ADVERTISEMENT

எடப்பாடியின் இந்தப் பயணமே கோட் சூட் போட்டு இமேஜை உயர்த்தத்தான்...அதிர வைக்கும் ரிப்போர்ட்!

10:52 AM Sep 05, 2019 | Anonymous (not verified)

அமெரிக்காவில் உள்ள பண்ணையில் கன்றுக்குட்டிக்கு தீவனம் ஊட்டும் தமிழக முதல்வரின் ஸ்டைல், சோஷியல் மீடியாக்களில் வைரலாகின. இங்கிலாந்து பயணமும் அப்படித்தான். 28-ஆம் தேதி முழுவதும் துபாய் வழியாக லண்டன் பயணமான எடப்பாடி, 29-ஆம் தேதி முழுவதும் லண்டன் கிங்ஸ் மருத்துவமனையையே சுற்றிவந்தார். காலையில் கோட் சூட்டோடு கலக்கிய எடப்பாடி, மாலையில் வடஇந்திய சர்வானி கோட் போட்டிருந்தார். லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவ ஒப்பந்தம், ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கிங்ஸ் மருத்துவமனையின் மொட்டை மாடியில் இறங்கும் இடத்தைச் சென்று பார்வையிடுதல், அத்துடன் ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்துடன் மலேரியாவை உருவாக்கும் கொசுக்களை அழிக்கும் தொழில்நுட்பத்தை பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல், 29-ஆம் தேதி மாலை 7:00 மணிவரை கிங்ஸ் மருத்துவமனைக்கு தன்னை அழைத்துச் சென்ற டாக்டர் பார்த்தி சீனிவாசன் மற்றும் டாக்டர் மேத்தா ஆகியோர் துணையுடன் எடப்பாடி சுற்றினார்.

ADVERTISEMENT



29-ஆம் தேதி மாலை 7:00 மணிக்கு ஹைட் பார்க் ஹோட்டலுக்குத் திரும்பிய எடப்பாடி அந்த ஹோட்டலை விட்டு நகரவில்லை. எடப்பாடியுடன் வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத் துறை செயலாளர் பியூலா ராஜேஷும் மட்டும் லண்டனைச் சுற்றிவந்தார்கள். மறுநாள் லண்டனை சுற்றிப் பார்க்க எடப்பாடி செல்கிறார். அதற்கு முன்னோட்டமாக பியூலாவும் விஜயபாஸ்கரும் சுற்றினார்கள் என விளக்கம் அளிக்கப்பட்டது. ஜெ.வுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்து கார் கதவு திறந்த பெருமாள்சாமிதான் இப்போது எடப்பாடிக்கும் கதவு திறக்கிறார்.

ADVERTISEMENT



முதல்வரின் பயண விபரக் குறிப்புகள் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் மூலம் நக்கீரனுக்கு கிடைத்தது. அதை அப்படியே வாசகர்களின் பார்வைக்காக தருகிறோம். 29-ஆம் தேதி இரவு ஏழுமணிக்கு ஓட்டலை அடையும் எடப்பாடி 30-ஆம் தேதி காலை 6:00 மணிக்கு துயிலெழும்புகிறார். ஏழேகால் மணிக்கு காலை உணவைச் சாப்பிடுகிறார். எட்டுமணி ஐந்து நிமிடத்தில் ஓட்டலிலிருந்து புறப்படுகிறார். புனித பவுல் கதீட்ரல் என்கிற பழம்பெருமை மிக்க சர்ச்சை சுற்றிப் பார்க்கிறார். அந்த சர்ச்சில் 8:30 முதல் 9:00 மணிவரை அரைமணி நேரம் அமைதியாக உலாவருகிறார்.



9:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ட்ரபால்கர் ஸ்கொயர் எனப்படும் லண்டனில் உள்ள பொதுமக்கள் கூடும் சதுக்கத்திற்குச் செல்கிறார். பத்துமணி முதல் பதினொரு மணிவரை டுசாட்ஸ் மெழுகு மியூசியத்திற்குச் சென்று அதைப் பார்வையிடுகிறார். டுசாட்ஸ் என்கிற பெண்மணி பிரெஞ்சு புரட்சியாளர்களின் உருவத்தை மெழுகில் செதுக்கி உருவாக்கியுள்ள அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திரமோடியின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்க்கிறார். அங்கிருந்து அரைமணி நேரம் பயணம் செய்து, தேம்ஸ் நதிக்கரையில் லண்டனின் கண் எனப்படும் 135 மீட்டர் உயரமும், 120 மீட்டர் விட்டம் கொண்ட ராட்டினத்தில் அமர்ந்து சுற்றினால் லண்டனை முழுமையாகப் பார்க்க முடியும். அதில் ஏறி அரைமணி நேரம் லண்டனைப் பார்க்கிறார் முதல்வர். அங்கிருந்து அரைமணி நேர பயணமாக பிரிட்டிஷ் மியூசியத்தை மதியம் 1:00 மணிக்கு சென்றடைவது பயணத்திட்டம். உலகையே தனது குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியா உட் பட பல்வேறு நாடுகளிலிருந்து திரட்டிய பொருட்களை ஒரு அருங்காட்சியகமாக வைத்துள்ளது.

அங்கிருந்து லண்டன் மாநகரை 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஷார்து என்கிற கட்டிடத்திற்குச் செல்கிறார். அலுவலகங்கள், உணவகங்கள் மிகுந்த கண்ணாடியால் ஆன அந்த கட்டிடத்தில் உள்ள ஷார்து உணவகத்தில் இரண்டு மணி முதல் மூன்று மணிவரை உணவருந்துகிறார்.

மூன்றுமணிக்கு அங்கிருந்து புறப்படும் எடப்பாடி ஒன்றரை மணிநேரம் பயணம் செய்து ஐ.பி. ஸ்விட்ச் மற்றும் ஸ்மார்ட் கிகிட் ஸஃபோல்க் என்னும் கம்பெனியை விசிட் செய்கிறார். எரி சக்தித்துறை அமைச்சரான தங்கமணி இல்லாமல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் சம்பத்தை வைத்து எடப்பாடி ஐந்து மணி முதல் ஐந்தே முக்கால்வரை பேசுகிறார். அங்கிருந்து இரண்டுமணி நேரம் பயணம் செய்து 8 மணிக்கு வீராசாமி ரெஸ்டாரெண்ட் என்கிற இந்தியரின் ஓட்டலில் உணவு அருந்துகிறார். 30-ஆம் தேதி 8 மணிக்கு மேல் ஓட்டலுக்குத் திரும்பும் எடப்பாடி 31-ந் தேதி முழுவதும் அவர் எங்கு செல்கிறார் என அறிவிக்கவில்லை. ஒன்றாம் தேதி காலை பத்து மணிக்கு உலகப் புகழ்பெற்ற பழமையான லண்டன் தோட்டமான கெவ் தாவரவியல் பூங்காவை தென்மேற்கு லண்டனுக்குச் சென்று பார்வையிட்டு விட்டு மாலை 5:00 மணிக்கு லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்திலிருந்து அமெரிக்கா புறப்படுகிறார். இதுதான் அரசு ஷெட்யூல்.


இதில் 30-ஆம் தேதி இரவு 8:00 மணி முதல் 1-ம் தேதி காலை 10:00 மணிக்கு தாவரவியல் பூங்காவுக்கு செல்லும்வரை எந்த நிகழ்ச்சியும் இல்லை. அதேபோல் 1-ஆம் தேதி 10:00 மணிக்கு பூங்காவுக்கு சென்றதற்குப் பிறகு அமெரிக்காவிற்கு ப்ளைட் ஏறும்வரை எந்த நிகழ்ச்சியும் இல்லை. கிட்டத்தட்ட 35 மணிநேரம் எடப்பாடி எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை.


எடப்பாடிக்கு லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் 30-ஆம் தேதி இரவு ஒரு சிறிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக 24 மணி நேர ஓய்வு எடுக்க மருத்துவர்கள் சொன்னார்கள். அந்த ஓய்வுக் காகத்தான் 31 ஆகஸ்ட் 2019 அன்று எந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள். "இல்லை இந்தப் பயணமே கோட் சூட் போட்டு இமேஜை உயர்த்தத்தான்' என ஒரு சிலரும், "பண முதலீடுகளுக்கான பயணம்' என இன்னொரு தரப்பினரும் ஏகப்பட்ட சந்தேகங்களைக் கிளப்புகிறார்கள். முதல்வரின் "அந்த ஒரு நாள்' பல சந்தேகங்களை உருவாக்குகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT