சிறையில் இருக்கும் சசிகலா ஒருவித திட்டம் போட்டு வருவதாக தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் எதிரொலிக்கின்றன. சிறையில் தன்னை யார் சந்திக்க வந்தாலும் அவர்களிடம் மௌனம் சாதிக்கும் சசிகலா, சில முக்கிய சொந்த பந்தங்களிடம் மட்டும் தன் எதிர்கால வியூகங்கள் பற்றி உற்சாகமாகப் பேசுவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி நம்மிடம் மனம் திறந்து பேசிய மன்னார்குடித் தரப்பு, டிசம்பர் அல்லது ஜனவரியில் ரிலீஸ் ஆகிடுவோம் என்று சசிகலா அழுத்தமாக நம்புவதாக தெரிவிக்கின்றனர். அவர் விடுதலைக்கு கர்நாடகாவில் இருக்கும் எடியூரப்பா அரசும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக கூறுகின்றனர். அதனால் தனக்கு எதிராக அங்கே சிறை அதிகாரி ரூபா கிளப்பிய புகாரும் அது தொடர்பாக நடக்கும் விசாரணையும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறிவருவதாக சொல்லப்படுகிறது.

Advertisment

admk

சிறையில் இருந்து வெளியே வந்ததும், அ.தி.மு.க.வி.லோ, அ.ம.மு.க.விலோ உடனடியாக சேர்ந்து செயல்படாமல், தனித்து இயங்குவதற்காக புதுப்புது திட்டங்களை அவர் மனதிற்குள் போட்டு வருவதாகவும் கூறுகின்றனர். அதனால், எல்லோரும் என்னிடம் வரும் காலம் வரப்போகுது என்று சசிகலா மிகவும் நம்பிக்கையாக உள்ளார் என்று கூறுகின்றனர். இந்த தகவல் எடப்பாடிக்கும் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. சசிகலா வெளியில் வந்தால், பெரும்பாலான மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் அவர் பக்கம் சென்றுவிடுவார்கள் என்ற பயம் எடப்பாடிக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சின்னம்மா தியாகம் செய்துவிட்டுத்தான் சிறைக்கு சென்றுள்ளார். அவர் அ.தி.மு.க.வுக்குத் திரும்பி வந்து, கட்சியை வழிநடத்துவார் என்று அதிரடி கிளப்பியுள்ளார். உடனே அமைச்சர் ஜெயக்குமார், எந்தக் காலத்திலும் சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று அவருக்கு பதிலடி கொடுத்தார்.

Advertisment

இதனையடுத்து அமைச்சர்கள், சசிக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு அணியாக நின்று சலசலப்பை ஏற்படுத்தி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதை எல்லாம் நினைத்து வருத்தத்தில் இருக்கும் எடப்பாடி, சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதற்குள் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஓ.பி.எஸ். சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். அண்மைக் காலமாக ஓ.பி.எஸ் உடன் நெருக்கமாகக் கைகோத்திருக்கும் எடப்பாடி, தங்களின் பொது எதிரியாக சசிகலாவையும், அமைச்சர் வேலுமணியையும் கருதுவதாக கூறுகின்றனர். சசிகலாவைப் போலவே வேலுமணி, ஆட்சியைத் தந்திரமாகக் கைப்பற்ற முயற்சிப்பதாக எடப்பாடி நினைக்கிறார். அதற்கு காரணம், வேலுமணிக்கு தைரியம் கொடுத்துவரும் ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் தான் என்றும் கூறுகின்றனர்.