Skip to main content

நான்தானே உன் புருஷன்? திருமணம் ஆகிவிட்டது என்றல்லவா நினைத்தேன்... காசியைப் பற்றி இளம்பெண் கூறிய பரபரப்பு தகவல்! 

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

suji


நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஆறு நாட்கள் போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ள காசியிடம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவன், "ஏராளமான பெண்கள் என்னிடம் தாராளமாக பழகினார்கள். நானாகச் சென்று எந்தப் பெண்ணையும் ஏமாற்றவில்லை. யாரையும் திருமணம் செய்தேனா? இந்தக் காசி யாரென்று, என் மீது புகார் அளித்த பெண்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்'' என்று கூறியதாக நாளிதழ்களில் செய்தி வெளிவர, நம்மைத் தொடர்புகொண்டார் காசியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.
 


"எனக்கு ஏற்பட்ட கொடுமைதான், மற்ற பெண்களுக்கும் நடந்திருக்கிறது. காசி கைதானவுடன், எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்கிறோம். ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்கிறோம். அவனது முகத் தோற்றத்தையும், உடலமைப்பையும் மட்டுமே பார்த்து, காதல் மயக்கத்தில் எங்களைப் பறிகொடுத்தோம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. பெண்களை ஏமாற்றுவதில் அவன் கை தேர்ந்தவன். பேசிப் பேசியே வசியம் செய்துவிடுவான். அவனுடைய பேச்சில்தான் கரைந்து போனோம். ஆண்களின் வசீகரப் பேச்சால் ஈர்க்கப்பட்டு, எங்களைப் போலவே, ஏமாந்து கொண்டிருப்பவர்கள் அனேகம் பேர். காசி போன்ற கபடவேடதாரிகளை அடையாளம் கண்டு, பெண்கள் ஒதுங்கிவிட வேண்டும். போலித்தனமான ஆண்களிடம் பெண்ணினம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக, நாங்கள் கற்ற வாழ்க்கைப் பாடத்தை, நக்கீரனிடம் சொல்கிறோம்''’ என்றார் குமுறலுடன்.

காசியால் பாதிக்கப்பட்டவர்களின் கசப்பான அனுபவத்தை, தன் கைப்பட எழுதியே தந்திருக்கிறார், அந்தப் பெண்!  அவர் எழுதியதை அப்படியே தந்திருக்கிறோம்…

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி (alias) சுஜி, 26 வயது ஆண், ‘அன்பே சிவம்’ என்ற போர்வையில் ‘Who is perfect, where is perfect = Suji’ எனக் கூறிக்கொள்வான். சமூக வலைத்தளத்தில் (Facebook, Instagram, Tiktok, Dating application) தனது பெயரில் கணக்குகளைத் தொடங்குவான். சமூக வலைத்தளத்தில் பல போலி கணக்குகள் தனது பெயரில் வலம் வருகின்றன எனத் தன்னிடம் பேசும் பெண்களிடம் கூறுவான். "என்னுடைய பெயரில் பல கணக்குகளை எனக்கு வேண்டாதவர்கள் சமூக வலைத்தளத்தில் துவக்கி பெண்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்னைப் போல் நல்லவனாக பல ஆண்கள் இருப்பதில்லை'' என்று கூறுவான்.

தன் தாயின் மீது மிகவும் பாசமாக இருப்பது போன்றும், தன் தந்தை மாதிரி ஒரு நல்ல மனிதரைப் பார்த்ததில்லை எனவும், தன் சகோதரி மீது மிகவும் அன்பு வைத்திருப்பவர் போன்றும், பெண்களைத் தெய்வமாக மதிப்பவர் போன்றும், சமூக சேவை, பெண்ணியம் போற்றுதல், கடவுள் நம்பிக்கை மிக்கவர், நாகரிகம், தமிழ் கலாச்சாரம் ஆகியவற்றை மதிப்பவர் போல, சமூகவலைத்தளங்களில் காட்டிக்கொள்வான்.
 

 

suji


காதலர் தினத்தன்று தனது பெற்றோரின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் upload செய்து, "பெண்களே! உங்களுக்கு ஒருவரைப் பிடித்து இருந்தால் உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள். உங்கள் பெற்றோரை மிகவும் நேசியுங்கள். ஒரு பையன் உங்களைக் காதல் செய்கிறேன் என்று சொன்னால், உடனே நம்பாதீர்கள். வெளித் தோற்றம் சில வருடங்கள் மட்டுமே, மனதைப் பார்த்து காதல் செய்யுங்கள். காதல் என்பது இதுவே'’ என்று அறிவுரை கூறுவான். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவன் போலவும், அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாதவன் போலவும், தன்னை மிகவும் கருணை மிக்கவன் போலவும், பரந்த மனப்பான்மை உள்ளவன் போலவும், சமூக வலைத்தளத்தில் காட்டிக் கொள்வான். பெண்களிடம் கை ஓங்குபவன் ஆண் மகன் அல்ல என்பது இவனது சொற்பொழிவு.

சமூக வலைத்தளங்களில், இவற்றைப் பார்க்கும் பெண்கள் இவனை மிகவும் நல்லவன் என நம்பிவிடுவர். பெண்களிடம் நட்பாக பேச்சு கொடுப்பான். "நான் அவன் இல்லை'’ பாணியில் ஒவ்வொருவரிடமும் தன்னை ஒரு தொழிலதிபர், Pilot, Engineer, Lawyer, ஆழ்கடல் மூழ்காளர், Gym Trainer, Suguna Chicken Dealer என்று அறிமுகப் படுத்திகொள்வான்.

சமூகசேவை, பெண்ணியம் போன்ற கருத்துகளை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவிடுவான். அதில் comment செய்யும் பெண்களின் கருத்துகளுக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்துவான். பெண்களை, வயது வாரியாக, குடும்ப சூழ்நிலை, பணம், அப்பாவித்தனம், தொழில், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள் என வகைப்படுத்துவான். மேலும், காதலில் தோல்வியுற்ற பெண்கள், மனதளவில் தனிமையில் இருப்பதாகக் கவலையில் உள்ள பெண்கள் என்றால், வளைப்பது இவனுக்கு மிகவும் சுலபம்.

அவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வர, அந்தப் பெண்ணிற்கும் அவள் குடும்பத்திற்கும் உள்ள உறவைப் பற்றி தெரிந்து கொள்வான். இப்பெண்னை பெற்றோர் கண்காணிக்கிறார்களா? தப்பு செய்தால் அடிப்பார்களா? சக பெண்களின் நம்பிக்கையை இழந்தவர்களா? பெண்களிடம் நல்ல நண்பர்களாகப் பழகுகிறார்களா? என ஆராய்வான். மிரட்டினால் அப்பெண்ணோ, அவளது குடும்பத்தினரோ பயப்படுவார்களா? பிரச்சனை செய்வார்களா? என்று கணக்கு போடுவான். 98% அவன் போட்ட கணக்கு, பெண்களைப் பற்றி சரியாகவே இருக்கும்.
 

suji

 


அவர்களது நம்பிக்கையைப் பெற என்ன பேசினால் அந்தப் பெண்ணிற்கு பிடிக்குமோ, அதற்கு ஏற்றாற்போல பேசி, மனதில் இடம் பிடிப்பான். உடல் நலம், மன நலம், பாதுகாப்பு என அக்கறை செலுத்தி, உரிமை எடுத்துக் கொள்வான். அந்தப் பெண்ணிற்கு தாயோ, தந்தையோ இல்லையெனில், அவர்கள் ஸ்தானத்தில் இருந்து அக்கறை காட்டுவது போல பேசி மனதில் இடம் பிடிப்பான். அடுத்த கட்டமாக தொலைபேசி எண் வாங்குவான். தொலைபேசி எண் கொடுக்க மறுக்கும் பெண்களிடம், “என்னிடம் வேலை ரீதியாக உதவி கேட்டு வருபவர்களுக்கு, உங்கள் துறை சார்ந்தவராக இருந்தால், உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். அவர் குடும்பம் நன்றாக இருக்கும் என்று கூறி தொலைபேசி எண் வாங்குவான்.

சில மாதங்கள் நட்பாகப் பேசும் அவன், ஒரு நாள் அந்தப் பெண்ணிடம் "நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு சம்மதம் என்றால் உங்கள் வீட்டில் பெண் கேட்கிறேன். உங்கள் பெற்றோர் தொலைபேசி எண் கொடுங்கள்'' என்பான். மேலும், "உங்களுடைய கடந்த காலம் எனக்குத் தேவையில்லை. கடந்த காலம் பற்றி யோசித்து ஒன்றும் நடக்கப்போவதில்லை. இப்பொழுது எப்படி வாழ்கிறோம்? இனிமேல் எப்படி வாழப்போகிறோம்? என்பதுதான் முக்கியம்''’ என்பான்.

இவனுடன் பழகும் பெண்கள், இவனைப் பற்றி விசாரிக்கும் முன்பே, "எனக்கு தொழில்ரீதியாக என் ஊரில் ஆயிரம் எதிரிகள் உள்ளனர். நான்கு மாடி வீடு கட்டியதைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். நிறைய பேர் முதுகில் குத்தியவர்கள். ஊரில் பல பேர் பல விதமாகச் சொல்வார்கள். என்னை நம்பு'' என விசாரிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவான்.

சம்மதிக்கும் பெண்களிடம் அடுத்த கட்டமாக, அவர்களுடைய வங்கிக் கணக்கில் தன்னையும் இணைத்துக்கொள்வான். நான் அறிந்த வரையில் காசியின் நயவஞ்சகத்தைச் சொல்லியிருக்கிறேன். எனது புதிய தோழிகள் இருவரது ஆதங்கத்தை, அவர்களின் குரலாகவே எதிரொலிக்கிறேன்.

“நல்ல நண்பனாக சில மாதங்கள் பேசினான். ஒரு நாள், உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றான். பெற்றோர் கைபேசி எண் கேட்டான். காதலிக்க ஆரம்பித்து பின் ஒரு நாள் இரவு நேரத்தில் video call செய்து நிர்வாணமாகப் பார்க்க வேண்டும் என்றான். நான் மறுத்ததற்கு, "நான்தானே உன் புருஷன்? உனக்கும் எனக்கும் மனதளவில் திருமணம் ஆகிவிட்டது என்றல்லவா நினைத்தேன்? என்னை நம்ப மாட்டாயா?'' என்று கேட்டான். என்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவன்தானே என இவனை நம்பி video call செய்தேன். இந்தக் கொடூரன் அனைத்தையும் Record செய்துவிட்டான்.

இவனைப் பற்றி தெரிந்து நான் விலக ஆரம்பித்தவுடன் "என்னுடன் வந்து உல்லாசமாக இரு.. இல்லையென்றால் சமூகவலைத்தளங்களில் உன் ஆபாச புகைப்படங்களை upload செய்து நீ ஒரு விபச்சாரி என்று கூறுவேன்'' என்றான். இவன் மிரட்டலுக்கு என்னை அடிமையாக்கி பல தடவை உல்லாசமாக இருந்தான். ஒரு கட்டத்தில் இவனை block செய்துவிட என் பெற்றோருக்கு அந்த ஆபாச புகைப்படங்களை அனுப்பி விடுவேன் என்று மிரட்டினான். நான் மனம் உடைந்து தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டேன்.’

அவன் என்னிடம், "நான் நாடகக் காதல் என்று பொய் சொல்லவில்லை. உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நீ படித்து முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம். உன் கடந்த காலத்தில் உன்னை யார் வேண்டுமானாலும் காயப்படுத்தி இருக்கலாம். இனிமேல் உனக்கு எல்லாமே நான்தான். உன்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்'' என்றான்.
 

http://onelink.to/nknapp


காதலிக்க ஆரம்பித்த சில நாட்களில் இவனைப் பற்றி தெரிந்து விலக ஆரம்பித்தேன். இவனைச் சந்திக்க மறுத்த போது "இந்த நேரத்தில், இந்த இடத்திற்கு நீ வரவில்லையென்றால், உன் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவேன்'' என்று மிரட்டி, அவனுடைய காரில் என்னை அடித்து துன்புறுத்தி பலாத்காரம் செய்தான். மேலும் “நான் கூப்பிடும் போதெல்லாம் வர வேண்டும், இல்லையென்றால் சமூகவலைத்தளங்களில் உன் நிர்வாணப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து விடுவேன்'' என்று பயமுறுத்தினான். ஒரு சொட்டுக் கண்ணீர்கூட உன் கண்களில் இருந்து வரக் கூடாது என்று கூறியவன், என் வாழ்க்கையைச் சீரழித்து தினமும் கண்ணீர் விட வைத்து விட்டான்.

தன் மிரட்டலுக்கு பயந்த பெண்களின் Facebook, Instagram கணக்குகளை தன் பெயரில் மாற்றி, அவர்களுடைய பெண் தோழிகளிடம் பேசுவான், காசி. அவர்களிடமும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு நாசப்படுத்துவான். பெண்களிடம் காசி வாங்கும் பரிசுகளை, தன் நண்பனுக்கு “நம் நட்பின் இலக்கணமாக உனக்கு வாங்கி வந்தேன் எனக் கூறுவான். பெண்களை மிரட்ட தன் கைவசம் உள்ள நண்பர்களை இப்படியும் கவனிப்பான். ஒவ்வொரு வரியிலும் வலியையும் இயலாமையையும் வெளிப்படுத்தியிருந்தார், அந்தப் பெண்!


 

 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.