Skip to main content

சப் இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்த சாராய வியாபாரம்... ஆட்டோ சங்கர்  #5  

Published on 25/05/2018 | Edited on 01/06/2018
street fight



ஜெகதி ஆச்சரியத்தில் வாய் பொளந்தா!

"இத்தனையும் வாங்க ஏது பணம்?''

யார் கிட்டேயோ கடன் வாங்கினதா பொய் சொன்னேன்!

பலநாள் பட்டினி கிடந்த பொண்டாட்டி, பிள்ளைங்க வயிறார சாப்பிடுவது பார்த்து எனக்குக் கண்ணீர் ததும்பிச்சு.

புயல் மழையெல்லாம் ஓய்ஞ்சு வெயில் வரவரைக்கும் கடைவீதியிலே மாமூல் கேட்கறதுதான் வழின்னு தீர்மானிச்சேன். வேலைக்குப் போறதா வீட்டிலே பொய் சொல்லிட்டு கடைவீதி போவேன். ஒருநாள் விட்டு ஒருநாள் ஒவ்வொரு கடையிலும் மாமூல் கேட்பேன். தர மறுத்தால் கடை பெஞ்சிலே இருக்கிற இரு பிஸ்கட் பாட்டிலை மட்டும் கீழே போட்டு உடைக்கிறது.  அரண்டு போய் பத்து, இருபதுன்னு மாமூல் நீட்டுவாங்க. வசூலான பணத்தையெல்லாம் நாடார்கிட்டேயே கொடுத்து வச்சு வாரக்கடைசியிலே மொத்தமா வாங்கிப்பேன்.

நான் இருந்த இந்திரா நகருக்கும் பக்கத்திலே இருந்த தரமணிக்கும் அப்ப பெரிசா ஊர் சண்டை வந்தது. எங்க ஏரியாவிலே நான் வஸ்தாதா இருந்ததாலே இங்கே 'ராணுவ'ப்பொறுப்பு (!) எனக்கு வந்தது.

அடுத்த ஊர் ரௌடிகளைச் சமாளிச்சாதான் சொந்த ஊர்லே "தாதா' பதவி நீடிக்கும். இல்லையானா செல்லாக்காசு! 

எங்க பகுதியிலேயே பத்து, பதினைந்து சில்லறை தாதாக்களை துணைக்கு சேர்த்துகிட்டு தாக்குதல்லே இறங்கினேன். ரெண்டு கோஷ்டிக்குமான சண்டை படுபயங்கரமா வளர்ந்துச்சு. போலீஸ் என்னைத் தேட ஆரம்பிச்சது.

 

street fight



ஒருநாள் இந்திராநகர் பஸ் ஸ்டாண்டிலே நான் க்ரூப்போட உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தப்ப ஒரு போலீஸ்காரர்   சைக்கிள்ளே வேகமா வந்து என்கிட்ட நிறுத்தினார்! போலீஸைப் பார்த்ததும் என் சீடர்கள் எல்லாரும் சிட்டாப் பறந்துட்டாங்க!நான் ஓடல. ஓடறதா வேணாமான்னு யோசிச்சிக்கிட்டே இருக்கிறப்ப, அவர் கிட்ட வந்தார். ஒருமாதிரி தில்லா எழுந்து நின்னு அவரைப்பார்த்தேன், கைலியைத் தூக்கிகட்டிக்கிட்டே...!என் கை காலெல்லாம் சிலிர்த்துச்சு!

போலீஸ்காரரைப் பக்கத்திலே பார்த்ததும்தான் தெரிஞ்சது... என்னை நாடார்   கடையிலே உரிச்சு உப்புகண்டம் போட்டாரே... அதே போலீஸ்காரர். எனக்கு ஆத்திரத்திலே கண்ணெல்லாம் சிவந்தது. கையிலே நடுக்கம்.

அவர் என்ன நினைச்சாரோ, என்கிட்டே சமாதானமா பேச ஆரம்பிச்சார்.

"சப்-இன்ஸ்பெக்டர் உன்னிடம் ஒரு விஷயம் பேசச்சொன்னார். வா, அப்படிப்போய் பேசலாம்!''

பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலே இருந்த டீக்கடைக்குப் போனோம்.

"சங்கர்...! நீ இப்படி ரௌடியா இருந்து மாமூல் கேட்டு சம்பாதிக்கிறதைவிட, அதிகமா சம்பாதிக்கலாம்...     சாராயம் வித்தா! அப்படியே எங்களையும் கவனிச்சுக்கலாமில்ல.. "அய்யா' இதை உன் காதிலே போடச்சொன்னாரு''

எனக்கு "திக்'குன்னு ஆயிடுச்சு. சாராயம் விற்கிறதா? அதற்கெல்லாம் எவ்வளவு முதலீடு வேணும்? ஆளு படை வேணும்?

 

 


"யோசிக்காதே சங்கர்! ரௌடித் தொழிலையும் நீ வீட்டுரலாம். வருமானமும் அதிகரிக்கும். இருபத்தஞ்சு ரூபா முதல்   இருந்தா போதும்! 19பி பஸ் பிடிச்சு நாவலூர் போ. அங்கே டில்லின்றவர் சாராயம் விற்கிறாரு. அவர் கிட்டே நான்   அனுப்பினதா சொல்லு! என் பேரு சுகுமார், டில்லி நல்ல சரக்கா கொடுப்பாரு... எடுத்துக்கிட்டு வந்து வியாபாரம்  தொடங்கு. ரிக்ஷாகாரங்க... கூலி வேலை செய்றவங்க எல்லார்கிட்டயும் முதல்லேயே சொல்லிடு. ஜெயந்தி தியேட்டர்   பின்பக்கம் முட்புதர்லே வியாபாரத்தைத் தொடங்கு... என்ன சொல்றே....?''

நான் சம்மதம் சொல்லாம இருக்கவும், "சாயங்காலம் நீ ஸ்டேஷன் வந்து அய்யாவைப் பாரு'' என்றார். சாயங்காலம் 'அய்யா' ரவுண்ட்ஸ் புறப்படத் தயாரா இருந்தார். என்னைப்பார்த்ததும் ஸ்டேஷனுக்குள்ளே தனியா கூட்டிப்போனார்.

 

 


"என்ன... பிசினஸ் என்னிக்கு ஸ்டார்ட் பண்ணப்போறே?''

"இ...இல்ல ஸார்! நான் அதெல்லாம் செய்யணுமான்னு யோசிக்கிறேன்''னேன்.

அவருக்கு முகம் இறுகிச்சு.

"சங்கர்! நீ எனக்குத் தோதா இருப்பேன்னு நம்பித்தான் இதுவரைக்கும் உன்னை கைது பண்ணல. புரியுதா? போலீஸ்   அடியைப் பார்த்ததில்லையே நீ...!''

"கொஞ்சம் யோசிக்க டயம் கொடுங்க ஸார்.''

"இருபத்தஞ்சு ரூபா மட்டும் இன்வெஸ்ட் பண்ணு. குபேரனாயிடலாம்! நீ மாமூல் வாங்கின பணத்திலேருந்து இருபத்தஞ்சு  ரூபாய் பணம் கொண்டு வந்துடாதே! உழைச்ச பணமா இருக்கட்டும்.''

 

 

arrack



யோசிச்சுப் பார்த்தேன். தெரிஞ்சோ தெரியாமலோ ரௌடி வேடம் போட்டாச்சு. இனி நீடிச்சுதான் ஆகணும். போலீஸ்  மொத்தமும் என்னைப் பழிவாங்கணும்னு கிளம்பினா சமாளிக்க முடியாது. பேச்சை மறுத்தா நிச்சயம் பழிவாங்குவாங்க! இவங்களுக்கு கேஸுக்கு ஆள் கிடைக்காதப்ப எல்லாம் என்னை சந்தேகக்கேஸ்ல கொண்டுவந்துடுவாங்க. வீடு  முச்சந்திக்கு வந்துடும். என்கிட்டே எதிர்க்க பலம் இல்லே!

ஜெகதியோட மூக்குத்தியை அடமானம் வச்சு பணம் புரட்டினேன். மூக்குத்தி உழைச்ச பணத்துல வாங்கினது! டில்லிக்கிட்டேயிருந்து சரக்கை வாங்கி வந்தாச்சு. முதல் நாள் விற்பனைக்கு ஆயத்தமானேன். என்னைச்சுற்றிலும் போலீஸ் பட்டாளம்! சப்-இன்ஸ்பெக்டர் அவர் கையாலே ஊதுபத்தி ஏத்தி வியாபாரத்தைத் தொடங்கிவச்சார்!


 முந்தைய பகுதி:

'ஆட்டோ சங்கர்' உருவான நிமிஷம்! ஆட்டோ சங்கர் #4
 

அடுத்த பகுதி:

சாராயத்தோடு செக்ரட்டேரியட்டுக்குப் போன கதை! - ஆட்டோ சங்கர் #6