ADVERTISEMENT

நவீன காலத்தை சமாளிக்க முடியாமல் திணறுகிறது பெரியார் படிப்பகம்!

12:28 PM Mar 03, 2020 | Anonymous (not verified)

பல முற்போக்கு சிந்தனையார்களை உருவாக்கிய பெரியார் படிப்பகம் தொடங்கி 30-ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது அனைவருக்கும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதேநேரத்தில் படிப்பகத்தின் நிலைமை முன்னேற்றமில்லாமல் அதே நிலையில் உள்ளது என்பது பொது நலவாதிகள் மற்றும் சமூக சிந்தனையாளர்ளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 1988-89-ஆம் ஆண்டுகளில் சிதம்பரம் நகரத்திலுள்ள வெள்ள பிறந்தான் தெருவின் கடைசியில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு சிறிய இடம் சுகதாரமற்ற நிலையில், யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்துள்ளது. இந்த இடம் பன்றிகள் உலாவும் இடமாக இருந்ததால் பொதுமக்கள் இந்த இடத்தை முகசுளிப்புடன் கடந்து சென்றனர். இப்படி அசுத்தமான இடத்தை அப்போதைய திராவிடர் கழகத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி, காபிகடை மூர்த்தி உள்ளிட்டோர் சீர்படுத்தி சில முற்போக்குவாதிகளின் உதவிகளைப் பெற்று அந்த இடத்தில் பெரியார் படிப்பகம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இதனையறிந்த அப்போதைய திமுகவில் இருந்த சிலர் இந்த இடத்தில் கடை வைக்கபோகிறோம் என்று தடுத்துள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களை பகைத்து கொள்ளாமல் அப்போது திமுக ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட செயலாளராக இருந்த தற்போதைய திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், திமுக முன்னாள் அமைச்சரும், குறிஞ்சிபாடி தொகுதி எம்எல்ஏவுமான எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் தந்தை எம்ஆர். கிருஷ்ணமூர்த்தியிடம் காட்டுமன்னார் கோவிலுக்கு அடுத்துள்ள முட்டம் கிராமத்திற்கு படிப்பகம் அமைக்க முயற்சித்த சுந்தரமூர்த்தி உள்ளிட்டவர்கள் 40 கி.மீ தூரம் சைக்கிளில் சென்று சம்பவத்தை விளக்கி கூறியுள்ளனர்.



இதனைகேட்ட அவர் எதற்கும் அஞ்சாதீர்கள் படிபகம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளையும் நானே செய்கிறேன் என்று கூறி அனுப்பியுள்ளார். இதனைதொடர்ந்து தி.க தோழர்கள் அந்த இடத்தில் ஒரு சிறிய ஓலைக் குடிசையை அமைத்தனர். அதனை 30.04.1989 அன்று அவரே திறந்து வைத்துள்ளார். பின்னர் அதில் விடுதலை உள்ளிட்ட அப்போதைய வெளிவந்த நாளிதழ்கள் மற்றும் வாரஇதழ்கள் வரவழைக்கப்பட்டது. படிப்பகத்திற்கு ஒரு நாளைக்கு 100 பேர்களுக்கும் குறைவில்லாமல் வந்து நாளிதழ்களை படித்து செல்வது மட்டுமில்லாமல் பெரியாரின் கருத்துகளை பேசியும் படிப்பகத்திற்கு வருபவர்களுக்கு பெரியாரின் சிந்தனைகளை விளக்கியும் உள்ளனர்.

அந்த காலகட்டத்தில் தற்போது திமுகவில் ஆளுமையாக இருக்கும் பொன்முடி, சபாபதி மோகன், மதிமுகவில் இருக்கும் வந்தியதேவன் உள்ளிட்டவர்கள் இந்த படிப்பகம் உருவாக்கத்திற்கு மாணவப்பருவத்தில் உறுதுணையாக இருந்து உதவி செய்துள்ளனர். இதனைதொடர்ந்து ஓலைக்குடிசையில் இருந்த படிப்பகம் மழை நேரத்தில் சேதமடைந்து ஒழுகி உள்ளே இருக்கும் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் நனைந்தது. இதனையறிந்த சிதம்பரம் பகுதி சமூக ஆர்வலரும் அணி வணிகருமான பழநி உள்ளிட்டவர்கள் உதவி செய்ததன் பேரில் சிமெண்ட் சிலாபில் சுற்றுச் சுவர் அமைத்து அதன்மீது தகர சீட் அமைக்கப்பட்டது. இதனை அனைவரும் வரவேற்றனர். இதற்கு உதவி செய்த பழநியை படிப்பகத்திற்கு அழைத்து சந்தனமாலை அணிவிக்க ஏற்பாடுகளை செய்தனர். அவரோ இதனை மறுத்து மரக்கன்று ஒன்று வாங்கிவரச்சொல்லி அதனை படிப்பக வாயிலில் வைத்துள்ளார். அந்த மரம் தற்போது விருட்சமாக வளர்ந்து படிபகத்திற்கு வரும் எல்லாரையும் நிழலில் அமர வைப்பதோடு படிப்பகத்திற்கும் குடைபிடித்த நிழலாக உள்ளது.

இப்படி வளர்ந்த இந்த படிப்பகத்தில் தமிழறிஞர் கி.அ.பெ விஸ்வநாதன், பழ.நெடுமாறன், முன்னாள் அமைச்சர் காளிமுத்து, வி.வி சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா, தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் தலைவர் மணியரசன், நாவலர் நெடுஞ்செழியன், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக உள்ள பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த படிபகத்திற்கு வருகை தந்து ஆதரவு அளித்ததோடு படிப்பகத்தில் வாசித்துள்ளனர்.



தற்போது இந்த பெரியார் படிப்பகத்தில் விடுதலை உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிர், திமுகவின் முரசொலி, மதிமுக சங்கொலி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் வெளிவரும் நாளிதழ்கள் மற்றும் அனைத்து நாளிதழ்கள் மற்றும் முற்போக்கு சிந்தனை உள்ள வார இதழ்கள் என தினந்தோறும் பல வருகிறது. காலை 7 மணிக்கு திறக்கப்படும் படிப்பகம் மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது. இதில் ஒரு நாளைக்கு 150-க்கும் மேற்பட்டோர் நேரத்திற்கு தகுந்தார்போல் வந்து பொதுஅறிவு, முற்போக்கு சிந்தனைகளையும் வளர்த்து வருகிறார்கள்.

இப்படி பல சமூக முற்போக்கு சிந்தனையாளர்களையும் அறிஞர்களையும் மெருகேற்றி வளர்த்து வரும் இந்த படிப்பகம், தற்போது நவீன டிஜிட்டல் முறைகளை வளர்ந்துள்ள நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவு அடிப்படை வசதிகளை கொண்டுள்ளதோ அதே நிலைமையில் இன்றும் இருப்பது மிகவும் வருத்தமான நிகழ்வாக உள்ளது என்று படிப்பகத்திற்கு வரும் வாசகர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து தொடக்கம் முதல் படிபகத்தை நிர்வகித்து வரும் படிபகத்தின் செயலாளர் கோ.வி சுந்தரமூர்த்தி கூறுகையில், "அசுத்தமான இடத்தை சீர்படுத்தி 30 ஆண்டுகளை கடந்து இந்த படிபகத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். பல மாதங்கள் மின்கட்டணமே கட்டமுடியாத சூழ்நிலையில் மின்விசிறியை கழற்றி வைத்துள்ளேன். பல கோயில்களுக்கு இலவச மின் வசதி கொடுக்கிறார்கள். பலரின் அறிவை மெருகூட்டும் இந்த இடத்திற்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தபடிபகத்தின் சிமண்ட் சிலாப்பில் சில கயவர்கள் இயற்கை உபாதை கழித்ததால் ஈரகசிவு உள்ளே வந்துவிட்டது. இதனால் படிப்பகம் வருபவர்கள் மூக்கைபிடித்துகொள்ளும் நிலமைக்கு வந்துவிட்டது. பின்னர் வாசகர்களிடம் சிறு உதவிகளை பெற்று சிமண்ட் வைத்து அந்த இடத்தை சரிசெய்தேன்.

படிப்பகம் அமைப்பதற்கு முன்பு இந்த இடம் எவ்வாறு இருந்ததோ அதேநிலைக்கு சென்றுவிடுமோ என்ற பயமும் உள்ளது. இதனை தொடங்கியதிலிருந்து நல்லது கெட்டதுக்குகூட போக முடியவில்லை. தற்போதுள்ள நிலையில் தகர சீட்டுகளை குரங்குகள் உடைத்துவிடுகிறது. அதனை சரிசெய்ய சிரமமாக உள்ளது. எங்களால் முடிந்த அளவுக்கு நடத்தி வருகிறோம். இந்த 30-வது ஆண்டை போற்றும் வகையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது பிறந்த நாள் பரிசாக இந்த படிப்பகத்தை அடுக்குமாடி கட்டிடமாக மாற்றி அனைத்துவகை நூல்கள் கிடைக்கும் வகையிலும். இளம்தலைமுறைகள் வளர்ச்சி அடையும் வகையில் கணினி வசதியுடன் அமைத்து கொடுக்கவேண்டும். இதற்கு திமுக முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான பன்னீர்செல்வம் மற்றும் திமுகவினர் முற்போக்கு சிந்தனையாளர்கள் பொதுமக்கள் ஆதரவு தந்து புதுபொலிவு பெற உதவிகள் செய்யவேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT