ADVERTISEMENT

ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயர் நல்லவரா, கெட்டவரா?

01:54 PM Oct 22, 2018 | Anonymous (not verified)

1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திங்கள் கிழமை ஹைதராபாத் நகருக்கு அருகே ஓடும் முஸி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அளவுக்கு அதிகமான வெள்ளத்தால் ஆற்றின் கரைகள் உடைந்தன. வெள்ளம் ஹைதராபாத் நகருக்குள் பாய்ந்தது. நகரையே வெள்ளக்காடாக்கியது. இதில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT



ஹைதராபாத்தை அன்று ஆட்சி செய்தவர் நிஜாம் மஹ்பூப் அலி கான். வெள்ளப்பெருக்கிலிருந்து நகரை காப்பாற்ற அன்று அழைக்கப்பட்டவர் பொறியாளர் எம்.விஸ்வேச்வரய்யா. நதியின் கரை உடைந்து நகருக்குள் புகுந்த வெள்ளத்தின் அளவு 4 லட்சத்து 25 ஆயிரம் கன அடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடந்தபோது ஹைதராபாத்தில் தங்கியிருந்தவர் மைகேல் ஓ டயர். முஸி ஆற்று வெள்ளத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள ஹைதராபாத், முற்றாக அழிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டது. ஆம், ஹுசைன்நகர் ஏரி நிரம்பி அதன் கரையும் உடையும் நிலையை எட்டியது. வழக்கமாக செகந்திராபாத்திலிருந்து ஹைதராபாத்திற்கு ரயில் வழியாகவே டயர் பயணம் செய்வது வழக்கம். ஆனால், ஏரியின் கரைகள் உடையக்கூடும் என்பதால் அச்சமடைந்தார்.

அடுத்தநாள், ஹைதராபாத் நகருக்கு குடிநீரை வழங்கிக் கொண்டிருந்த ஜீடிமெட்லா குளம் அல்லது ஃபாக்ஸ்ஸாகர் ஏரியை டயர் ஆய்வு செய்தார். அந்த ஏரியை, பிரிட்டிஷ் ராணுவக் குடியிருப்புக்காக பிரிட்டிஷ் அரசு 1896 ஆம் ஆண்டு கட்டிக் கொடுத்தது.

ADVERTISEMENT



“அவர் ஆய்வு செய்யச் சென்றபோது கரையில் மூன்று இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டிருந்தது. அந்த உடைப்பு அதிகரித்தால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் ஹுசைன்ஸாகர் ஏரிக்கே செல்லும். அப்படிச் சென்றால் அந்த ஏரியும் உடையும். அப்படி உடைந்தால் ஹைதராபாத் நகரமே அழியக்கூடும் என்று அஞ்சியதாக” டயர் தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

டயர் ஆய்வு செய்யச்சென்ற நேரத்தில், துர்கா பிரசாத் என்ற இந்தியரின் தலைமையில் 12 பேர் குளத்தின் கரையில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக 'எனக்குத் தெரிந்த இந்தியா' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதாவது, அந்தக் குளத்தை பாதுகாக்க இந்தியர் ஒருவர் மேற்கொண்ட முயற்சியையும் மறக்காமல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்று வரலாற்றாசிரியர் பெஞ்சமின் கோஹென் கூறியிருக்கிறார்.

குளம் உடையும் நிலையை அறிந்தவுடன் தாமதிக்காமல், செகந்திராபாத், ஹைதராபாத் நகரங்களில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை உடனடியாக வரவழைத்தார் டயர். பிரிட்டிஷ் வீரர்களை கேம்பெல் என்பவர் தலைமையில் அனுப்பினார். ஆயிரக்கணக்கான வீரர்களும், ராணுவப் பொறியாளர்களும் இணைந்து கரையை பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மணல்மூடைகளால் அந்தக் கரை பலப்படுத்தப்பட்டது. மணல் மூடைகளுடன் கற்களும் பாறைகளும் சேர்த்து மூன்று நாட்கள் கடுமையான உழைப்பிற்கு பிறகு குளம் மற்றும் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டன என்கிறார் கோஹென்.



ஹைதராபாத் நகரை வெள்ளம் பாதித்தவுடன் நகருக்கு பாதுகாப்பாக உஸ்மானஸாகர் மற்றும் ஹிமயத்ஸாகர் என்ற இரு ஏரிகளைக் கட்டும்படி பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா யோசனை கூறினார். இந்த இரண்டு ஏரிகளையும் முஸி ஆறு ஹைதராபாத் நகருக்குள் நுழைவதற்கு முன்னரே கட்டும்படி அவர் வலியுறுத்தினார். அத்துடன், நகருக்குள் அந்த நதி பயணிக்கும் நீளத்துக்கு இருபுறமும் கரைகளை பலப்படுத்தும்படியும் அறிவுறுத்தினார்.

இந்த இரு ஏரிகளும் 1920 மற்றும் 1927 ஆம் ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டன. அப்படியிருந்தும் 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் ஹைதராபாத் நகரம் சிறிதளவு பாதிக்கப்படவே செய்தது.

இந்த வெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பஞ்சாப் மாகாணத்தின் உதவி கவர்னராக ஜெனரல் மைகேல் டயர் நியமிக்கப்பட்டார். இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் ஜாலியன் வாலாபாக்கில் பைசாகி திருவிழா அன்று கூடிய மக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.



மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவன் பெயர் ரெஜினால்டு டயர். அவன்தான் மைதானத்தின் வாசல்களை அடைத்து ஒரே வாசல் வழியாக பிரங்கியாலும் துப்பாக்கிகளாலும் கொடூரமாக சுட்டுக் கொன்றவன்.

அந்த கொடூர சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி, லண்டனில் உள்ள கேக்ஸ்டன் ஹாலில் மைக்கேல் டயரை உத்தம் சிங் என்ற இளைஞன் சுட்டுக் கொன்றான்.

ஜாலியன்வாலாபாக் படுகொலையை திட்டமிட்டது மைக்கேல் டயர் என்றும், அதை நிறைவேற்றியவன் ரெஜினால்டு டயர் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், முன்பொருநாள், ஹைதராபாத் நகரைக் காப்பாற்ற இந்தியர்களோடு இணைந்து பாடுபட்டவரும் இதே மைக்கேல் டயர்தான் என்ற உண்மை உறுத்தவே செய்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT