ADVERTISEMENT

தாடியால் வந்த சிக்கல்; வெற்றிமாறனை சந்தேகப்பட்டு விசாரித்த போலீஸ்!-பேராசிரியர் ஹாஜா கனி பேட்டி!

05:40 PM Dec 02, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் வெங்கட்பிரபு - சிம்பு கூட்டணியில் கடந்த வாரம் 25ஆம் தேதி‘மாநாடு’திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பல பிரச்சனைகளை கடந்து திரையரங்கில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதே போல் சிறுபான்மையினர் நிலையை தத்ரூபமாக வெளிகொணர்ந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் கடும் விமர்சனங்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தது. இந்நிலையில் இது குறித்த விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களை த.மு.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெ. ஹாஜாகனியிடம் கேள்விகளாக முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு...

இஸ்லாமியர்கள் மீது வழக்குப் போட்டு அலையவிடுதல், சிறைப்படுத்துதல் என கேள்விப்பட்டிருக்கிறோம்; பார்த்தும் இருக்கிறோம். அதை பொதுவெளியில் மாநாடு படம் காண்பித்திருப்பது பொதுமக்களுக்கு புரியும்படி இருக்கிறதா?

மாநாடு போய்றிக்கீங்களானுதான் கேட்பாங்க... நீங்க பாத்தீங்களானு கேட்டுகிறீங்க, பார்த்தோம். திரைப்படங்கள் என்பவை சமூதாயத்தை முடுக்கக்கூடிய இயக்கமாக இருக்க வேண்டுமே தவிர முடக்கூடியதாக இருக்கக்கூடாது என்பது முற்போக்காளர்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக வரக்கூடிய பெரும்பாலான படங்கள் மலிவான உணர்வுகளை தூண்டக்கூடிய வியாபார படங்களாக இருக்கும் பொழுது வணிக ரீதியாக வெற்றி பெறுவதோடு அது மனித குலத்திற்கும் நன்மை செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாக மாநாடு திரைப்படத்தை பார்க்கின்றேன். காலம் காலமாக காயம்பட்டு கிடக்கின்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனகாயங்களுக்கு மருந்து போடும் கலை முயற்சியாக இந்த படத்தை பார்க்கலாம். காரணம் தமிழ் திரையுலகம் முஸ்லிம் சமுதாயத்தை எப்படி காட்டிருக்கிறது என்பதை நாம பார்க்கலாம். 1990க்கு முன்னாள் நல்லோர்களாக, கதாநாயகனை எடுத்து வளர்க்ககூடியவர்களாக, நல்லது செய்ய கூடியவர்களாக காட்டிருப்பார்கள்.

எம்.ஜி.ஆர், ஒன்றே சொல்லுவான் நன்றே செய்வான் அவனே அப்துல் ரஹ்மான் என்று பாடினார். தொப்பி போட்டுக்கொண்டு படத்தில் வருவார். பாவ மன்னிப்பு என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிக அருமையான கருத்துகளை சமுதாயத்திற்கு ஒரு முஸ்லிம் கதாநாயகனாக தோன்றி சொல்வார். அதன்பிறகு வந்த காலகட்டத்திலும் ரஜினிகாந்த் உச்சக்கட்ட நட்சத்திரமாக ஜொலித்த அவர் தன் படங்களில் முஸ்லிம்களோடு ஒரு நல்ல நட்புறவை கொண்டிருப்பதாகவே காட்டியிருக்கிறார்.

குறிப்பாக படிக்காதவன் என்ற ஒரு திரைப்படம் அந்த திரைப்படத்தில் ஆதரவில்லாமல் விடப்பட்ட கதாநாயகனை வளர்த்து ஆளாக்ககூடிய ஒருவராக ஒரு முஸ்லிம் பெரியவர் (நாகேஷ்) அந்த படத்தில் நடித்திருப்பார். அவர் தொப்பி தாடியோடு காட்சியளிப்பார். ஆதரவற்றவராக விடப்பட்ட கதாநாயகனை ஆளாக்குவது போன்று காட்டி ஒரு நல் உணர்வும் இறக்க சிந்தனையும் உடையவர்களாக முஸ்லிம்களை காட்டிய ஒரு காலக்கட்டம் இருந்து வந்தது. 1990 பிறகு குறிப்பாக சமூக நீதிக்கு எதிராக மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு பிறகு ஒன்றிய அரசை கவிழ்க்க வேண்டும் வி.பி.சிங் அரசை விழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்பட தொடங்கிய பா.ஜ.க. ராமர் கோவில் பிரச்சனையை கையில் எடுத்தது.

அயோத்தி பிரச்சனை கையில் எடுக்கப்பட்ட பிறகு அதனுடைய எதிரொலி பல துறைகளில் கேட்டது. அதில் திரையுலகமும் ஒன்று. 90க்கு பிறகு வந்த திரைப்படங்கள் தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக, குற்றவாளிகளாக முஸ்லிம்களை சுட்டிக்காட்டின. மிக கொடுமையாக சித்தரித்தனர். குறிப்பாக ரோஜா என்ற திரைப்படம் தான் மிக பெரிய ஒரு சேதத்தை சமூகத்தில் ஏற்படுத்தியது. மும்பையில் களவரம் நடந்து 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அங்கே கொல்லப்பட்டார்கள். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணா என்ற ஆணையம் நியமிக்கப்பட்டது. அந்த ஆணையம் கலவரங்களின் சூத்திரதாரி என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை சுட்டிக்காட்டியது. நீதியரசர் ஸ்ரீ கிருஷ்னா பிறப்பால் பிராமணர், கலவரங்களின் சூத்திரதாரி என்ற சொல்லை போட்டே பால் தாக்கரேவை சுட்டுக்காட்டினார். ஆனால் அந்த பால் தாக்காரேவிடம் அந்த படம் போட்டுக்காட்டப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது. அந்த படத்தில் பாபர் மசுதி இடிக்கப்பட்டுவதனால் முஸ்லிம்கள் கலவரம் செய்வதாக காட்டப்படும். மேலும் பஸ்கரோ என்ற பெரியவர் போதும் என்று சொன்னவுடன் கலவரம் முடிந்து விடும். அதன் மூலம் மணிரத்தினம் அவர்கள், இந்த கலவரங்களை எல்லாம் நடத்தியவர்கள் முஸ்லிம்கள் தான் அவர்கள் போதும் என்று சொன்னால் கலவரம் நின்று விடும் என்று நுணுக்கமான திரைமொழியில் ஒரு சமூகத்தின் மீது மிக மோசமான பழியை சுமத்தினார்.

அதனை தொடர்ந்து வந்த படங்கள் மிக மென்மையான ஜாதி மல்லி போன்ற படங்கள் கூட எந்த அளவுக்கு முஸ்லிம்கள் மீது குற்றசாட்டுகளை சுமத்தின என்பதை பேராசிரியர் ஆ.மாக்ஸ் போன்றவர்கள் விரிவாகவே கட்டுரையாக எழுதி இருக்கிறார்கள். நான் இங்கு சொல்லவருவது வெள்ளிதிரையிலும் எதிரொலித்தது, சின்னத்திரையிலும் எதிரொலித்தது.

அயோத்தி பிரச்சனையின் போது இராமயணம் எனும் தொடர் வெளிவந்தது. அதற்கு பிறகு காசி மதுரா பிரச்சனை வரும் போது மகாபாரதம். இப்படி எல்லாம் இந்திய அரசினுடைய தொலைக்காட்சிகள் கூட பாஜக அரசு முன்னெடுத்த அரசியலுக்கு துணை செய்யும் வகையில் நடந்து கொண்டன. அதே போல் திப்பு சுல்தான் என்ற தொடர் ஒளிப்பரப்பானதும் அதே காலகட்டத்தில்தான். திப்பு சுல்தான் தொடரை இரவு பத்து மணிக்கு மேல் ஒளிப்பரப்புவார்கள். அதில் இது கற்பனை கதையே என்று பின்னணி போடப்படும். ஆகவே கலை ஊடகம், அது வெள்ளித்திரையாக இருந்தாலும், சின்னத்திரையாக இருந்தாலும் மிக மோசமான கட்டமைப்பை ஒரு சமூகத்திற்கு எதிராக நிகழ்த்தி வந்தன.

குறிப்பாக முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக, தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற வேலையை அவை செய்து வந்தன. திரைப்படம் எவ்வளவு வலிமையான ஆயுதம் என்பதற்கு பேரறிஞர் அண்ணா சொன்ன கருத்து இங்கு நினைவுக்கூறத்தக்கது. ‘தனிக்கை இல்லாமல் நான்கு திரைப்படங்களை எடுக்க அனுமதி கொடுங்கள் நான் திராவிட நாட்டை வென்று காட்டுகிறேன்’ என்று சொன்னார். முதலில், நடிகர் முதலமைச்சர் ஆனது, எதிர்கட்சி தலைவர் ஆனது, ராஜ்ய சபை உறுப்பினரானது எல்லாமே தமிழ்நாட்டில் தான் நடந்திருக்கு. தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மிக அதிகமான தாக்கத்தை மக்கள் மனதில் செலுத்துகின்றன. அப்படி தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு ஊடகம் தொடர்ச்சியாக முஸ்லிம்களை 90க்கு பிறகு தவறாகவே சித்தரித்து வந்திருக்கின்ற, மோசமாகவே காட்டிருக்கின்ற ஒரு சூழலில் அதில் உச்சக்கட்டமாக விஸ்வரூபம், துப்பாக்கி படங்களில் முஸ்லிம்கள் தங்களையும் அறியாமல் தீவிரவாதத்திற்கு துணைபோகிறார்கள் என்று காட்டின.

அதற்கு எல்லம் மருந்து போடும் வகையில் அப்தூல் ஹாலிக் என்ற பெயரிலேயே ஒரு கதாநாயகன் இங்கு என்ன எல்லாம் நடக்கிறது என மிக நேர்த்தியாக எதார்த்தமாக உண்மைகளுக்கு மிக அருகில் இருந்து இந்த படம் சுட்டிகாட்டி இருக்கிறது. பல மாநாடு போட்டு சொல்ல வேண்டிய செய்தியை ஒரு மாநாடு என்ற திரைப்படம் மக்கள் மனதில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. ஜெய்பீம், விசாரணை, அசுரன் என்ற அற்புதமான படங்களின் வரிசையில் இன்றைக்கு மாநாடு என்ற படமும் சிகரமாக சேர்ந்திருக்கிறது என்று நான் மிகுந்த வாழ்த்துகளோடு அந்த படத்தை வரவேற்கிறென்.

ஜெய்பீம் படத்திலும், மாநாடு படத்திலும் குறிப்பிட்ட அந்த சமூகத்தினர் மீது செய்யாத குற்றங்களை சுமத்தும் நிகழ்வு இன்றைக்கும் தொடர்கிறதா?

இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் எப்படி அப்பாவி மக்கள் மிக மோசமாக சிக்கவைக்கப்பட்டு சிறைகளிலேயே சித்ரவதை செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டவர்களின் எதிர்காலமே சீரழிந்தது. ‘பலி கடாக்கள்’ என்ற புத்தகம் அதை தான் சொல்கிறது. ஆங்கிலத்தில் scapegoat என்ற பெயரில் வெளிவந்த புத்தகம். இன்னும் ஏராளமாக இருக்கிறது. நான் சின்ன ஒரு உதாரண சொல்றேன். இந்தியாவில் ஹைதராபாத் மக்கா மசுதி குண்டு வெடிப்பு, வாஜ்பாய், பாகிஸ்தானுக்கு விட்ட சம்ஜவ்தான் என்கிற ரயில் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்ஹா குண்டு வெடிப்பு, மாலைகா குண்டு வெடிப்பு என எல்லா இடங்களிலும் இறந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் முஸ்லிம்களே. இப்படி நடந்து கொண்டே இருந்தது.

அப்போது, “இதில் எங்கயோ தவறு இருக்கு தொடர்ச்சியாக நாம முஸ்லிமை பிடிக்கிறோம், அந்த பயங்கரவாத இயக்கம் இந்த பயங்கரவாத இயக்கம், இந்த ஜிஹாதி இயக்கம்லா சொல்லிட்டு இருக்கிறோம். ஆனால் குண்டு வெடிப்பு மட்டும் நிற்கவில்லையே. அப்போ உண்மையான குற்றவாளி பிடிப்படவில்லை” என்று நேர்மையாக சிந்தித்த ஒரு அதிகாரி மாவீரன் ஹேமந்த் கர்கரே. அவர் பிறப்பால பிராமணர். பிரமாணர் சொல்கிற காரணத்தினால் இன அடிப்படையில் வெறுக்கக்கூடிய பண்பு நமக்கு கிடையாது. அவர் பிறப்பால பிராமணர் ஆனால் அவர் தான் எல்லா உண்மையும் வெளியே கொண்டு வந்தார்.

அபினவ் பாரத் என்று சொல்லக்கூடிய பயங்கரவாத அமைப்பு இதை இயக்கி கொண்டிருக்கிறது. அதற்கு பின்னால் ஸ்ரீகாந்த் புரோஹித் போன்ற இந்திய இராணுவத்தில் பணியாற்றி கொண்டிருந்தவர்கள் இராணுவத்தில் இருக்ககூடிய போர் தளவாடங்களை வெடி மருந்துகளை பயங்கரவாத செயலுக்கு கொடுத்து உதவ கூடிய ஒரு சூழ்நிலை கண்டுப்பிடிக்கப்படுது. இதை கண்டுபிடிச்சவர் ஹேமந்த் கர்கரே.

ஆனால், 26/11 மும்பை தாக்குதலில் அவர் மர்மான முறையில் கொல்லப்படுகிறார். அதை வைத்து அஜித் நடித்து ஒரு திரைப்படம் கூட வந்தது. அப்போது மும்பை தாக்குதலில் ஹேமந்த் கர்கரே எப்படி குறிவைத்து கொல்லப்படுகிறார் என்று கேட்டதுனாலே அன்றைக்கு ஒரு அமைச்சருக்கே பதவி போச்சு. ஹேமந்த் கர்கரே இதை எல்லாம் வெளியே கொண்டு வரலனா ரக்கியாசிங் தாக்கூர் பற்றி இந்த நாடு அறிந்திருக்குமா? இன்றைக்கு அவர் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டார். எதிர்த்து கேள்வி கேட்டு விவாதம் பண்ண வேண்டும் என்று சொன்னா 12 பேரை நாடாளுமன்ற மாநிலங்களவையிலிருந்து இடைநீக்கம் செய்திருக்காங்க. ஆனால் கோட்‌சேவை புனிதர் என்று பேசக்கூடியவர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே உட்காந்திருக்காங்க.

அதிகாரம் எந்த பக்கம் இருக்கோ அந்த பக்கம் சாய்வது திரையுலகத்தின் வழக்கம். அவர்கள் பல கோடிகளை முதலீடு செய்து படம் எடுக்கிறார்கள். அந்த படம் சிக்கல் இல்லாமல் வரவேண்டும் என்று சொன்னா ஒன்றிய அரசை அவர்கள் பகைத்துகொள்ளவே முடியாது. அதனால், ஆட்சியாளர்களின் மனநிலை என்ன? கருத்தியல் என்ன என அறிந்துகொண்டு அதற்கு தாளம் போடக்கூடிய படத்தைதான் எடுத்தார்கள். நக்கீரன் விதிவிலக்கான ஊடகமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான ஊடகங்கல் அத்தகைய தாளம் போடும் வேலையை தான் செய்தனர்.

வெங்கட் பிரபு, மிக சிறப்பாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நடித்த சிம்பு, இந்த படத்தில் மிக துணிச்சலான ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் அவருக்கும் பட குழுவினருக்கும் வாழ்த்துகள். இன்றைக்கும் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பது தான் என்னுடைய கருத்து.

உ.பி.யில் ஒரு இஸ்லாமியர் விவசாயத்திற்காக மாடு வாங்கிச் செல்கிறார். ஆனால் இறைச்சிக்காகத்தான் வாங்கிச் செல்கிறார் என அவர் தாக்கப்படுகிறார். வாட்ஸ் அப் மூலம் இந்தத் தகவல் அனைவருக்கும் விரைவில் பரப்பப்படுகிறது. உண்மையில் யார் குற்றம் செய்தார் என்பது தெரியவருகிறது. இப்படி விரைவாக தகவல் பரவும் காலத்திலும் பொய் வழக்குகள் பதியப்படுகின்றனவா?

சமூக ஊடகங்களின் எழ்ச்சி வந்த பிறகு சமூக அநீதிகள் நின்றுவிடவில்லை அம்பலமாகின்றன. ஆனால் நின்றுவிடவில்லை. இப்ப மத்திய அமைச்சருடைய மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவத்தை பார்த்தோம். அவருக்கு நட்சத்திர உணவகம், உணவு பரிமாறப்படுவதை இன்றைக்கு வரவேற்கும் கட்சி, வாட்ஸ் அப், செய்தி போன்றவற்றில் அந்த செய்தி வருகிறது. ஐந்து பேரை கட்டி வைத்து அடித்து ஜெய்ஸ்ரீராம் சொல்லுனு சாகடிக்கிறாங்க, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு? யார் தண்டிக்கப்பட்டாங்க?

“நீங்க வன்முறையில் ஈடுபடுங்க, வன்முறையால பதிலடி கொடுங்க. உங்களை காவல்துறை கைது பண்ணும்; வெளியே வரும் பொழுது பெரிய தலைவராக வருவீங்கனு” ஒரு முதலமைச்சர் சொல்றாரு. இந்தியாவின் அரசிலயமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்த வேண்டியவர்கள், நடந்து கொள்ள வேண்டியவர்கள் இப்படி எல்லம் சொல்கிறது வெளி உலகத்திற்கு தெரியவருகிறது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகளை நாம் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம். நிர்வாணப்படுத்தி ஒரு பெண்ணை ஆண் சுமந்து கொண்டு போகனும்னு சொல்லி அடிக்கிற கொடுமையை பாக்கிறோம். இது வடநாட்டுல சமூக அநீதி உணர்வு வளர்க்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. தென்னாட்டின் தனிப்பட்ட தன்மை, சமூக அநீதிகளை கண்டிக்ககூடிய பகுத்தறிவு போக்கு இங்கு மிகுந்திருக்கிறது.

உ.பி.யில் பால் வியாபாரத்திற்கு மாட்டை வாங்கிட்டு போகிறார். அவர் பசு வதை செய்ததாக சொல்லி அடித்து கொல்லப்பட்டார். அதே மாதிரி ஜூனைத்கான்னு சொல்லக்கூடிய 14 வயசு பையன், மாட்டு கறி திங்கக்கூடிய இனத்தை சேர்ந்தவன் என்று சொல்லி 14 வயது பையனை ஓடும் ரயிலில் அடித்து கொல்கிறார்கள். எந்த அளவுக்கு வெறி முத்தி போய் இருக்குனு பாருங்க. அவர்கள் எல்லாம் எங்க இருக்காங்க? எந்தளவுக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? இன்றைக்கும் வடமாநிலங்களில் வன்முறையை மிக துணிச்சலா செய்திட்டுதான இருக்காங்க. வன்முறையே தங்களது வழிமுறையா கொண்டவர்களுக்கு என்ன மாதிரி தண்டனை கிடைத்திருக்கிறது என்று பார்த்தால் சிறந்த முன்மாதிரி இந்த நாட்டிலே அதிகமான பேரை சாட்சியாக வைத்துக்கொண்டு நடந்த குற்றம் பாபர் மசூதி இடிப்பு. அப்படிப்பட்ட சூழலில் மனித உரிமை ஆர்வலர்களும், உங்களை போன்ற ஊடகவியலாளர்களும் வெளிக்கொண்டு வரும் பொழுது மக்களின் மனசாட்சி தட்டு எழுப்பப்படும் பொழுது இதன் வீச்சு குறைகிறது. இந்த கொடுமைகள் குறைகின்றன. அதனாலதான் கலைப்படைப்புகளை வரவேற்கிறோம்.

குறிப்பாக ஏதோ ஒரு தவறு நடந்தால் இவர்கள் தான் என்று ஒரு தகவல் வருகிறது. படத்திலேயே அமெரிக்காவில் ஒருத்தன் துப்பாக்கியால் சுட்டால் சைகோ சுட்டுட்டான் என்றும், இந்தியாவில் குண்டு வைத்தால் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சொல்வதையும் பார்க்கிறோம். அந்த மாதிரி அவர்கள் மீது சமுதாயத்திற்கே குற்றச்சாட்டு வர மாதிரி இருக்குதுல. இது பொதுவாகவே காவல்துறையினர் உளவியல் ரீதியாக இன்னும் மாறவில்லையா?

ஒரு சம்பவத்தை நினைவுக்கூறுகிறேன். ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ என்கிற புத்தகம் திருச்சியில் வெளியிடப்பட்டப்போது அதில் நானும் இயக்குநர் வெற்றிமாறனும் பங்கேற்றோம். அந்த நிகழ்வில் வெற்றிமாறன் பேசும்போது சொன்னாங்க, ஒரு படப்பிடிப்பு முடிந்த பிறகு பின்னிரவில் திரும்பி வரும் பொழுது காவல்துறையினர் நிறுத்தி நீ அல் உமாவா, அந்த இயக்கமா? இந்த இயக்கமா என்று சொல்லி அவரை பிடித்து ஓரமாக நிறுத்துகிறார்கள். அவரே பகிர்ந்த செய்தி. அப்ப அவர்கிட்ட என் பெயர் வெற்றிமாறன் என்று சொல்லியிருக்கிறார். அவர் தாடி வைத்திருப்பார். அதனால் அவரை ஏதோ முஸ்லிம் தீவிரவாதினு முடிவுப்பண்ணிட்டாங்க. அப்போது வெற்றிமாறன் என்று சொன்னதும் விட்டுட்டாங்க. இது ஒரு எடுத்துக்காட்டு.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT