ADVERTISEMENT

அப்துல்கலாம் பாதையில் பணியாற்றும் இளைஞர்

01:02 PM May 11, 2018 | kamalkumar

தூக்கத்தில் வருவதல்ல கனவு உன்னை தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே லட்சியக்கனவு என்று கூறி இளைஞர்களின் மனதில் ஆழமான நம்பிக்கை விதையை விதைத்து மறைந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். அவரின் மறைவுக்குப் பின்னர், அவரது கனவை, அவரது வழியிலேயே நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணத்தில், அவரது பெயரிலேயே டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி பெயரளவிலவோடு நிறுத்திக்கொள்ளாமல் அதை அரசு அனுமதி பெற்று செயல்படும் அமைப்பாக மாற்றி, தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக செயல்படுத்தி வருபவர்தான் செங்கல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெயராஜ்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இவரது அமைப்பில் தமிழ்நாடு, புதுவை மாநிலம் முழுவதும் 15000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள். இந்த அமைப்பின் மூலம் கல்வி மற்றும் பசுமை உட்பட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். கடந்த 2015இல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட மக்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய உதவிகளை இவர் தன் குழுவினரோடு சேர்ந்து நேரில் சென்று வழங்கினார்கள். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் வெள்ளத்தினால் குடிசை வீடுகளை இழந்த 20 ஏழை குடும்பங்களுக்கு சவுதி அரேபியா ஜெத்தா தமிழ்சங்கத்தின் உதவியோடு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவசமாக வீடுகளையும் கட்டி வழங்கினார்கள்.

பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் உதவி செய்யாமல், இனி பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் பல முயற்சிகளை செய்துள்ளனர். அதில் ஒன்று, பூமி வெப்பமடைதலை தடுக்கும் முயற்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உதவியோடு பல ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி அவற்றை மாணவர்கள் பாதுகாப்பாக வளர்பதையும் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். படிக்க வசதியற்ற 100க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி மேற்படிப்பு படிக்கவும் வழி செய்துவருகிறார்கள். 'கலாமின் கனவு மாணவன்' என்ற பெயரில் நடப்பாண்டிலும் (2018-2019) 50 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் மின்சார சிக்கனம், குடிநீர் சிக்கனம், புகையிலை குறித்த விழிப்புணர்வு, பாலித்தீன் விழிப்புணர்வு, கண்தானம் குறித்த விழிப்புணர்வு, இரத்ததானம், போக்குவரத்து விழிப்புணர்வு, நீர்நிலைகளை பாதுகாப்பது போன்று 500க்கும் அதிகமான சேவைகளை செய்துவருகிறார்கள். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் சேவைகளை செய்து வரும் 100க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக 'கலாமின் சிறந்த சேவகர் 2017' என்ற விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்கள்.

இவர்களின் செயல்களை பாராட்டும் விதமாக அமைப்பின் நிறுவனர் ஜெயராஜ்க்கு அமெரிக்காவில் உள்ள SEEEDS மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள ஜெத்தா தமிழ்சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் பாரட்டி விருதுககளையும் வழங்கி உள்ளது. கடந்த மாதம் தமிழ் தேசிய பல்கலைக்கழகம் இவரின் சமூக சேவையை பாராட்டி மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கவரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவரது இலக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவது, ஐம்பது மாணவர்களை படிக்க வைப்பது. தற்போது கூடுதலாக வீடு, வீடாக சென்று வீட்டிற்கு ஒரு மரக்கன்றுகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதுபோன்ற இளைஞர்கள்தான் கலாம் கண்ட கனவு நாயகர்கள் என்பதில் ஐயமுமில்லை...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT