ADVERTISEMENT

ஐ.ஏ.எஸ். vs வி.ஆர்.எஸ்.  கோட்டையில் பரபரப்பு !   -கிராமங்களுக்கு கிடைக்குமா இணைய வசதி ?    

11:38 AM Jan 24, 2020 | rajavel

ADVERTISEMENT

தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு வி.ஆர்.எஸ். கொடுத்துள்ள விவகாரம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் இன்னமும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் தொழில் புரட்சியின் ஒரு அங்கமாக, அதிவேக இணைய வசதிகளை தடையின்றி கிடைக்கும் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டிருந்தது மத்திய பாஜக அரசு.

ADVERTISEMENT


அதன்படி, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசின் தொழில்நுட்பத்துறையின் சார்பில் அதிவேக அலைக்கற்றை (ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்) இணைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது எடப்பாடி அரசு. முதல் கட்டமாக 12,524 கிராம பஞ்சாயத்துகள், 528 பேரூராட்சிகள், 125 நகராட்சிகளும் அடங்கிய உள்ளாட்சி அமைப்புகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற 1,230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் 15 மாநகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில்,
மாநகராட்சிகளையும் இணைத்து திட்டத்தின் மதிப்பை 2441 கோடியாக மாற்றியமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பையும் செய்தார்.

இந்த நிலையில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி கடந்த வருடம் டெண்டரை கால்ஃபர் செய்தார் தகவல் தொழில் நுட்ப முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு. அந்த டெண்டரில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிலையில், டெண்டரை முடிவு செய்வதற்கு முன்பே, பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் அரசுக்கு கடிதம் கொடுத்திருக்கிறார் சந்தோஷ்பாபு. இந்த விவகாரம்தான் தற்போது கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மத்தியில் சூடாகவே இருக்கிறது.

இது குறித்து தகவல் தொழில் நுட்பத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘’ டெண்டரில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் எல் அண்ட் டி, வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் உள்ளிட்ட 4 நிறுவனங்கள்தான் தொழில் நுட்ப தகுதிகளைப் பெற்றது. ஆனால், டெண்டரில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதிகளும் ஒரே ஒரு நிறுவனம் தான் நிறைவு செய்தது. அதேசமயம், இதில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு டெண்டரை முடிவு செய்யும் வகையில், சில விதிகளை மாற்றியமைக்க சந்தோஷ்பாபுவுக்கு அரசு தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது.

குறிப்பாக, திட்டத்திற்கு தேவையான உபகரணங்களை தகுதியுள்ள தரமான நிறுவனங்களிடமிருந்து தான் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிகளை தளர்த்துமாறு அறுவுறுத்தப்பட்டதை சந்தோஷ்பாபு ஏற்கவில்லை. தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட அழுத்தங்களால், ’ என்னால் முடியாது. வேண்டுமானால் துறையிலிருந்து என்னை மாற்றிவிடுங்கள் ’ என சொல்லியிருக்கிறார் பாபு. ஆனால், அது மறுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்தே அவர் வி.ஆர்.எஸ்.கொடுத்தார். அதற்கான கடிதத்தை கொடுத்ததுடன் 27-ந்தேதி வரை விடுப்பும் எடுத்துள்ளார். இவரது வி.ஆர்.எஸ்.சை அரசு ஏற்றுக்கொள்ளுமா ? என்பது விரைவில் தெரியவரும். சந்தோஷ்பாபு சர்ச்சையால் டெண்டர் தற்போது முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது ‘’ என்கிறார்கள்.

இந்த டெண்டர் விவகாரம் வில்லங்கமானதற்கு பர்செண்ட்டேஜ் விவகாரம் தான் என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் பரவி கிடைக்கிறது. டெண்டர் விவகாரத்தில் அரசின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மறுத்த சந்தோஷ்பாபு, தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் நடந்துள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறது கோட்டை வட்டாரம்!


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT