Skip to main content

"நீட் தேர்வு தொடர்பான வழக்கு கூட நீதிமன்றத்தில் இருக்கிறது... நீட் தேர்வை நடத்தாமலா போய்விட்டார்கள்.." - சூர்யா சேவியர் தடாலடி!

 

hjk


உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய கருப்புக் கொடி போராட்டத்தின் போது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் மோதி நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை  ஒன்பது பேர் இறந்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் மத்தியப் படை பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், பதற்றம் குறையாமல் இருந்து வருகிறது. இதனால் அதிகாரத்தில் இருக்கும் மத்திய, மாநில அமைச்சர்கள் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. குறிப்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில முதல்வர் என யாரும் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை எதிர்கட்சியினர் வைத்து வரும் சூழ்நிலையில் இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் சூரியா சேவியர் அவர்களிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில் பின்வருமாறு, 

 

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏற்றியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் இதுவரை ஒன்பது  பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை உ.பி அரசுக்கு எதிராக தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக இதுவரை பாஜகவைச் சேர்ந்த யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

நல்லவேளை இவர்கள் இரங்கல் தெரிவிக்கவில்லை, நிச்சயம் விவசாயிகள் ஆத்மா சாந்தியடையும். இவர்கள் அனைவரும் கூட்டு களவாணிகள். எனவே இவர்களிடம் இரங்கலை எதிர்பார்ப்பதை விட ஒரு முட்டாள்தனம் வேறெதுவுமில்லை. கொலையாளிகளிடம் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று நாம் கேட்பது கூட தவறுதான். டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களை பிரதமர் மோடி சந்திக்கவில்லை. ஆனால் கவுதமியை சந்திக்க அவருக்கு நேரம் இருக்கிறது. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இந்த ஏழாண்டு காலத்தில் ஒருமுறை கூட பத்திரிக்கையாளரைச் சந்திக்க அவருக்கு நேரமில்லை, நாடுநாடாகச் சென்று குடை பிடித்து போஸ் கொடுக்க முடிகிறது. வெட்கமாக இருக்கிறது இதை எல்லாம் பார்ப்பதற்கு, இதற்கு எப்போது விடிவுகாலம் வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறோம். 

 

அங்கே விவசாயிகள் தங்களின் நிலம் பறிபோய் விடும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை முரட்டுத் தனமாகத் தாக்குகிறார்கள். அவர்களுக்காக யார் வரப் போகிறார்கள் என்ற அலட்சியம் இவர்களை இந்த அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தியாவில் இத்தனை கோடி நிலம் இருக்கிறது, ஆனால் கோடிக்கணக்கான பேருக்கு இருக்க இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த அரசு இதுவரை எதாவது செய்திருக்கிறதா என்றால் அப்படி எதுவும் செய்யவில்லை. இன்றைக்கும் உ.பி, பீகார் உள்ளிட்ட இடங்களில் மக்கள் முயல் வசிக்கும் கூட்டை போல சிறிய இடத்தில் வசித்து வருகிறார்கள். அங்கே தமிழ்நாட்டை போல் பெரியார் பிறக்கவில்லை. அதனால் அவர்களுக்கு நாம் அடைந்த உரிமைகள் இன்றளவும் கிடைக்கவில்லை. எனவே நாம் அவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். 

 

மற்றொரு முதல்வர் விவசாயிகளைக் கட்டையால் அடிக்க வேண்டும் என்று கூறுகிறார். அவரை நாம் அடிக்கலாமா? விவசாயிகள் மீது வண்டியேற்றியவரை நாம் தாக்கினால் சும்மா இருப்பார்களா? அவர்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம் என்றால் இது என்ன மாதிரியான ஜனநாயக நாடு என்ற கேள்வி எழுகிறது. ஆகையால் இவர்கள் திருந்த வேண்டும், இல்லை திருத்தப்பட வேண்டும். இது இரண்டில் ஒன்று நடந்தால் தான் விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நல்லது நடக்கும். நீதிமன்றத்தில் உள்ள பிரச்சனைகளைப் பேசக்கூடாது என்று தொடர்ந்து ஒரு பிரிவினர் கூறுகிறார்கள். அப்படி என்றால் நீட் தேர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது எதற்காகத் தேர்வைக் கட்டாயப்படுத்தி நடத்துகிறீர்கள். இதற்கு அவர்களிடம் பதில் இருக்கிறதா? வாயை மூடி அமைதியாக கடந்து சென்றுவிடுவார்கள்.