ADVERTISEMENT

எம்.ஜி.ஆரின் ஆசி எப்பவுமே உண்டு! - புன்னகைத்த சசிகலா! வியந்துபோன தீபக்!

05:33 PM Feb 18, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெங்களூரில் இருந்தபோதும் சென்னையிலும் செல்போனில் ஆக்டிவ்வாக இருக்கிறார் சசிகலா. எடப்பாடியோ, சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் சேர்க்க முடியாது. அவர்களுக்கு அ.தி.மு.க. என்றும் அடிபணியாது எனப் பிரச்சாரம் செய்து பேட்டியும் அளிக்கிறார். சசிகலாவுக்கும் எடப்பாடிக்கும் நடக்கும் அரசியல் மேட்ச்சில் அம்பயராக செயல்படுகிறது பா.ஜ.க.

கடந்த 8ஆம் தேதி பெங்களூருவில் சென்னைக்கு நடத்திய மிகப்பெரிய ரோட்ஷோ அ.தி.மு.க.வை பெரிய அளவுக்கு அலற வைத்தது. ஆனாலும், எடப்பாடி தொடர்ந்து எகிறி அடிப்பதற்கு காரணம், மத்திய பா.ஜ.க அரசின் ஆதரவுதான் என அ.தி.மு.கவினர் நம்புகிறார்கள். குற்ற வழக்கில் தண்டனை சிறைவாசியாகக் காலம் கழித்து வெளியே வந்த சசிகலாவுக்கு எதிராக பா.ஜ.க.வின் தமிழக தலைவர்களோ, அகில இந்திய தலைவர்களோ யாரும் வாய் திறக்கவில்லை. அதற்கு மாறாக பா.ஜ.க.வின் மூத்த தலைவரான முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை வந்தபோது நள்ளிரவு வரை தொண்டர்கள் காத்திருந்து அவருக்கு வரவேற்பு அளித்த விதம் அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். பெற்ற வரவேற்பை நினைவுபடுத்துகிறது என்று பேட்டியளித்தார். பா.ஜ.க. எடப்பாடி பக்கமா, சசி பக்கமா என்கிற குழப்பம் அ.தி.மு.கவினருக்கு ஏற்பட்டது.

இதுபற்றி நம்மிடம் பேசும் சசிகலா உறவினர்கள், பா.ஜ.க.வுடனான சசிகலா தொடர்பு நீடிக்கிறது. இதில் சசிகலா தனது சொந்த பந்தங்கள் யாரையும் நம்பவில்லை. அவ்வப்போது டிடிவி தினகரன் பா.ஜ.க.வின் தலைவர்களோடு பேசி வந்தாலும், சசிகலா நேரடியாக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் மூலம் ராஜ்நாத்சிங்கிடமும், அமித்ஷாவிடமும் பேசி வருகிறார். அவர்களது அட்வைஸ்படிதான் சசிகலா நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

கர்நாடகாவில் நடப்பது பா.ஜ.க அரசு. அதனால், பெங்களூருவில் இருந்து மரியாதையாக அ.தி.மு.க. கொடியுடன் அவரை பா.ஜ.க. அனுப்பிவைத்தது. சசிகலாவுக்கு ஆதரவு அளிக்காவிட்டால் அடுத்த நிமிடமே பா.ஜ.க.வுக்கு எதிராக சசிகலா திரும்புவார் என்பது மேலிடத்திற்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் பா.ஜ.க., அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள். திமுக வெற்றிபெறுவதை தடுத்து நிறுத்துங்கள் என ஒற்றை வரி அட்வைஸை சசிகலாவுக்கும் எடப்பாடிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அளித்திருக்கிறது.

அந்த அட்வைஸ்படிதான் அனைவரும் பொது எதிரி தி.மு.க.தான் என்றும், தீயசக்தி தி.மு.க. வருவதை தடுப்போம் எனச் சொல்கிறார்கள். எடப்பாடி ஒருபடி மேலேபோய், "எங்களைப் பற்றி தினகரன் என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும். தீயசக்தி தி.மு.க. ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்போம்'' என்றார். அவரைப் பொறுத்தவரை, தி.மு.க.வைவிட இப்போதைக்கு அவருக்கு தீயசக்தி சசியும் தினகரனும்தான்.

சசிகலாவால் முதல்வரான எடப்பாடி அவர் விருப்பப்படும்போதெல்லாம் அ.தி.மு.க. எம்எல்ஏக்களுக்கு கோடிகளில் கொட்டிக்கொடுப்பார். அதன் கடைசி நேர பேமண்டை இப்போது நிறுத்திவைத்துள்ளார். மந்திரிகளிடமும் கட்சிக் காரர்களிடமும் பேசும்போது இதுவரை நீங்கள் சுதந்திரமாக இருந்தீர்கள். நீங்கள் சம்பாதித்ததை யாரும் கேள்விகேட்க வில்லை. இந்த நிலை தொடரவேண்டுமா? அல்லது சசிகலாவின் சொந்தபந்தங்களுக்கு பயந்து அவர்களுக்கு அடிமையாக இருக்கும் நிலை வரவேண்டுமா? என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சை தொடர்ந்து பேசிவருகிறார்.

எடப்பாடியை பொறுத்தவரை சசிகலாவுடனான இந்த சண்டையில், விட்டுக்கொடுக்க அவர் விரும்பவில்லை. துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை கூப்பிட்டு, "நீங்கள் சசிகலா ஆதரவு நிலையை எடுப்பது போலத் தெரிகிறது. இன்று கட்சி நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாளை தேர்தலில் நாம் தோற்றாலும் கட்சி நமது கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும். அதில் நீங்கள் பெரியவரா? நான் பெரியவனா? என்கிற சண்டையைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்'' எனச் சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பதிலளித்த ஓ.பி.எஸ்., "உங்களுக்கு பணிந்துபோனால் நீங்கள் முதுகில் குத்துகிறீர்கள்'' என எடப்பாடியிடம் தெரிவித்திருக்கிறார். எனினும், ஒருங்கிணைப்பாளர் என்ற அதிகாரத்தைக் கொண்டுள்ள ஓ.பி.எஸ். அதனை இழக்கத் தயாராக இல்லை. இந்தச் சண்டையில் எது வந்தாலும் வரட்டும் என ஜெயலலிதா ஏ1 குற்றவாளியான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.வுக்கு எதிராக நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பை அமல்படுத்தும் வேலையில் எடப்பாடி இறங்கிவிட்டார்.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை அரசாங்க சொத்துகளாக மாற்ற உத்தரவிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடங்கிய இந்தச் சொத்துப் பறிமுதல் திருவாரூர் வரை நீண்டிருக்கிறது. அடுத்ததாக கொடநாடு டீ எஸ்டேட், சிறுதாவூர் பங்களா, ஐதராபாத் திராட்சைத் தோட்டம் என பொதுமக்களுக்கு நன்கு தெரிந்த, சசி வகையறாக்களுக்கு சம்பந்தமுள்ள ஜெ.வின் சொத்துகள் மீதும் அடுத்த கட்டமாக கைவைக்கத் தயாராகிவிட்டார் எடப்பாடி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சசிகலா, ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கை வரவழைத்து மூன்று மணி நேரம் பேசியிருக்கிறார். சென்னை தி.நகரில் சசிகலாவுக்கு எனக் கட்டப்பட்டுள்ள புதிய வீட்டின் வரவேற்பு அறையில் நடந்த இந்தச் சந்திப்பில் அந்த வரவேற்பறை அப்படியே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு வரவேற்பறை போல வடிவமைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து தீபக் வியந்துபோனார்.

தீபக் மூலம் அவரது சகோதரி தீபாவை கையில் எடுத்து, எங்களது பூர்வீகச் சொத்தான போயஸ் கார்டனை அபகரிக்கப் பார்க்கிறார் எடப்பாடி என்கிற பிரச்சாரத்தை முன்னெடுக்க முயற்சி செய்துவருகிறார். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தீபக் போட்ட வழக்கின் அடிப்படையில் அதை நினைவகமாக மாற்றுவதற்குத் தடை விதித்த நிலையில் அந்தச் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து எடப்பாடிக்கு சசிகலா செக் வைக்கிறார்.

இதுபற்றி கேள்விப்பட்ட எடப்பாடி, இந்த நிலை வருவதற்கு காரணம் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர்தான். கட்சி நிதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட கோடிகளை தீபக்கிற்கும், தீபாவிற்கும் கொடுத்திருந்தால் அவர்கள் இன்று சசிகலா பக்கம் சென்றிருக்க மாட்டார்கள் என மூவரையும் திட்டித் தீர்த்திருக்கிறார்.

அடுத்தது சசிகலா கைவைத்தது எடப்பாடிக்கு மிக நெருக்கமாக இருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியைத்தான். சசிகலாவுக்கு எதிராக டி.ஜி.பி.யிடம் புகார் கொடுக்க வேலுமணி வருவதாக இருந்தது. இரண்டு முறை புகார் கொடுக்கப்பட்டபோதும் வேலுமணி அங்கு வரவில்லை. அதேபோல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கும் வேலுமணி வரவில்லை. அவரிடம் சசிகலாவின் உறவினர் ராவணன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

ஈஷா ஜக்கி வாசுதேவ்வின் ஆதரவுடன் நடைபெற்ற வேலுமணி - சசிகலா பேச்சுவார்த்தையில் ஜக்கி வாசுதேவ், சசிகலாவுக்கு பா.ஜ.க.வின் ஆதரவை பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளார். அதற்கு கைமாறாக வேலுமணியை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என ஜக்கி வாசுதேவ் தெரிவித்திருக்கிறார். வேலுமணியும் எடப்பாடிக்கு எதிராக என்னை முதல்வர் வேட்பாளராக்கினால் ஒட்டுமொத்த கட்சியையும் நான் கொண்டுவந்து தருவேன். உங்களைப் பொதுச்செயலாளராக்குவேன். அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் செலவழிப்பேன் என்று சொல்ல, சசிகலா ஆகட்டும் பார்க்கலாம் என்று வழிமொழிந்திருக்கிறார்.

இந்த நிலையில் தே.மு.தி.க தரப்பில் பிரேமலதா, சசிகலாவை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்க, வாருங்கள் என அழைத்திருக்கிறார் சசிகலா. பாமகவைச் சேர்ந்த அன்புமணியிடம் தினகரன், "என்ன டாக்டர் ராமதாஸ் தெருக்கூத்து என சசிகலாவின் வரவேற்பு நிகழ்ச்சியை வர்ணிக்கிறாரே'' எனக் கேட்டதற்கு, புன்னகையை உதிர்த்திருக்கிறார் அன்புமணி. சசிகலாவை எதிர்த்து பேசும் கே.பி.முனுசாமியும் சசிகலாவின் லைனுக்கு வந்து செல்கிறார் என்கிறது சசி தரப்பு.

"நான் ஜெயிலுக்கு போனப்ப, ராமாவரம் தோட்டத்துக்குப் போனேன், ஜெயில்ல இருந்து வந்தப்பவும் ராமாவரம் தோட்டத்துக்குப் போனேன், அது நல்ல ராசியான இடமப்பா... எம்.ஜி.ஆரின் ஆசி எனக்கு எப்பவுமே உண்டு'' என புன்னகைக்கும் சசிகலா தனது சொந்த பந்தங்களிடம்கூட அதிகம் பேசாமல் எப்பொழுதும் செல்ஃபோனும் கையுமாக வாட்ஸ்அப் கால்களிலேயே வியூகங்கள் வகுத்து வருகிறார். இதுவரை சசிகலாவால் வெளிப்படையாக யாரையும் அழைத்துச் செல்ல முடியவில்லை. எல்லாம் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது எனச் சொல்கிறார் எடப்பாடி.

அரசியல் மேட்ச் விறுவிறுப்பாகப் போகிறது. ப்ளேயர்களாக சசியும் எடப்பாடியும் இருந்தாலும், ஆட்டத்தை தீர்மானிப்பதென்னவோ அம்பயரான பா.ஜ.க.வின் மோடிதான்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT