ADVERTISEMENT

என் காதல் மனைவிதான் என் கழிவுகளை எடுக்கிறார்... ஒரு கழிவறை இருந்தால் நிம்மதியாக இருப்பேன்... இரு கால்களையும் இழந்த இளைஞரின் கண்ணீர்க் குரல்!

09:58 PM Oct 09, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

4 வருடங்களுக்கு முன்பு இரு கால்களையும் இழந்த இளைஞரை ஒரு தாயைப் போல கவனித்துக் கொள்கிறார ஒரு இளம் காதல் மனைவி. இருவரும் காதலித்த காலத்தில் நன்றாக இருந்தவருக்கு, திருமணமாகி சில மாதங்களில் இரு கால்களும் பறிபோனது. இந்நிலையில் அவரை தவிக்கவிட்டுவிட்டு போய் விடாமல் அத்தனை சுமைகளையும் அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் அந்த காதல் மனைவியை எத்தனை பாராட்டினாலும் தகும்.


புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியம் 'மக்கள் பாதை' ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் கொடுத்த தகவல்.. ஆலங்குடி அருகில் உள்ள செம்பட்டிவிடுதி அருகில் உள்ள மேலவிடுதி கிராமத்தில் இரு கால்களையும் இழந்த இளைஞர் மிகவும் வறுமையில் வாடுகிறார். அவருக்கு அவர் காதல் மனைவிதான் அத்தனை உதவிகளையும் செய்து வருகிறார். ஆனால் வருமானத்திற்கு வழியின்றி தவிக்கிறார்கள். நக்கீரன் மூலம் ஏதாவது உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.


மேலவிடுதி கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளி ராஜாவைச் சந்தித்த போது.. சிறிய ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட 2 அடி உயரத்தில் சுவர் வைத்து மறைப்பிற்காக தென்னங்கீற்றுகளை கட்டிக் கொண்டு அந்தக் குடும்பம் வாழ்கிறது. மழைக் காலத்தில் தண்ணீர் வீட்டுக்குள் தெப்பம் போடும். அப்போது குழந்தையைக் கையில் ஏந்தியபடிநிற்க வேண்டும். மேலே போட்டுள்ள சீட்டுகளும் மழையைத் தாங்காது.


நம்மைப் பார்த்ததும் வாங்கண்ணா என்று நக்கரைத்துக் கொண்டே வாசலுக்கு வந்து வரவேற்றார் ராஜா. தொடர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.. நான் ப்ளஸ் 2 படித்து முடித்தவுடன் குடும்ப சூழ்நிலையை நினைத்து திருப்பூருக்கு வேலைக்குச் சென்றேன். காஜா பட்டன் கட்டும் கம்பெனியில் வேலை செய்தேன். ஓரளவு சம்பளம் கிடைத்தது. அந்தச் சம்பளத்தைச் சேமித்து வைத்து ஒரு மெஷின் வாங்கி தனியாக கம்பெனி வச்சேன். அப்ப தான் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து குடும்ப வறுமையைப் போக்க திருப்பூர் வேலைக்கு வந்திருந்த விமலாவை பார்த்தேன். இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. அப்ப எனக்கு 22 வயது விமலாவுக்கு 21 வயது. தனியாகக் கடை வைத்து 6 மாதத்தில் எனக்கு இடது காலில் முழங்காலுக்கு கீழே தசைப் பகுதியில் சிறிய கட்டி வந்தது. திருப்பூரில் சில மருத்துவர்களிடம் காட்டினேன், சரியாகல.

ஒரு நாள் குளிக்கப் போனபோது பாத்ரூம் போனால் இடது கால் அப்படியே மடங்கி தொடையோட ஒட்டிக் கொண்டது நண்பர்கள் என்னைத் தூக்கி வந்து சில மருத்துவர்களிடம் காட்டியும் பயனில்லை. புதுக்கோட்டை வந்தாச்சு. அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை கிடைக்கல. திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம். பல நாள் மருத்துவம் பார்த்தும் ஏதும் சரியாகல. அதன் பிறகு பணம் இல்லை. கீரனூர் ஒடுகம்பட்டி தர்காவில் என்னை கொண்டு வந்து தங்க வச்சுட்டாங்க.

அங்கே வந்த ஒரு அண்ணன் என்னைப் பற்றி விசாரித்துவிட்டு, புதுக்கோட்டை டாக்டர் செந்தில்குமாரிடம் போங்க குறைந்த செலவில் நல்ல சிகிச்சை கிடைக்கும் என்றார்கள். அதன்பிறகு, திருப்பூரில் நான் ஆசை ஆசையாக வைத்த கடையை விற்று நண்பர்களிடம் கடன் வாங்கி மீண்டும் சிகிச்சைக்கு சென்றோம். டாக்டர் செந்தில்குமார் பார்த்துவிட்டு ஏதோ ஸ்லோ பாய்சன் ஏறியிருக்கும் அதனால தான் இப்படி ஆகுதுனு சொன்னார். அதற்கு முன்பே என் காலில் பெரிய ஓட்டை ஏற்பட்டு எழும்பு, நரம்புகள் வரை தெரிந்தது.


தை பூசத்தில் தான் நான் பிறந்தேன். எனது 23 வது பிறந்த நாள் அன்று மருத்துவமனைக்குப் போக, எனது காலை காரில் தூக்கி வைத்த போது என இடது கால் தனியாக கழன்று விழுந்துவிட்டது. எலும்பு மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. டாக்டர் அந்த எழும்பை அகற்றினார். வேறு யாருக்கும் இது போல நடக்கக் கூடாது என்று கண்களைத் துடைத்துக் கொண்டவர்.


இடது காலில் ஏற்பட்ட பாதிப்பு வலது காலுக்கும் மாறியது. அடுத்த சில மாதங்களில் சில விரல்களை அகற்றினார்கள். அப்போதும் சரியாகவில்லை. அடுத்த சில நாளில் கணுக்கால் வரை வெட்டி எடுக்கப்பட்டது. இரு கால்களையும் இழந்த போது இனி எப்படி வாழ்வது.. ஏன் வாழ வேண்டும். சொந்த வேலைகளைக் கூட நாம செய்ய முடியாமல் ஒரு ஜடமாக அடுத்தவருக்கு பாரமாக இருக்க வேண்டுமா என்று எல்லாம் சிந்திக்க தோன்றியது. அந்த நேரங்களில் எனக்கு தற்கொலை எண்ணங்களும் தோன்றியது. ஆனால் சிகிச்சைக்காக என் நண்பர்கள் என்னை நம்பி கொடுத்த ரூ 4 லட்சம் கடனை அடைக்காமல் செத்தால், பின்னால் என்னை என்ன நினைப்பார்கள் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு சொந்த ஊருக்கு வந்துட்டேன்.


அது வரை என் காதல் மனைவி விமலாவுக்கு என் கால்கள் எடுக்கப்பட்டது தெரியாது. என் நண்பர்கள் மூலம் தகவல் அறிந்து உடனே கிளம்பி வந்துவிட்டார். அவரது வீட்டார் விமலாவுக்கு வேறு திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லியும் கேட்கவில்லை. வாழ்ந்தால் அவரோடு தான் வாழ்வேன் என்று சொல்லிவிட்டு என் வீட்டுக்கே வந்துவிட்டார். அன்று முதல் இன்று வரை ஒரு தாயைப் போல என்னைக் கவணித்துக் கொள்கிறாள் என் மனைவி.


இயற்கை உபாதையைக் கழிக்கக் கூட என்னால் வெளியே போக முடியாது. வீட்டுக்குள்ளேயே நக்கரைத்து தான் அடுத்த இடத்திற்குப் போவேன். ஒரு சேரில் ஓட்டை போட்டு அதில் தான் அமர்ந்து வீட்டுக்குள்ளேயே 1, 2 -க்கு போவேன். அதை முகம் சுளிக்காமல் என் மனைவி இன்று வரை அள்ளிக் கொட்டுகிறாள். விவசாயக் கூலி வேலை கிடைத்தால் போவாள். அந்தச் சம்பளத்தில் தான் குடும்பம் ஓடுது. மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்காக பல முறை போராடி இப்ப தான் ரூ. 1,500 உதவித் தொகை கிடைக்கிறது.

இதற்கிடையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் மனைவிக்கு விவசாய வேலையும் கிடைக்கவில்லை. அதனால் 100 நாள் வேலைக்காக 3 வருசமாகப் போராடி போன வாரம் தான் அந்த வேலைக்கும் அட்டை கொடுத்தாங்க. குழந்தையையும் வச்சுகிட்டு வேலைக்குச் சிரமப்பட்டு போய் வருகிறாள். நானும் குழந்தையைப் பார்த்துக்க முடியல. அந்தக் குழந்தைக்கும் சத்தான உணவுகள் கொடுக்க வசதி இல்லாமல் சத்துக்குறைபாடு ஏற்பட்டுள்ளது.


என் மனைவி வேலைக்குச் சென்றுவிட்ட நேரங்களில் எனக்கு 1, 2 க்கு வந்தால் அடக்கிக் கொள்வேள். அப்படி அடக்குவதால் வயிற்று வலி வரும் அதையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அவள் வந்தபிறகு தான் எல்லாமே போவேன். இதனால் எனக்கு உடம்பும் எடை போடத் தொடங்கிருச்சு. பணம் இல்லாமல் உடல் பரிசோதனை கூட செய்து கொள்ள முடியாமல் தவிக்கிறேன். வங்கிக் கடனைக் கட்ட முடியல. என் தாயைப் போல வந்திருக்கும் மனைவி விமலா உழைப்பில் தான் என் குடும்பம் ஓடுது. கரோனா காலத்தில் பாதி நாள் பட்டினி தான். என் தெய்வம் என் மனைவி தான்.

இப்ப எனக்குத் தேவை ஒரு கழிவறை. கழிவறை கிடைத்தால் என் மனைவி நிம்மதியாக இருப்பாள். அடுத்து என் பிழைப்பிற்காக ஒரு சிறிய மளிகைக் கடை வைக்க உதவினால் அதிலிருந்து என் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வாங்கிய கடனை அடைக்க முயற்சி செய்வேன். அதே போல செயற்கை கால்கள் கிடைத்தால் நக்கரைக்காமல் அடியெடுத்து நடந்து சென்று என் வேலைகளையாவது நான் செய்து கொள்வேன் என்று சொல்லி முடிக்கும் போது அவர் கண்கள் அவரது மனைவி.. இல்லை இல்லை மனைவி வடிவில் உள்ள தாய் விமலாவை தேடியது.


அருகில் கைக்குழந்தையுடன் நின்ற விமலா நம்மிடம்.. இவர் நல்லா இருக்கிற காலத்தில் திருப்பூரில் நான் வேலை செய்த கம்பெனிக்கு வரும் போது இருவருக்கும் பழக்கம். இருவரும் வெவ்வேறு ஜாதிகள்.. பிழைக்கப் போன இடத்தில் ஜாதி பார்க்கமுடியவில்லை. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். தனியாகக் கம்பெனி தொடங்கினார். ஓரளவு வருமானம் வரத் தொடங்கும் போது கால் பிரச்சனை வந்தது. திருப்பூரில் சிகிச்சை சரியில்லை என்பதால் சொந்த ஊருக்கு வந்தார். நான் திருப்பூரிலேயே இருந்தேன். வந்து சில மாதங்களில் வந்துவிடுவார் என்று பார்த்தேன் வரவில்லை.

அவரது நண்பர்களிடம் கேட்டப்பதான் இவருக்கு கால்களை எடுத்துட்டாங்கன்னு சொன்னாங்க. அதைக் கேட்ட பிறகு என்னால் அங்கே இருக்க முடியவில்லை. உடனே கிளம்பி வந்துட்டேன். எங்க வீட்ல கூட சொன்னாங்க 2 கால்களும் இல்லாதவரோட எப்படி வாழ்வ, உனக்கு நம்ம உறவுகளிலேயே வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கட்டிக் கொடுக்கிறோம்னு. நாங்கள் உண்மையாகக் காதலித்தவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க முடியாது. இந்த இக்கட்டான நிலையில் அவருக்குப் பணிவிடை செய்ய நான் போக வேண்டும். அது தான் எங்கள் காதலுக்கு நான் கொடுக்கும் மரியாதை என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அன்று முதல் அவரை ஒரு குழந்தை போல பக்கத்தில் வைத்தே பார்த்துக் கொள்கிறேன். இப்ப எங்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறான். அவனோடு சேர்த்து 2 குழந்தைகளைப் போலத்தான் நான் பார்க்கிறேன். வீட்டில் எந்த வசதியும் இல்லை. அதனால் விவசாய வேலைக்குப் போய் அந்த வருமானத்தில் தான் பிழைப்பு. இப்ப 2 வாரமாக 100 நாள் வேலைக்குப் போறேன். எங்கே போனாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரை பார்க்க வந்துவிடுவேன். நான் வரும் வரை காத்திருப்பார். எங்கள் வாழ்க்கை நல்லா இருக்கு என்றவர். அவருக்கு செயற்கை கால் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஒரே இடத்தில் இருப்பதால் உடல் எடை கூடுவதோடு மனதளவிலும் பாதிக்கப்பட்டு வருகிறார். நான் இருக்கும் வரை அவரை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வேன். அது தான் எங்கள் காதலுக்கு கொடுக்கும் மரியாதை என்றார்.


இந்த ராஜாவின் வாழ்க்கை துயரத்தைப் போக்க உதவிக்கரம் நீட்ட விரும்பும் நல்ல உள்ளங்கள் தாராளமாக உதவிகள் செய்யலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT