ADVERTISEMENT

வேலுமணி.. இ.பி.எஸ்.. கொடநாடு! 

12:42 PM Oct 20, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கொடநாடு கொலை கொள்ளை வழக்கும், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பரசன் வீட்டுத் திருமணமும் அ.தி.மு.க.வின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. கொடநாடு கொலை வழக்கை தற்பொழுது விசாரிக்கும் ஊட்டி நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் கண்டிப்புக்குப் பேர்போனவர். மிகவும் நுணுக்கமாகவும் அறிவுப் பூர்வமாகவும் வழக்குகளை வேகமாகக் கையாள்பவர். புதிதாகப் பொறுப்பேற்ற அவரிடம் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கொடநாடு வழக்கு பற்றி வழக்கமாகப் பாடும் பல்லவியை முன்வைத்தார்.

“நாங்கள் நிறைய எலெக்ட்ரானிக் சாட்சியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை 268 சாட்சிகளை விசாரித்துள்ளோம். எனவே, இந்த வழக்கை மேலும் விசாரிக்க கால அவகாசம் வேண்டும்” எனக் கேட்டார்.

இந்த வழக்கமான பல்லவியைக் கேட்டு திருப்தியடையாத நீதிபதி அப்துல்காதர் “எலெக்ட்ரானிக் சாட்சியங்கள் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு “செல்போன் ரெக்கார்டுகள்” என பதில் அளித்தார் ஷாஜகான். “யாருடைய செல்போன்?” என கேள்வி வந்தது. “குற்றவாளி கனகராஜுடைய செல்போன்” என ஷாஜகான் சொன்னபொழுது, “அதில் ஏதாவது புதிய விஷயம் இருக்கிறதா?” என நீதிபதி கேட்டார். “குற்றவாளி கனகராஜுடன் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அமைச்சர்களின் வீடுகள் அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலையிலிருந்து பலமுறை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் தொலைத்தொடர்பு துறையிலிருந்து போலீசுக்குக் கிடைத்திருக்கிறது” என ஷாஜகான் கோர்ட்டில் பதிவு செய்தார்.

கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் செல்போனுக்கு எடப்பாடியின் பாதுகாவல் அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி. கனகராஜ், குற்றவாளி கனகராஜ் இறக்கும் தருவாயில் தொடர்புகொண்டு பேசினார் என ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான விசாரணைக்குழு கண்டுபிடித்து பதிவு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்பொழுது ஆவடி பட்டாலியனில் டி.எஸ்.பி.யாக இருக்கும் அதே கனகராஜை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்குள்ளாக்கினர். இப்பொழுது புதிதாக கிரீன்வேஸ் சாலை டவரிலிருந்து கனகராஜை தொடர்புகொண்டு பேசினார்கள் என புதிய தகவல் எப்படி பெறப்பட்டது? என நாம் போலீஸ் வட்டாரங்களைக் கேட்டோம்.

இந்தத் தகவலுக்குக் காரணம், “பழைய பி.எஸ்.என்.எல். அழைப்புக்களின் ரெக்கார்டுகளை ஆராய்வதற்கு ஒரு புதிய மென்பொருளை போலீசார் பயன்படுத்துகிறார்கள். போலீசில் சாட்சியம் அளித்த கனகராஜின் அண்ணன் தனபால் கொடநாட்டைக் கொள்ளையடிக்கும் சதி, மறைந்த முன்னாள் ஜெயலலிதா உயிருக்கே ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே தொடங்கிவிட்டது. இதுகுறித்து கனகராஜிடம் எடப்பாடி, தங்கமணி, வேலுமணி, சேலம் இளங்கோவன் ஆகியோர் பேசியிருக்கிறார்கள். வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் மனைவி கேரளாவைச் சேர்ந்தவர். அவர் மற்றும் அவரது உறவினர்களின் மூலம் கேரளா முழுவதும் வேலுமணி முதலீடு செய்திருக்கிறார். கனகராஜுக்கு நெருக்கமான கேரளவாசியான சயான் போன்ற அன்பரசனின் நெட்வொர்க்கில் இருந்த கேரள குற்றவாளிகளோடு இருதரப்பு ஒப்பந்தம் போடப்பட்டு, கொடநாடு கொள்ளை அரங்கேறியது. இதற்காக எடப்பாடியும் வேலுமணியும் கனகராஜிடம் நீண்ட நாட்களாக பேசிவந்தார்கள். அப்பொழுது உளவுத்துறை தலைவராக இருந்த சத்தியமூர்த்தி, அன்பரசன், சேலம் இளங்கோவன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்த எடப்பாடி மற்றும் வேலுமணியிடமிருந்து உத்தரவுகளைப் பெற்று கனகராஜிடம் சொல்லிவந்தார்கள். அந்த பேச்சுக்கள்தான் கிரீன்வேஸ் சாலை செல்போன் டவரிலிருந்து பேசப்பட்ட பேச்சுக்கள் என தனபால் அளித்த சாட்சியங்களில் இருந்து போலீஸ் ஆய்வுசெய்து கண்டுபிடித்திருக்கிறது” என்கிறது சி.பி.சி.ஐ.டி.வட்டாரங்கள்.

இந்த விவரங்களை ஊட்டி கோர்ட்டில் மட்டுமல்ல, சென்னை உயர்நீதிமன்றத்திலும் சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்யப்போகும் விசாரணை அறிக்கையிலும் இடம்பெறப் போகிறது. சட்டமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றிப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்யவிருக்கும் அறிக்கையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பல புதிய விவரங்கள் இடம்பெறும் என மறைமுகமாக சுட்டிக்காட்டியதுடன், இந்த வழக்கில் முக்கியக்குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது” என சட்டமன்றத்திலேயே குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கனகராஜின் சகோதரர் தனபால், ‘இந்த வழக்கைப் பற்றிப் பேசுவதற்கு எடப்பாடி நீதிமன்றம் மூலம் நிரந்தரத் தடை வாங்கிவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இதில் தொடர்புடையவர்கள் என தனபால் கொடுத்த வாக்குமூலத்தில், நான்கு பேரை மட்டுமே விசாரித்திருக்கிறார்கள். எக்ஸ். எம்.எல்.ஏ. வெங்கடாச்சலம், போயஸ் கார்டனில் வேலை செய்த கார்த்திக், அத்திக்காட்டனூர் மோகன், கவுன்சிலர் பிரபாகரன் ஆகிய நாலு பேர்தான் விசாரணைக்கு உள்ளானவர்கள். இதற்கு காரணம், சி.பி.சி.ஐ.டி. டீமில் சந்திரசேகர் என்கிற லோக்கல் டி.எஸ்.பி. இடம் பெற்றிருக்கிறார். அவர் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் சி.பி.சி.ஐ.டி. டீம் விசாரிக்கும் உண்மைகளை வேலுமணியிடம் சொல்கிறார்’ என தனபால் தரப்பு குற்றம் சாட்டுகிறது.

கொடநாடு வழக்குதான் வேலுமணியையும் எடப்பாடியையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. வேலுமணி, எடப்பாடிக்கு எதிராக பல வேலைகளைச் செய்துவருகிறார். அடுத்த அ.தி.மு.க. தலைவர் நான்தான் என வெளிப்படையாகவே பேசிவருகிறார். இதை அ.தி.மு.க.வின் பொருளாளராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடியிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். சமீபத்தில் எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்பொழுது அங்கிருந்த உதயகுமாரை வெளியே போகச் சொல்லிவிட்டு, அதன்பிறகு இருவரிடையே நடைபெற்ற அந்த வாக்குவாதத்தில் எடப்பாடிக்கு எதிராக வேலுமணி பா.ஜ.க. தலைவர்களுடன் சேர்ந்து நடத்தும் நகர்வுகள், முதலமைச்சர் ஆவதற்கு வேலுமணி பார்த்த ஜோசியம், ஓ.பி.எஸ்.சுடன் வேலுமணி நடத்திய சந்திப்பு என அனைத்தையும் கேள்வி கேட்டிருக்கிறார் எடப்பாடி. அத்துடன் வேலுமணியைக் கடுமையாக எச்சரித்தும் அனுப்பியிருக்கிறார்.

வேலுமணியின் சகோதரர் அன்பரசன்

இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் உள்ள அ.தி.மு.க. கிளைக்கழகச் செயலாளர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரையும் ஒன்றுதிரட்டி, வருகிற வாரத்தில் ஐந்து நாட்கள் நீடிக்கும் ஒரு திருமண வைபவத்தை வேலுமணி நடத்துகிறார். வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் மகன் விவேக்கின் இந்தத் திருமணம், கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள செல்வம் மஹாலில் தொடங்கி, கேரள மாநிலம் ஆனைக்கட்டி பகுதியில் உள்ள அன்பரசனின் பினாமியான ராமச்சந்திரன் என்பவர் நடத்தும் எஸ்.ஆர். ஜங்கிள் ரிசார்ட் வரை நீடிக்கிறது. கேரளாவில் வேலுமணியின் பினாமிகள் ஜங்கிள் ரிசார்ட்டுகளில் சங்கமிக்கிறார்கள்.

திருமணத்திற்கு வரும் அ.தி.மு.க.வினருக்கு ஆடு, கோழி என அனைத்தும் கோவை நகரின் பல பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்டு விருந்தளிக்கப்படுகிறது. வேலுமணியின் விஸ்வரூபம் என்று வர்ணிக்கப்படும் இந்தத் திருமணம் 91 - 96 காலகட்டத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தைவிட ஆடம்பரத்தில் பெரிய திருமணமாக இருக்கும் என்று பேசப்படுகிறது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும் சங்கமிக்கும் இந்தத் திருமணத்தில் எடப்பாடியும் பங்கேற்கிறார் என்பதுதான் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் உள்ள தவிர்க்க முடியாத லிங்க், வேலுமணிக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

இந்த திருமணத்தை கொடநாடு வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள் என்பதுதான் உச்சபட்ச பரபரப்பாகும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT