Skip to main content

பூண்டியில் நீர் திறக்க முடிவு; கொசஸ்தலை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

mm

 

தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் கன மழை பொழிந்து வரும் நிலையில் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் பூண்டி ஏரியில் ஆந்திராவில் இருந்து கிடைக்கும் கிருஷ்ணா நதி நீரை தேக்கி வைத்தும், கொசஸ்தலை ஆற்றில் வரக்கூடிய தண்ணீரை சேர்த்து வைத்தும், மொத்தமாக சென்னை குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், தற்போதைய நீர் இருப்பு 2,792 மில்லியன் கனஅடியாக உள்ளது.

 

கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வரும் நிலையிலும் மற்றும் ஆந்திராவிலிருந்து கிடைக்கும் கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியில் நீர்மட்டமானது உயர்ந்து வருகிறது. பூண்டி அணையின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது நீர்மட்டம் 33.90 அடியாக உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் பூண்டி ஏரியிலிருந்து உபரி  நீர் திறக்கப்பட இருக்கிறது. பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரானது எண்ணூர் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. முதல் கட்டமாக ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்