Skip to main content

நான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி! ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'

Published on 13/05/2018 | Edited on 02/03/2020
ramesh kanna young




நடிகனாக ஆசைப்பட்டு, முயற்சி செய்து, பாரதிராஜா, பாலச்சந்தர் வீடுகளின் முன் தவமாய் தவமிருந்து, வாய்ப்பு கிடைக்காம... பாக்யராஜைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி, 'சரி அசிஸ்டன்ட் டைரக்டராகி அப்புறம் அப்படியே நடிகராகுறதுதான் ஈஸி, சரியான ரூட்டு'ன்னு நினைச்சு... அதுக்கு முயற்சி பண்ணி... அசிஸ்டன்ட், அசோசியேட் எல்லாம் ஆகி, ஒரு படமும் எடுத்து, அது ரிலீசே ஆகாம... வெற்றி என்பதன் வாசம், உணர்வு, ஸ்பரிசம் எப்படியிருக்கும்னே பாக்காம பதிமூணு பதினாலு வருஷம் போயிருச்சு சினிமாவிலேயே... வெற்றியின் வாசம், உணர்வு, ஸ்பரிசம்தான் பாக்கல. ஆனா, தோற்றத்தைப் பார்த்திருக்கேன், சுத்தி இருந்தவங்க எல்லாத்துக்கும் கிடைச்சதே. அதனால வெற்றியின் தோற்றத்தை நல்லாவே பாத்திருக்கேன். அது அடைந்தவர்களின் தோற்றத்தை எப்படி மாற்றுமென்பதையும் பாத்திருக்கேன். என்னடா இது பன்ச் டயலாக் மாதிரி இருக்கேனு பாக்குறீங்களா? தமிழகத்தை ஆட்டி வச்ச சில பன்ச்களை நான் எழுதியிருக்கேங்க. அதை அடுத்தடுத்து சொல்றேன். 

இப்போ வெற்றிக்கு வருவோம். இப்படி எதுவுமே எனக்கு சாதகமா நடக்கலையென்றாலும் நான் ஒரு நாளும் சோகமாகவோ, விரக்தியாகவோ, சினிமாவின் மீது வெறுப்பு கொண்டோ இருந்ததில்லை. எனக்குப் பிடிச்ச இடத்துல நான் இருக்கேன் என்பதே சந்தோஷம்தான். நான் இயக்கிய முதல் பட ஷூட்டிங், முதல் நாளே தடைபட்டபொழுது கூட, என்னை சுத்தி இருந்தவங்க ஜாலியா கிண்டல் பண்ணுனாங்க. நானும் 'நம்ம லக் அப்படி'ன்னு நினைச்சு போய்க்கிட்டே இருப்பேன். ஏமாற்றம் கண்டிப்பா இருந்தது, ஆனா அதை நான் விரக்தியா மாற விட்டதேயில்லை. ஏன்னா, 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துல 'ஆண்டவா... என் கிட்ட இருக்குற எல்லாத்தையும் நான் தூக்கி மேல போடுறேன். உனக்கு வேண்டியதை எல்லாம் நீ அப்படியே எடுத்துக்க, நீயா பாத்து போடுற மிச்சத்தை நான் எடுத்துக்குறேன்'னு நான் பேசுற டயலாக் மாதிரி, அப்போ என்கிட்டே இருந்த ஏமாற்றங்களையெல்லாம் தூக்கி ஆண்டவன்கிட்ட போட்டேன், அவரா பார்த்து கீழ போட்டதுதான் இந்த வெற்றினு நான் நினைக்கிறேன். காட் இஸ் டபுள் க்ரேட்! 

 

ramesh kanna first movie



அப்படி, இப்படின்னு பதிமூணு, பதினாலு வருஷம் கழிச்சு, 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துல ஒரு நல்ல கேரக்டர் கிடைச்சு ஓவர்நைட்ல சூப்பர் ஸ்டார் ஆன மாதிரி ஒரு உணர்வு. எல்லா பத்திரிகைகளும் பாராட்டி எழுத, போன வாரம் நடந்து போன பொழுது  யாரும் கண்டுக்காத அதே தெருவுல இந்த வாரம் என்னைச் சுத்தி கூட்டம் கூட... இப்படி சினிமா என்னும் பிரம்மாண்ட லைட்டின் வெளிச்சம் என் மீதும் மெல்ல பட ஆரம்பித்த நேரம்... ஒரு நாள் தேனப்பன் ஆஃபிஸ்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தேன். தேனப்பன், அப்போ தயாரிப்பு நிர்வாகி, அதாவது தமிழில் 'ப்ரொடக்ஷன் மேனேஜர்'. அதுக்கப்புறம்  தயாரிப்பாளராகி இப்போ நடிகராகவும் கலக்குறாரு. எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்.

 


நாங்க அவரு ஆஃபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு என் பாக்கெட்ல இருந்த பேஜர்ல இருந்து சத்தம். அது, பாலச்சந்தர் சார் எனக்குக் கொடுத்த பேஜர். அதுல அவரைத் தவிர வேற யாரும் எனக்கு மெசேஜ் அனுப்புனதும் இல்ல. 'Call Me - Rajinikanth'னு போட்டு ஒரு மெசேஜ் வந்தது. 'என்னடா இது, யாராவது நம்ம கிட்ட விளையாடுறாங்களா?'னு சந்தேகம். இருந்தாலும் பரவாயில்லைனு, அந்த நம்பருக்கு ஃபோன் போட்டோம். உண்மையாகவே ரஜினி சார் நம்பர்தான் அது. போனை எடுத்து பரபரப்பா, அவரோட ஸ்டைல்ல, "என்ன ரமேஷ்கண்ணா, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் நல்லா பண்ணிருக்கீங்களாமே... எல்லோரும் பேசிக்கிறாங்க. நான் படம் பாக்கணும். ஈவ்னிங் ஏற்பாடு பண்ணுங்க"னு சொல்லிட்டு வச்சுட்டாரு. 

 

 

padayappa shooting



வச்சதும் எனக்கு கை, கால், மூளை எதுவும் ஓடல. ஒரு பக்கம் சந்தோஷம், இன்னொரு பக்கம் பதற்றம். ஒரு படம் நடிச்சு புகழ் பெற்றேனே தவிர கையில அப்போ காசு இல்லை. ஒரு படம்தானே நடிச்சுருக்கோம்? அப்புறம் தேனப்பன் உதவியோட, ப்ரி-வ்யூ தியேட்டர்ல காட்சி ஏற்பாடு பண்ணோம். ரஜினி சார் குடும்பத்தோட வந்து படம் பாத்தார். இடைவேளையின் போது ரஜினி சார் சொன்னாரு, "ரமேஷ் கண்ணா... நம்ம அடுத்த படத்துல நீங்களும் நடிக்கிறீங்க. நாம பண்ணுறோம்". அவர் சொன்ன படம்தான் 'படையப்பா'. அதுல நடிச்சது மட்டுமில்லாம கோ-டைரக்டராகவும் வேலை பார்த்தேன்.

திரைக்கதை, வசன டிஸ்கஷன்ல ரஜினி சார், ரவிக்குமார், நான் இருப்போம். என் கேரக்டர் பற்றி பேசும்போது, நான்தான் அந்த லெட்டர் கொடுக்குற சீன் ஐடியா சொன்னேன். ரஜினி, சௌந்தர்யாவை காதலிக்க ஆரம்பிக்கும்போது ஒரு லெட்டரை என்கிட்ட கொடுத்து கொடுக்க சொல்வாரு. பலமுறை முயற்சி பண்ணி கடைசி வரைக்கும், கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் கூட கொடுக்காம இருப்பது போல ஐடியா சொன்னேன். சூப்பரா இருக்குனு ஏத்துக்கிட்டாங்க. அப்போ ரஜினி சார், "நீங்க உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துல ஃபுல்லா காமெடி பண்ணுனாலும் கடைசியில ஒரு சீன்ல செண்டிமெண்ட் பண்ணியிருந்தீங்க... அது நல்லா வொர்க்-அவுட் ஆச்சு. அது மாதிரி இதுல கொண்டு போகலாம்"னு என் கேரக்டரை அவர் மெருகேத்துனாரு. அவ்வளவு அக்கறையா இருப்பார், என் மேலும், படத்தின் மேலும்.
 

ramesh kannaa thenappan



'படையப்பா' படப்பிடிப்பு தொடங்கி, மைசூர், மாண்டியானு நடந்துகொண்டு இருக்கு. அடுத்த நாள் படப்பிடிப்பைப் பற்றி பேசுறோம், நானும் கே.எஸ்.ரவிகுமாரும். "காலைல ஏழு மணிக்கு ஆரம்பிச்சா முடிச்சுடலாம் சார்"னு நான் சொல்றேன். "ஏழு மணிக்கா? ஏழு மணிக்கு ரஜினி சார் எப்படி வருவார்? நாம லேட்டா பண்ணிக்கலாம்"னு ரவிகுமார் சொல்ல, இதைக்கேட்ட ரஜினி சார், 'என்ன டிஸ்கஷன்'னு கேட்டாரு. நாங்க விவரத்தை சொல்ல, "நான் ஏழு மணிக்கு வர்றேன், நாம ஸ்டார்ட் பண்ணிடலாம்"னு சொன்னாரு. அவர் போனதுக்கப்புறம், 'அவர் இப்படித்தான் சொல்வாரு, ஆனா வர முடியாது. நாம வேற ஸீன் எடுத்துக்கலாம்'னு நாங்க முடிவு பண்ணிட்டோம். ஏன்னா, நாங்க தங்கியிருந்த மைசூர்ல இருந்து மாண்டியா நாற்பது கிலோமீட்டர் தூரத்துக்கு மேல. அதுனால, அவ்வளவு சீக்கிரமா அவரால வர முடியாதுன்னு நாங்க நம்புனோம்.

 


அதே மாதிரி, அடுத்த நாள் காலையில 6.30 மணிக்கு நாங்க அங்க போனப்போ ரஜினி சாரைக் காணோம். 6.45 வரைக்கும் பாத்துட்டு, ஒரு மரத்தடியில நின்னு நாங்க பேசிக்கிட்டோம், "பாத்தீங்களா ரஜினி சார் வரலை... அவரு வந்ததும் 'நாங்க 6 மணிக்கெல்லாம் வந்துட்டோம்னு சொல்லுவோம். அப்போதான் அவரு இன்னும் அதிகமா வருத்தப்படுவாரு"னு. "அப்படிலாம் இல்லப்பா, நானும் 6.30 மணிக்கெல்லாம் வந்துட்டேன்"னு ஒரு குரல். யாருடானு பாத்தா, எங்க பக்கத்துல, மரத்தடியில முகத்துல ஒரு கைக்குட்டையை போட்டுட்டு படுத்திருந்த மனுஷன். நாங்க யாரோன்னு நினைச்சு பேசிக்கிட்டிருக்க, அவரு எங்களுக்கு முன்னாடியே வந்து, யாருமில்லாதனால அந்த மரத்தடியில் படுத்திருந்தது அப்போதான் தெரிஞ்சது. இப்படி பல ஆச்சரியங்களை கொடுத்துருக்காரு ரஜினி சார்.

 

 

thirai ninai


'படையப்பா' ஷூட்டிங் சிவாஜி கார்டன்ல நடந்தப்போ, நான் இருப்பேன்னு நம்பி என் நண்பர்கள் ரஜினி கூட ஃபோட்டோ எடுக்கலாம்னு வந்தாங்க. ஆனா, வேற ஒரு காட்சி எடுப்பதுக்காக டைரக்டர் என்னை அனுப்பிட்டாரு. நான் இல்லாதப்பவும் என் நண்பர்கள்னு தெரிஞ்சு, ஷூட்டிங் முடிஞ்சு கார்ல ஏறப்போன ரஜினி சார் திரும்ப வந்து, அவுங்களோட அன்பா ஃபோட்டோ எடுத்துக்கொடுத்தார். 'முத்து' ஷூட்டிங்கில் டூப் ஷாட் (தூரத்தில் இருந்து தெரியும் காட்சிகளில் எடுப்பார்கள்) எடுப்பதற்காக ரஜினி சார் போட தயார் பண்ணிய  'கோட்'டை என்னைப் போடச் சொன்னாரு எங்க டைரக்டர். நான், வேர்த்து விறுவிறுத்து இருக்கேன். அவரு சொன்னதுக்காக போட்டுட்டேன். வந்து காஸ்ட்யூம் டீம்கிட்ட 'யப்பா, ரஜினி சார் போடணும், செண்ட்டு ஏதும் இருந்தா அடிங்க'னு பரபரப்பா சொல்றேன். அவரு வந்து, 'அட குடுயா'னு வாங்கிப் போட்டுக்கிட்டாரு. பல நடிகர்கள் அப்படி போடமாட்டாங்க. 'ஸ்கின் ப்ராப்ளம் வரும், அலர்ஜி வரும்'னு பயப்படுவாங்க. அவர் அப்படியில்ல. அதுபோல ஷூட்டிங்கில் அசிஸ்டன்ட்ஸ் ரொம்ப மோசமா இருப்போம், அழுக்கா. அவரு நம்ம மேல கைபோட்டு பேசிக்கிட்டு இருப்பார். நமக்கு சங்கடமா இருக்கும். அவரு சந்தோஷமா இருப்பார். இப்படி, நாம அவரை சூப்பர் ஸ்டார்னு சொல்லி உயரத்தில் வச்சிருப்போம். அவருக்கு அங்க இருக்குறது பிடிக்காது, இறங்கி வந்து நம்ம பக்கத்துலதான் நிப்பாரு. அதுதான் ரஜினி.

 

 


முத்து படத்துல ஒரு ஸீன். எல்லாரும் 'முத்து எங்க? முத்து எங்க?'னு தேடுவாங்க. அப்போ திடீர்னு வந்து நிக்கிற ரஜினி வசனம் பேசணும். "நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்"னு நான் வசனம் சொன்னேன். அந்த வசனம் ரஜினி ரசிகர்களை உசுப்பிவிட்டது, தியேட்டரில் விசில் பறந்தது, பட்டிதொட்டியெல்லாம் பரவியது. அது மாதிரி படையப்பாவில், 'ஆட்சியே அவுங்க பக்கம் இருக்கு'னு எதிர் தரப்பைப் பற்றி சொல்லுவாங்க. அப்போ படையப்பா சொல்வார், "போடா, ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்"னு. இது எங்க டிஸ்கஷன்ல ரஜினி சார் சொன்ன வசனம். அடுத்து, கோச்சடையான் பண்ணும்போது, ஒரு ஸீனுக்கு வசனம் எழுதுறோம். நாசர் சொல்லுவாரு, "நாளை நீ தப்பிக்க வாய்ப்பே கிடைக்காது"னு. நான் சொன்னேன், "வாய்ப்புகள் அமையாது, நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்" என்று. எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சது அந்த வசனம், விளம்பரங்களில் கூட இடம்பெற்றது.

 

 

padayappa rajini ramesh



அடுத்து ஒரு வசனம்... 
நாசர் சொல்றாரு, "உன் தந்தையின் புத்தி அப்படியே உனக்கு", 
"ரத்தத்தின் ரத்தம், அப்படித்தான் இருக்கும்" 
"நாளை உதிக்கும் சூரியனை நீ பார்க்கக் கூட முடியாது"  
"அந்த சூரியனே என்னைக் கேட்டுத்தான் எழும், விழும்" 

இப்படி நான் எழுதிக்கிட்டே போறேன். ரஜினி சார் என்னை முறைச்சுப் பாக்குறாரு. திடீர்னு, "உன் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க?"னு கேட்டாரு. எனக்கு ஒன்னும் புரியல. "ஒரு தடவை 'எங்க வருவேன், எப்படி வருவேன்'னு நீயும் ரவிகுமாரும் உங்க இஷ்டத்துக்கு எழுதிட்டீங்க. நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும். போற இடத்துல எல்லாம் கேட்டாங்க. இப்போ என்னடான்னா, ரத்தத்தின் ரத்தம், சூரியன் உதிக்கும்னு எழுதுற... அதெல்லாம் பேச முடியாது போயா"னு சொல்லிட்டாரு. அவருக்கும் எனக்கும் அரை நாள் இந்தப் பிரச்சனை ஓடுச்சு. 'பேசுங்க சார், நல்லாருக்கும்'னு நான் சொல்ல, அவர் ஒத்துக்கவேயில்லை. "நான் பாலிடிக்ஸுக்கெல்லாம் வரல. எனக்கு அது வேண்டாம்யா"னு சொன்னாரு. அப்படி சொன்னவர் இப்போது அரசியலுக்கு வருகிறேன்னு அறிவிச்சுருக்கார். அடிக்கடி அவர் ப்ரெஸ் மீட் கொடுக்குறதை டிவியில் பாத்துக்கிட்டு இருக்கேன். தன்னை இந்துத்துவாவாக சித்தரிக்கிறாங்க என்று ரஜினி சார், சொன்னப்ப அது பரபரப்பா ஆச்சு. அவர் எல்லோருக்கும் பொதுவானவர்னு நான் ஒரு டிவியில் பேசுனதை பார்த்து, கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட என்னை பாராட்டி பேசியிருக்கார். இதெல்லாம் பார்க்கும்போது தோனுது, 'அப்படினா அந்த டயலாக்கை பேசியிருக்கலாமே சார், நல்லா யூஸ் ஆகியிருக்குமே'னு.

ரஜினி சாராவது சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது அரசியல் பேசுவார். 'வரமாட்டேன்'னு சொல்வார், ஆனா அரசியல் பற்றி விவாதிப்பார். நான் கூட அவருகிட்ட சொல்லியிருக்கேன், "நீங்க வேணா பாருங்க, அடுத்து கேப்டன்தான்"னு. கமல் சார் அரசியல் பற்றி சுத்தமா பேசுனதே இல்லை. ஆனால், முதலில் அவரு வந்துட்டாரு. எவ்வளவோ பேசியிருக்கோம், நிறைய பேசியிருக்கோம். என்ன பேசினோம் தெரியுமா? அவ்வை சண்முகி ஷூட்டிங்கில் அவர் பட்ட கஷ்டம் தெரியுமா?       

 

அடுத்த பகுதி...

ரஜினியாவது அதைப் பற்றி பேசியிருக்கிறார், கமல் பேசியதே  இல்லை! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #3  

முந்தைய பகுதி...

எம்.ஜி.ஆர் மேல் எங்க அப்பா போட்ட கேஸ்! திரையிடாத நினைவுகள்

 

 

 

 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

கோவை தி.மு.க. வேட்பாளர் ரஜினியின் மருமகன்?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

தற்பொழுது வரை கூட்டணியும், யாருக்கு எங்கு சீட் என்பதும் முடிவாகாத நிலையில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது கோவை நாடாளுமன்றத் தொகுதி. தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அனேகம் பேர் எதிர்பார்த்த நிலையில், கோவையை மீண்டும் ஏன் கூட்டணிக்கே தள்ளிவிட வேண்டும்? தி.மு.க.வே போட்டியிட வேண்டும். அதுவும் ரஜினியின் குடும்பத்தாரே போட்டியிட வேண்டும் எனத் தலைமைக்கு தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் துவக்க கால தி.மு.க.வினர்.

"பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியில், கோவை தெற்கு தவிர மீதமுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தன்வசமாக்கி வைத்திருக்கின்றது அ.தி.மு.க. தி.மு.க.வைப் பொறுத்தவரை உட்கட்சிக் குழப்பம், கோஷ்டி அரசியல் ஆகியவற்றால் இங்கு பலவீனமாகக் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் ஒரு காலத்தில் கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்துவந்தது. காலபோக்கில் கொஞ்சங் கொஞ்சமாக மாறி, தற்போது தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் உள்ளிட்ட போயர், நாயக்கர் போன்ற சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதியாக மாறிவிடடது. அந்த உண்மையை அறிந்த ஜெயலலிதா, கொங்கு சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி, தேவர், நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை வழங்கி, தொடர்ந்து வெற்றிபெற்று கோவை மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். தி.மு.க.வை பொறுத்தவரையோ, முழுக்க முழுக்க குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, கட்சிப் பொறுப்பு முதல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புவரை அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தி.மு.க.வின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளியான முடிவுகளே இதற்கு சாட்சி. இப்பொழுது கூட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு, கண்டுகொள்ளப்படாத மாற்று சமுதாயத்தினரையும் அரவணைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தி.மு.க. வளர வாய்ப்புள்ளது'' என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த உடன் பிறப்பு ஒருவர்.

Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

பொங்கலூர் பழனிச்சாமி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக வருவதற்கு முன்புவரை வணங்காமுடி மு.ம.சண்முகசுந்தரம், கோவைத் தென்றல் மு.இராமநாதன், சி.டி.தண்டபாணி, இரா.மோகன், கா.ரா.சுப்பையன், அவினாசி இளங்கோ, போடிபட்டி தம்பு உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் தி.மு.க.வில் கோலோச்சி வந்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. 1996 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் செட்டுக்காரர் சமுதாயத்தை சேர்ந்த ப.அருண்குமாரும், சூலூர் தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த சூலூர் பொன்முடியும், அவினாசி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவும், உடுமலை தொகுதியில் போடிபட்டி தம்பு போன்றோர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். அதற்கு அடுத்து வந்த 2001 தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பொங்கலூர் பழனிசாமி, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தற்பொழுது வரை அத்தோல்வியிலிருந்து மீள முடியவில்லை என்கிறது தேர்தல் வரலாறு.

இது இப்படியிருக்க, "பல்லடம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் நகரின் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொன்முடியின் குடும்ப வாரிசும், ரஜினியின் மருமகனுமான விசாகன் வணாங்காமுடிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கும் பட்சத்தில் பிற சமுதாயத்தை அரவணைத்தது போலவும் ஆயிற்று, வெற்றியும் நிச்சயம்'' என்கிற ரீதியில் தலைமைக்கு தகவலை பகிர்ந்து வருகின்றனர் சூலூர்வாசிகள்.

சூலூரைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே, "கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலூரில் தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவும், பெரியாரும் சந்தித்துக்கொண்ட இடமும் இதுதான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர் சூலூர் சுப்பிரமணியன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த இவரின் அரசியல் வாரிசாக இருந்தவர், 2012ல் காலமான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி. வியாபார வாரிசாக இருந்தவர் வணங்காமுடி. சூலூர் பேரூராட்சியின் கட்டடம் அமையவும், சூலூருக்கு நீர் கிடைக்கக் காரணமானவரும் பொன்முடியே. அவர் உயிரோடு இருந்த வரை சூலூர் தி.மு.க. உயிர்ப்போடு இருந்தது. தீவிர திராவிட இயக்க குடும்பமான பொன்முடியின் குடும்பம் அவரது மறைவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து விலகியது. அவரது மறைவு தி.மு.க.விற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. அவர் இருக்கும்வரை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த தேவர் சமுதாயத்தினர், அவர் இறந்த பிறகு ஒதுங்கிக் கொண்டனர்.

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இந்த விசாகனைத்தான் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா திருமணம் முடித்துள்ளார். சமீபத்தில் சவுந்தர்யா-விசாகன் தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்து விழா, சூலூரிலுள்ள விசாகனின் குல தெய்வம் கோவிலில் நடைபெற்றபோது, சூலூருக்கு நடிகர் ரஜினி வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது மகளைப் பார்ப்பதற்காக நினைத்த போதெல்லாம் இங்கு வருகை தருவது ரஜினியின் வழக்கம். தி.மு.க. பாரம்பரியத்தோடு, நடிகர் ரஜினியின் மருமகன் என்ற பெருமையையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்பது எங்களது விருப்பம். அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். மேலும், தேவர், நாயக்கர், செட்டியார், அருந்ததியர் போன்ற மாற்று சமுதாயத்தினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகையால் தி.மு.க. தலைமை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனைக் கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு சேர்த்துள்ளோம்'' என்கிறார் அவர்.

ஆக, கூட்டணியில் கமலுக்கு கோவை கிடைக்குமா? இல்லை தி.மு.க.வே இங்கு போட்டியிட முடிவெடுத்து, தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் மருமகனை களமிறக்குமா? என்பதுதான் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மில்லியன் டாலர் கேள்வி!