
அய்யா பசிக்குது என்று கடைக்கடையாக வருவோருக்கு ஒருவேளை உணவுக்கான பணம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. அப்படியானவர்களின் பசியைப் போக்க இளைஞர்களாக இணைந்து அறந்தாங்கியில் உணவு வங்கியைத் திறந்துள்ளனர். தொடங்கிய நாளிலேயே வரவேற்பைப் பெற்றுள்ளது 'உணவு வங்கி'.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆபிஸ் ரோடு லட்சுமிவிலாஸ் வங்கி எதிரில் இந்த உணவு வங்கி இளைஞர்களால் திறக்கப்பட்டுள்ளது. அதாவது கண்ணாடிப் பெட்டியில் உணவுப் பொட்டலங்களை வைத்து விடுகிறார்கள். பசிக்கும் யாராக இருந்தாலும் வந்து உணவுப் பொட்டலத்தை எடுத்துச் செல்கிறார்கள். இன்று (21.09.2020)காலை தொடங்கிய உணவு வங்கியில் பலர் காலை, மதியம் வைக்கப்பட்ட உணவுகளை எடுத்துச் சென்றுள்ளனர். எஞ்சிய உணவுப் பொட்டலங்களை மாலையில் கோவிலில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்கி உள்ளனர்.
உணவு வங்கி தொடங்கியவர்களில் ஒருவரான சிவக்குமார் பேசுகையில், ''ஒவ்வொரு நாளும் பலர் பசிக்கிறது என்று கடைக் கடையாக ஏறி இறங்கி போறாங்க. அதனால தான் இளைஞர்களாக ஆலோசித்து உணவு வங்கி திறக்க முடிவெடுத்தோம். அதன்படி கண்ணாடிப் பெட்டி தயார் செய்து அதில் காலை டிபன், மதியம் சாப்பாடு வைத்தோம். பசி என்று வருவோர்களிடம் இதில் உணவு உள்ளது என்று சொன்னதும் போய் எடுத்துச் சென்று பசியாறிச் சென்றனர். இதைப் பார்க்கும் போது மனம் மகிழ்ந்தோம். இந்தப் பெட்டியில் உணவு வைக்க விருப்பம் உள்ளவர்கள் கொண்டு வந்து வைக்கலாம். தேவைப்படுவோர் திறந்து உணவைஎடுத்துக் கொள்ளலாம். முதல் நாளில் 10 பேருக்கு மேல் உணவு எடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து செயல்படுத்த இருக்கிறோம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)