Skip to main content

கரோனாவில் சிறுவன் இறப்பு!!! அலுவலர்களே உறவுகளாய் நின்று அடக்கம் செய்தோம்... சுகாதார மேற்பார்வையாளரின் உருக்கம்..

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
The melting of a health supervisor

 

கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் சிலர் மரணத்தை தழுவியுள்ளனர். இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் கொடுத்தால் மேலும் தொற்று பரவும் என்பதால், அரசு அலுவலர்களே ஆழக்குழி தோண்டி அதில் கிருமி நாசினி தெளித்து அடக்கம் செய்து வருகிறார்கள். தூரமாய் நின்று உறவினர்கள் கண்ணீர் வடித்துச் செல்லத்தான் முடியும். இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், சுகாதார வருவாய் அலுவலர்கள், காவல் துறையினர் இணைந்து அடக்கம் செய்துள்ளதை கந்தர்வகோட்டை சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார் தனது முகநூலில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்..

அவரது பதிவு,

கந்தர்வக்கோட்டை சுகாதாரத்துறை சார்பாக 27/06/20 அன்று  நள்ளிரவு  ஒரு மணிக்கு, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஒரு அலைபேசி தகவல், "தங்கள் பகுதியை சார்ந்த 13 வயது சிறுவன் கரோனா தொற்றினால் இறந்துவிட்டதாகவும், அவரின் உடலை உறவினர் வசம் ஒப்படைக்க இயலாது சுகாதார மேற்பார்வையாளர் ஆகிய நீங்களும், வட்டாட்சியர் இருவரும் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று தகவல் வர, அத்தகவலை அப்போதே  துணை இயக்குநர் கலைவாணி (சுகாதாரப் பணிகள்- அறந்தாங்கி) அவர்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டு, தொடர்ச்சியாக  அவர் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விடிந்தும் விடியாத பொழுதில் சம்மந்தப்பட்ட ஊராட்சி தலைவரை அணுகி மருத்துவ முறைப்படி, பத்தடி ஆழத்தில் குழிதோண்டி புதைக்க ஏற்பாடுகள் செய்த நிலையில் எதற்காக இந்தக் குழி என்று தெரிந்ததும் குழிதோண்டிய JCB இயக்குநர் பாதியில் ஓடிவிட உடன் எங்களுடன் வந்த பணியாளர்களையும், கிராமத்து இளைஞர்கள் சிலரையும் கொண்டு குழிதோண்டி, ஒரு அடிக்கு ப்ளீச்சிங் பவுடர்  நிரப்பிய பின்னர்,  மருத்துவ கல்லூரிமருத்துவமனையில் கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர் ஆகிய நான், அப்பகுதி சுகாதார ஆய்வாளர் ஆகிய நால்வர் முன்னிலையில்,  உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பகட்டுவான்பட்டி மயானம் வந்தபோது, உடலை அடக்கம் செய்ய உறவுகள் யாரும் முன்வரவில்லை. அவர்களை அழைப்பது இந்த நேரத்தில் கூடாது சொந்தமாக நின்று சுகாதாரத்துறையும், காவல்துறை ஆய்வாளரும், கிராம நிர்வாக அலுவலரும் நின்று அந்த பிஞ்சின் உடலை அடக்கம் செய்தோம் என்கிறது அந்தப் பதிவு.

உயிர் பயத்தால் உறவுகள் வராவிட்டாலும் உறவுகளாய் நின்று சிறுவனின் உடலை அடக்கம் செய்த சுகாதார, வருவாய், காவல் துறை, ஊராட்சி நிர்வாகத்தை கிராம மக்கள் பாராட்ட தயங்கவில்லை.

 

சார்ந்த செய்திகள்