ADVERTISEMENT

"விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள்... ஆனால், விவசாய சட்டத்தை பற்றி பேசக் கூடாது என்கிறார்கள்.." - முத்தரசன் தாக்கு!

04:08 PM Oct 09, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய கருப்புக் கொடி போராட்டத்தின்போது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் மோதி நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை ஒன்பது பேர் இறந்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் மத்தியப் படை பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், பதற்றம் குறையாமல் இருந்துவருகிறது. இதனால் அதிகாரத்தில் இருக்கும் மத்திய, மாநில அமைச்சர்கள் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. குறிப்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில முதல்வர் என யாரும் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் வைத்துவரும் சூழ்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் முத்தரசனிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவர் அளித்த அதிரடியான பதில்கள் வருமாறு,

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் கட்சியினர் இருக்கிறார்கள் என்று பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கிடையே லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏறியதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தபோதே விவசாயிகள் அனைவரும் எதிர்த்தனர். எந்த ஒரு சட்டமாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முழு விவாதம் செய்து, அதன்பிறகே நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்தச் சட்டம் தொடர்பாக எந்த ஒரு விவாதத்தையும் நடத்தாமல் தங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி இதை நிறைவேற்றியுள்ளனர். அப்படியிருந்தும் இந்த சட்டத்தில் கையெழுத்திடாதீர்கள் என்று எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்கள். இருந்தாலும் அதில் அவர் கையெழுத்துப்போட்டார். தற்போது மத்திய அரசு சட்டத்தை அமல்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அது சட்டமாகிவிட்டது.

விவசாயிகளும் அவர்களால் முடிந்த அளவு எதிர்த்து பார்த்தார்கள். இந்தப் போராட்டத்தை அரசியல் கட்சியினர் தூண்டிவிட்டதாக மத்திய அரசு முதலில் கூறியது. பிறகு அகாலிதள தீவிரவாதிகள் போராடுகிறார்கள் என்று அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்தது. எதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதால், அதனை தற்போது அவர்கள் கூறுவதில்லை. அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக கூறுகிறீர்கள். விவசாயிகள் அவர்களிடம் 11 சுற்று பேசினார்கள், அது ஏன் தோல்வி அடைந்தது. ஏனென்றால் விவசாய சட்டத்தை தவிர விவசாயிகளை வேறு விஷயங்கள் பற்றி பேச சொல்கிறார்கள், இதற்கு பேர் பேச்சுவர்த்தையா? பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை மத்திய அரசு ஏமாற்றலாம் என்று நினைத்து அவர்கள்தான் ஏமாந்து போகப்போகிறார்கள்.

இன்றைக்கு அமைதியான முறையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் உ.பி.யில் போராடினார்கள். அங்கே இவர்கள் வன்முறை வெறியாட்டத்தை ஆடியுள்ளார்கள். சுதந்திரத்துக்கு முன்பு ஜாலியன் வாலாபாக்கில் ஆங்கிலேயர்கள், அடைக்கப்பட்ட இடத்தில் இந்தியர்கள் மீது மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தை ஆடினார்கள். அந்த சம்பவத்துக்கு சிறிதும் குறைவில்லாதது இந்த சம்பவம். அமைதியாக சென்றுகொண்டிருப்பவர்களை வேண்டுமென்றே இவர்கள் தாக்கியுள்ளனர். சட்டத்தில் எங்கேயாவது அமைதியான முறையில் போராடக்கூடாது என்று கூறியிருக்கிறதா? காட்டாட்சி தர்பார் நடத்தலாம் என்று இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருபோதும் மற்ற கட்சிகள் இதனை அனுமதிக்காது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT