Skip to main content

"ஏன் நீங்கள் முதல்வருடன் போகவில்லையா" வெளிநாடு பயணத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்! 

ஜெ. உயிருடன் இருந்தவரை எந்த அமைச்சரும் வெளி நாட்டிற்கு சென்றதில்லை. இப்பொழுது முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் உலகம் சுற்றும் வாலிபர்களாக இருக்கிறார்கள் என ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார் அ.தி.மு.க.வின் ர.ர. ஒருவர்.  28-ம் தேதி முதல்வர் எடப்பாடி வெளிநாட்டிற்குப் போவதற்கு முன்பே ஒரு டீம் புறப்பட்டுச் சென்றுவிட்டது. 31-ம் தேதி இன்னொரு டீம் புறப்பட தயாராகி வருகிறது. முதல்வருக்கு முன்பே கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து புறப்பட்டுச் சென்றார். அவர் பேண்ட் மற்றும் கலர் சட்டையில் பின்லாந்தில் இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வந்து கொண்டிருந்தன. 31-ம் தேதி ஆர்.பி.உதயகுமாரும், ராஜேந்திர பாலாஜியும் புறப்பட்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்கு முதல்வரின் விசிட்டிற்கு உதவி செய்ய பறக்கிறார்கள். எம்.சி.சம்பத் முதல்வருக்கும் தொழிலதிபர் இந்துஜாவிற்கும் நடைபெறும் தொழில் முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உதவி செய்ய லண்டனுக்கு போயிருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வருடன் லண்டனுக்கு போயிருக்கிறார்.
 

eps

முதல்வருடன் மக்கள் தொடர்பு அதிகாரி எழிலழகன், முதல்வரை அழகாக படமெடுக்க பிலிம் டிவிஷன் பாபு, முதல்வருக்கு அந்தரங்க உதவிகள் செய்ய உதவியாளர் கிரிதரன், முதல்வரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டுபேர். அத்துடன் சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ், தொழில் துறை செயலாளர் என 21 பேர் கொண்ட அணியுடன் புறப்பட்ட முதல்வர், துபாய் விமான நிலையத்தில் இரண்டு மணி நேர ஓய்வுக்குப் பிறகு நேராக லண்டனுக்கு சென்றார்.

 

admkமுதல்வர் வெளிநாடு போனவுடன் கால்நடை தொடர்பாக தெரிந்து கொள்ள ஆஸ்திரேலியா பறக்கிறார் உடுமலை ராதாகிருஷ்ணன். "ஏன் நீங்கள் முதல்வருடன் போகவில்லையா' என போக்குவரத்துத்துறை விஜய பாஸ்கரை கேட்டால் "நான் இப்பதானே லண்டனுக்கு மின்சார பஸ் விஷயமா போயிட்டு வந்தேன்' எனப் பதில் வருகிறதாம். உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியாவிற்கு பறந்து கடல்நீரை குடிநீராக்குவது பற்றி பேசிவிட்டு வந்திருக்கிறார். சமீபத்தில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அங்கிருந்த ஒருவர் அழைத்ததற்காக மொரீசியஸ் சென்று வந்தார். மறுபடியும் பின்லாந்து செல்லவிருக்கிறார். அமைச்சர் நிலோபர் கபில் ஒரு விருது வாங்குவதற்காக ரஷ்யாவிற்கு சென்றிருக்கிறார்.

 

admkஇப்படி முதல்வரும் அமைச்சர் அந்தஸ்தில் உள்ள 11 பேரும் உலகம் முழுக்க சுற்றுவதற்கு மட்டும் தோராயமாக 300 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடுகிறார் நிதித் துறையைச் சேர்ந்த அதிகாரி. கடம்பூர் ராஜு சென்றது அவரை ஒருவர் திருமணத்திற்காக வரச் சொல்லி அழைத்ததற்காக. நிலோபர் கபில் விருது வாங்க சென்றார். இவையெல்லாவற்றையும் அரசுப் பயணமாக மாற்றி அரசாங்க கஜானாவை காலி செய்கிறார்கள் என்கிறார்கள் நிதித்துறையை சேர்ந்தவர்கள்.


யாரும் தனியாக செல்லவில்லை. ஒவ்வொருவரும் அதிகாரிகளுடன் தான் செல்கிறார்கள். முதலமைச்சரும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த ஜூன் மாதம் 19 மற்றும் 20 தேதிகளில் அப்பல்லோவில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு சில பிரச்சினைகள் இருப்பதாக சொல்லப்பட்டது. அவருக்கு கடும் வெயிலால் ஏற்படும் உடல் சூடு பிரச்சினைகள், பல் வலி, கடுமையான பேதி என பல காரணங்கள் சொல்லப்பட்டன. கண்ணில் பிரச்சினை என தனியாக மருத்துவம் பார்த்த எடப் பாடி, பல்லில் பிரச்சினை என சில நாட்கள் யாரையும் சந்திக்காமல் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டார். அவருக்கு உடலில் சீரியஸான பிரச்சினை இருக்கிறது என செய்திகள் வெளியாயின. ஜெ.வுக்கு சிகிச்சை அளித்து பெற்ற அனுபவத்தால் அப்பல்லோ மருத்துவமனை முதல்வருக்கு சிகிச்சை அளித்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஜெ.வின் மரணத்திற்கு காரணம் அப்பல்லோ என ஆறுமுகசாமி கமிஷனில் தீர்ப்பெழுதினால் முதல்வர் எடப்பாடி அங்கே தானே சிகிச்சை எடுத்தார் என்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்பதால் வெளிநாட்டுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள விரும்பினார் எடப்பாடி. அதில் ஜெ.வுக்கு சிகிச்சையளித்த டாக்டர் ரிச்சர்டு பீலேவின் மருத்துவமனைக்குப் பதிலாக ஜெ.வுக்கு சிகிச்சையளிக்காமல் வந்து பார்த்து ஆலோசனை மட்டும் சொன்ன டாக்டர் முகம்மது ஈரேல் வேலை செய்யும் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது.

முதல்வருடன் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அந்த மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் கொண்டு வர செல்கிறார் என அறிவித்தார். மருத்துவமனை என்பது கொரியர் கம்பெனி போன்று உலகம் முழுவதும் கிளைகளை திறப்பதில்லை. பிரபல ராமச்சந்திரா மருத்துவமனை ஹாவர்டு என்கிற சர்வதேச மருத்துவமனையின் தகவல் பரிமாற்ற கிளையை வைத்திருக்கிறது. அதுபோன்ற ஒரு கிளையைத் தான் நாங்கள் திறக்க திட்டமிட்டிருக்கிறோம் என லண்டன் கிங்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  admkஇதில் உண்மை என்னவென அப்பல்லோ மருத்வமனை வட்டாரங்களை கேட்டோம். முதல்வராக இருந்த ஜெ.வுக்கு IRRITABLE BOWEL இருந்தது. அது ஜெ.வுக்கு முற்றிப் போய் இருந்தது. கழிவறைக்குச் செல்லும்போது ஒரு வித வலி இருக்கும். அடிக்கடி செல்வதைத் தவிர்க்க டையபர் அணிந்த ஜெ., அதனால் உருவான ஈகோலி பாக்டீரியா இதயத்திலும் நுரையீரலிலும் தாக்க செல்சிஸ் என்கிற நிலைக்குப் போனார். முதல்வர் பொறுப்பில் இருப்பதால் ஜெ. போல எடப்பாடிக்கும் ஸ்ட்ரெஸ் இருக்கும். அதன் அடுத்தகட்ட பிரச்சினைகளால் முற்றாமல் இருக்க பரிசோதிக் கலாம் என யூகிக்கிறோம் என்கிறார்கள்.

எடப்பாடி மருத்துவ சிகிச்சைக்காகவும் பரிசோதனைகளுக்காகவும் செல்கிறார் என்பதை அவரது பயண திட்டத்தில் நிறைய இடை வெளிகளோடு இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்கள் அ.தி. மு.க.வினர். எடப்பாடியின் பயணத் திட்டத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 27-ம் தேதி நள்ளிரவு வரை அரசு மருத்துவர்களின் போராட்டத்தில் சிக்கிக் கொண்டார். போராட்ட பிரதிநிதிகளின் காலில் விழாத குறையாக முதல்வரின் வெளி நாட்டு பயணத்தை எடுத்துச் சொல்லி மறுநாள் காலை முதல்வருடன் புறப்பட்டுச் சென்றார் விஜயபாஸ்கர். முதல்வரின் பயணத்திற்காக மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தையும் அவசர அவசரமாக முடிவுக்கு கொண்டு வந்தார் மின்துறை அமைச்சர் தங்கமணி. "நான் ஊரில் இல்லாதபோது எந்த போராட்ட மும் நடக்கக் கூடாது. குறிப்பாக, ஜாக்டோ ஜியோ போராட்டம்' என்ற எடப்பாடி புறப்படுவதற்கு முன்பு துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சை சந்தித்தார். 25-ம்தேதி வரை வெளிநாடு செல்லும் எடப் பாடி முதல்வர் பொறுப்புகளை தன்னிடம் தருவார் என்கிற எதிர்பார்ப்பு ஓ.பி.எஸ்.சுக்கு இருந்தது. 26-ம் தேதி பயண திட்டம் வெளியாகும் வரை முதல்வர் பொறுப்பு யாருக்கு மில்லை என்பதை மர்மமாகவே வைத்திருந்தார் எடப்பாடி.

ஏற்கனவே ஒற்றைத் தலைமையில் அ.தி.மு.க. என்பதை வலியுறுத்தி வரும் பா.ஜ.க., வெளி நாட்டு பயண நேரத்தில் ஓ.பி.எஸ்.சை வைத்து விளையாடி விடும் என்பதுதான் எடப்பாடியின் கணக்கு. ஓ.பி.எஸ். சந்திப்பு முடிந்ததும் விமான நிலையம் வந்த எடப்பாடி ஓ.பி.எஸ்.சை விட செல்வாக்கானவர் என காண்பிக்க தனியாக ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டிருந்தார். அதற்காக எடப்பாடியுடன் ஜெ.வின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தூத்துக்குடி சண்முகநாதனை அழைத்தார். சண்முகநாதன் கூவத்தூர் முகாம் நடக்கும் போது ஓ.பி.எஸ். அணியில் இணைந்தவர். தூத்துக்குடியிலிருந்து மந்திரி பதவியை எதிர் பார்ப்பவர். அவரை ஏர்போர்ட்டில் ஜெ.வுக்கு தருவது போல பெரிய பூங்கொத்தை கொடுத்து காலில் விழ ஏற்பாடு செய்தார். அத்துடன் விமான நிலையம் காஞ்சி மாவட்டத்தில் வருவதால் அந்த மாவட்ட நிர்வாகிகளை ஒவ்வொருமுறை ஜெ. விமான நிலையம் வரும் பொழுதும் மலர்க் கொத்துக்களுடன் காலில் விழ வைப்பார். அதே போல் எடப்பாடியின் காலில் நிர்மலா பெரியசாமி, மரகதம் குமரவேல், டி.கே.எம்.சின் னையா, சோமசுந்தரம் போன்றவர்கள் விழுந்தபோது எந்த ரியாக்ஷனும் காட்டாமல் எதிர்பார்த்தது போலவே நடந்து கொண்டார். அடுத்த கட்டமாக ஓ.பி.எஸ்., எடப்பாடி காலில் விழும் காலம் வரும் பாருங்கள்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

எடப்பாடிக்கு முன்பே அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடு சென்று விட்டார்கள். அவர்களுடன் ஒரு தொலைக்காட்சியின் லைவ் உபகரணங்களும் சென்றிருக்கின்றன. லண்டனில் எடப்பாடி கோட் சூட் போட்டுக் கொண்டு, மருத்துவ சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடும் பணிகள் லைவ் ஆக தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. ரகசிய அசைவுகளையெல்லாம் அவரது குடும்ப உறுப்பினர்கள் மேற்கொள்ள எடப்பாடியின் பயணம் அமைந்து வருகிறது. 300 கோடி செலவில் முதல்வரும் அமைச்சர்களும் வெளிநாடு பறக்க, முதலீடாக அரசுக்கு எத்தனை கோடி வரும் என பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். ஏகப்பட்ட சஸ்பென்ஸ்களுடன் அமைந்துள்ளது எடப்பாடியின் பயணம்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்