/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manipur-std_14.jpg)
மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
அதே சமயம் மணிப்பூர் முழுவதும் வன்முறை பரவுவதற்கு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களும், வதந்திகளும் காரணம் எனக் கூறி கடந்த மே மாதம் 23 ஆம் தேதி முதல் இணைய சேவையை அம்மாநில அரசு முடக்கியது. மேலும், அதில் அரசு ஒப்புதல் பெறப்பட்ட எண்களைத் தவிர்த்து அனைத்து மொபைல்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டது. இதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு கலவரம் குறைந்த பகுதிகளில் கடந்த 23 ஆம் தேதி முதல் இணைய சேவை வழங்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் மீண்டும் பதற்றம் உருவாகி இருந்தது.
இதனைத்தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை என 5 நாட்களுக்கு மீண்டும் இணைய சேவை தடை செய்யப்பட்டது. இந்தத்தடை உத்தரவு இன்று இரவுடன் முடியவுள்ள நிலையில், மணிப்பூரில் இணையதள சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவைக்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)