ADVERTISEMENT

காட்டுக்கு ராஜா சிங்கமா?

08:18 PM Mar 21, 2018 | santhoshkumar

எப்படி காட்டுக்கு சிங்கம் மட்டும் ராஜாவாக இருக்க முடியும்? சிங்கம்தான் காட்டிற்கு ராஜா என்று சொல்லியவர் கண்டிப்பாக ஒரு முரட்டு சோம்பேறியாகத்தான் இருக்க வேண்டும். ஆம், சிங்கத்தின் தோற்றம் வேண்டுமானாலும் பார்க்க தோரணையாக இருக்கலாம், ஆனால் தன் சாப்பாட்டை வேட்டையாடக் கூட பெண் சிங்கங்கள்தான் உதவுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் அந்த உணவை ஆண் சிங்கம் தான் முதலில் சாப்பிடுமாம். சரி, இதெல்லாம் ஒரு காரணமே இல்லை என்று வைத்துக்கொள்ளுவோம். காட்டின் ராஜா என்று சொல்லப்படும் சிங்கம் தமிழ்நாட்டில் எந்த காட்டில் வாழ்கிறது. வண்டலூரில் வேண்டுமானாலும் பார்க்கலாம் மற்றபடி இந்த பகுதிகளில் புலிகள் வாழ்வதுபோன்று சிங்கங்கள் வாழ்வது கிடையாது. அப்போது நம் பகுதிகளில் இருக்கும் காடுகளுக்கெல்லாம் யார் தலைவனாக இருப்பார்கள்.

ADVERTISEMENT



காட்டின் வளர்ச்சிக்கு விலங்குகளின் பங்களிப்பு நிறைவே இருக்கிறது. தற்போதைய மாடர்ன் சூழலில், இயற்கை மாசடைந்து, புவி வெப்பமயமாகிவிட்டது. மேலும் காட்டில் இருந்துதான் மனிதனுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது (ஆக்சிஜன் முதல் மூலிகை வரை). அமேசான் காடுகளில் எடுக்கப்படும் அரியவகை மூலிகை என்றும் வியாபாரம் செய்கிறார்கள் மனிதர்கள். அதேபோன்று மனிதனின் வாழ்வாதாரம் என்பது காட்டிலிருந்துதான் தொடர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட காட்டுக்கு யார் முதல்வராக இருக்க முடியும். கண்டிப்பாக அதிக தொகையை கொண்டவராகவும், அந்த நிலப்பகுதியில் தனித்து வாழும் ஒரு வகை விலங்காகத்தான் இருக்க முடியும். சிங்கமே வாழமுடியாத காட்டிற்கு பின் வேறு ஒருவர் தான் ஆள முடியும். (தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்). யார், யார் அவங்க காட்டுல வெயிட்டு, கெத்துனு பார்ப்போம்.

ADVERTISEMENT



இந்தியாவில் பல காடுகள் இருக்கின்றன. இந்திய நிலப்பரப்பின் 35 சதவீத நிலப்பரப்பை காடுகள்தான் சூழ்ந்துள்ளன. இந்தியாவில் வெயிட் கை என்று சொல்லப்படும், வங்காள புலிகள் வாழ்வது சுந்தரவன சதுப்புநில காடுகளில்தான். ஆங்கிலத்தில்கூட இந்த வங்காள புலிகளின் பெயர்களுக்கு முன் ராயல் என்று சேர்க்கப்படுகிறது. அப்படி ஒரு கெத்து இவருக்கு, இந்திய நாட்டின் தேசிய விலங்காக இருக்கும் புலிகளினத்தின் எண்ணிக்கையோ குறைவுதான். அதிலும் சுந்தரவன காட்டில் வாழும் இந்த புலிகள் எண்பதுக்கும் குறைவுதான். உலகிலேயே மிகப்பெரிய சதுப்புநில காடு சுந்தரவன சதுப்புநில காடுதான். இந்தியாவின் பெரிய டெல்டாவாகவும் இது திகழ்கிறது. சுந்தரவன காடுகளில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் விதவை கிராமம், அதற்கு முழுக்க, முழுக்க வங்காள புலிகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்தளவிற்கு சேதாரத்தை ஏற்படுத்தியள்ளன இந்த புலிகள்.



கிர் காடு இதுவும் இந்திய நாட்டில் தான் உள்ளது. இங்கு யார் ராஜாவாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள். சிங்கம்தான் காட்டின் ராஜா என்ற பழமொழி இங்குதான் பலிக்கிறது. இந்த காட்டில்தான் ஆசிய சிங்கங்கள் வாழ்கிறது. ஆசிய கண்டத்திலேயே இந்த காட்டில்தான் சிங்கம் இருக்கிறது. மற்ற அனைத்தும் ஆப்ரிக்க கண்டத்தில் தான் உள்ளன. இந்த கிர் காடு குஜராத் மாநிலத்தில் உள்ளது. ஆப்ரிக்க சிங்கங்களைப் போல் பார்க்க பெரிதாகவும், பிடரி முடி அதிகமாகவும் இருக்காது. இருந்தாலும் இந்தியாவில் இருக்கிறதல்லவா அதனால் மண்ணின் மைந்தன் எப்போதும் கெத்துதான். அதேபோன்று இந்தக் காட்டில் 2500க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் இருக்கின்றன. இந்த காட்டில் தேக்கு மரங்கள் சூழ சிங்கங்கள் வாழும் ஒரு சின்னகோட்டையாகவே இந்த கிர் காடு இருக்கிறது.



மனிதனுக்கு தேவையானது ஆக்சிஜன், அந்த ஆக்சிஜனின் மொத்த விழுக்காட்டில் இருபது சதவீதம் ஆக்சிஜனை இந்த உலகுக்கு அளிக்கும் ஒரு கொடை வள்ளல் காடுதான் அமேசான் காடு. அமேசான் காடுகளில்தான் பெரும்பாலான விலங்குகள், விஷ ஜந்துக்கள் வாழும் இடமாக இருக்கிறது, இருந்தாலும் ஜாகுவார் என்ற விலங்கினம் தான் இங்கு அரிதிலும் அரிது. ஜாகுவார் பார்ப்பதற்கு சிறுத்தையை போன்று இருந்தாலும் அதற்கும், ஜாகுவாருக்கும் சிறு வித்தியாசம் உண்டு. ஜாகுவாருக்கு புள்ளிகள் பெரிதாக இருக்கும், சிறுத்தைக்கு சிறியதாக இருக்கும். சில ஜாகுவார்களுக்கு ரோஜா பூ போன்றும் இருக்கும், அதிலும் சில ஜாகுவார்களை பிளாக் பேந்தர் என்று அழைப்பார்கள். அந்த புள்ளிகள் அதன் உடலில் அலைந்து கருப்பான நிறத்தில் இருப்பது போன்று இருக்கும். அதனால் அந்த வகைகளை பிளாக் பேந்தர் என்று அழைக்கின்றனர். ஜாகுவார் நதிகளின் ஓரத்திலும், மரக்கிளைகளிலும் வாழும் ஒரு விலங்கினம். அமேசான் காட்டில் எத்தனையோ வெயிட்டுக்கைகள் இருந்தாலும் ஜாகுவார் அவையனைத்திற்கும் மேலானதுதான்.



ஆப்ரிக்க கண்டத்திலுள்ள பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் என்பது பெரும்பாலும் விலங்குகள் சரணாலயங்களின் மூலமாகத்தான் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஆப்ரிக்க கண்டத்தில் நிறைய விலங்குகள் பார்க்க தோரணையாகவே இருக்கும். இங்கு இருக்கும் காடுகள் அடர்த்தியான காடுகள் இல்லை, பார்க்க புல்லும் விலகிய மரங்களாகவும்தான் இருக்கும், ஒருவேளை இது பாலைவனமாக இருக்குமோ என்று கூட பார்ப்பவர்களுக்கு தோன்றும். இங்கிருக்கும் காடுகளில் யானைகளும், சிங்கங்களும் இருந்தாலும் பார்க்கவே ராட்சசனை போன்று தோற்றம் கொண்ட காண்டாமிருகம்தான் இங்கு வெயிட்டு. யானையாக இருந்தாலும், சிங்கமாக இருந்தாலும் மூக்கில் இருக்கும் கொம்பை வைத்து ஒத்தைக்கு ஒத்தை நின்று பார்க்கும். ரைனோவிலேயே பல வகைகள் உண்டு, ஆசியாவிலும் கூட இது இருக்கிறது. இருந்தாலும் இந்த நிலப்பரப்பில் இருக்கும் ஒரு தோரணையான விலங்கு என்றால் அது வெள்ளை நிற ரைனோ தான், ரைனோவிலேயே பார்க்க பெரியதும், நிமிர்ந்த ஒரு தோற்றத்திலும் இருக்கும். உலகில் அழித்துக்கொண்டு வரும் விலங்குகளில் ரைனோ முன்னிலையில் இருக்கிறது.



இவற்றையெல்லாம் தாண்டி பல காடுகளில் உண்மையான ராஜாவாகத் திகழ்வது யானைகள் தான். காடுகளின் ஒவ்வொரு வழித்தடத்தையும் முழுமையாக அறிந்து பல தலைமுறைகளாக மனதில் வைத்திருப்பதை யானைகள். காடுகளின் ராஜாவாகக் கூறப்படும் சிங்கங்கள் கூட, யானைகளைக் கண்டால் சற்று மரியாதையாகத்தான் அணுகுவார்களாம். வேறு உணவேயில்லாத சமயத்தில் யானைகளை இரையாக்கத் துணியும் சிங்கங்கள் கூட்டமாகச் சென்றுதான் ஒரு தனி யானையைத் தாக்குவார்கள். அதுவும் இளம் யானையாகத் தான் இருக்குமாம். முழுமையாக வளர்ந்த யானையைத் தாக்க சிங்கங்களுக்கு தைரியம் போதாது. உலகிலேயே ஆப்பிரிக்காவின் 'போத்ஸ்வானா' சரணாலயத்தில் தான் யானைகள் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட 50000 - 60000 யானைகள் வரை இருக்கின்றன.

இப்படி ஒவ்வொரு காட்டிலும் ஒவ்வொரு விலங்கு ராஜாவாகத் திகழ்கிறது. காட்டுக்கு எந்த விலங்கு தலைவனாக இருந்து என்ன பிரயோஜனம்? இந்த மனிதர்களிடம் சிக்கிக்கொண்டு இரண்டும் தானே அழிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT