னிப்புக் கேட்க வாய் திறந்தான். "எதுவும் பேசாம ஏறுடா வண்டியில" என்றேன். ஸ்கூட்டரை நான் ஓட்ட பின்னே அவன். வழியில் சிக்னலில் வண்டி நிற்க நொடியில் வண்டியிலிருந்து இறங்கி ஓடி, பல்லவன் பஸ்ஸில் ஏறி மறைந்தான். பாவம் அவன் நினைக்கவில்லை, அவன் மனைவி உபத்திரா இருக்குமிடத்தையும் தெரிந்துகொண்டுதான் நான் வந்தேன் என்று.

கையில் சிக்கியும் எஸ்கேப் ஆகிவிட்டான். ஆனால்,   உபத்திராவை   பகடையாக்கியதில், சுடலை தானாய் எனக்கு ஃபோன் செய்தான். உபத்திராவை வீட்டுக்கு அனுப்பினேன். "அவரை மன்னிச்சுடுங்கண்ணே" என்று கெஞ்சினாள். "அவனை நான் மன்னிச்சா என்னை இங்க இருக்கவங்க மன்னிக்க மாட்டாங்களே... அப்புறம் கூட்டத்துல அவன் அவன் 'தப்பு பண்ணுனாலும் அண்ணன் மன்னிச்சுருவாரு'ன்னு நினைச்சு ஆட ஆரம்பிச்சுருவான். ஆறு மாசமாவது அவனை ஆஸ்பத்திரியில் படுக்க வச்சாதான் என் மனசு ஆறும். அவனை உயிரோட விடுறேன். அவ்வளவுதான் உனக்கு நான் செய்ய முடியும்", அவள் பதிலை எதிர்பார்க்காமல் அனுப்பிவிட்டேன்.

சுடலை   இருக்கும் இடம் தெரிந்துவிட்டதாக கையாட்களிடம் பரபரத்தேன்.

"என்னண்ணே சொல்றீங்க! அந்த துரோகி இருக்கிற இடம் தெரிஞ்சு போச்சா... சொல்லுங்க! எங்கே இருக்கான்... இப்பவே போய் கொத்துக்கறி போட்டுறுவோம்...''

"சரி புறப்படு'' என்றேன்.

"ம்ஹும்! நீங்க அங்கே வரவேணாம். நாங்க பாத்துக்கறோம்.''

"சரி... நான் வரலை! ஆனா நான் சொல்றதைக் கேளு... யாரும் அவனை அடிக்க வேணாம். ரெண்டு கைகளையும் கட்டி கைவிரல்களில் பத்துவிரலுக்கும் மொத்தமா துணி சுற்றி கிருஷ்ணாயில் ஊற்றி கையைமட்டும் கொளுத்திவிடு பாபு... இதைத் தவிர அவன் மேலே உன்னோட விரல்கூட படக்கூடாது! சரிதானா? அதுமட்டுமில்லை. கொளுத்துறதுக்கு முன்னாலே நான் அவன்கிட்டே ஃபோன்ல பேசணும். அவனைப் பேசச் சொல்லுங்க.''

ஆட்டோ புகை கக்கினபடியே புறப்பட்டுப் போனது. பாபுவைப் பார்த்ததுமே பேயறைந்தாற் போல் ஆனான் சுடலை. ஒன்றுக்கு முட்டிக்கொண்டு நெருக்கினது. "சங்கரண்ணன் வரலையா?'' என்றான் பலவீனமாக.

 

auto sankar 17-3பாபு முகத்தில் விஷச் சிரிப்பு! சுடலையைத் தன் ஆட்கள் சூழ வண்டியில் ஏற்றிக் கொண்டான்.

"சங்கரண்ணன் வரமாட்டாரா பாபு?'' -கேட்ட சுடலையை நோக்கி முஷ்டியை வீசினான் பாபு. தாடையில் வெடித்தது. உதட்டோரம் ரத்த நூல் தொங்கிய வாயுடன் கூப்பாடு போட்டான் சுடலை. உடம்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் தாக்குதல் நடந்தது. கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.

"சங்கரண்ணன் இப்படியெல்லாம் அடிக்கச் சொன்னாரா பாபு?'' -முக்கலும் முனகலுமாய் வேதனையுடன் கேட்டான்.

"அடப் போடா... நீ மன்னிப்பு கேட்டமாதிரி நானும் கேட்டுட்டுப் போறேன்! துரோகம் பண்ணிப்பிட்டு கேள்வி வேறயாடா மவனே!''

 

auto sankar ad


பற்களைக் கடித்தபடி காலை மடக்கி முழங்கால்களால், சுடலையின் ரெண்டு கால்களுக்கும் இடைப்பட்ட உறுப்பில் உக்கிரமாகத் தாக்கினான். படாத இடத்தில் பட்ட அடி! போக உறுப்பில் பிசகாய் விழுந்த தாக்குதல்!

அதிபயங்கரமான வலியை வெளிப்படுத்த நினைத்த சுடலை, வாயைத்திறந்த அடுத்த செகண்ட் விறைத்துப்போய் நின்றான். கண்கள் நிலைகுத்தினது. சப்தமில்லாமல் செத்துப் போனான்.

குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும்  புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை. 

முந்தைய பகுதி:

உன்கிட்ட கொடுக்குறேன், தலைவரிடம் கறந்துக்கிறேன்... முடிவோடு வந்த நடிகை! - ஆட்டோசங்கர் #16   
 

அடுத்த பகுதி:

உபத்திராவுக்குக் கொடுத்த வாக்கு... ஆட்டோ சங்கர் #18

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்