ADVERTISEMENT

கெட்டதிலும் ஒரு நல்லது செய்யலாமே அரசு?

04:33 PM Jun 11, 2019 | kamalkumar

கெட்டதிலும் ஒரு நல்லது என்று சொல்வார்கள். அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. சென்னை தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு மாதம் இதே நிலை நீடித்தால் தண்ணீருக்காக மிகப்பெரிய மக்கள் புரட்சியே வெடிக்கும் நிலை உருவாகிறது.

ADVERTISEMENT


சென்னையின் பல பகுதிகளில் மக்கள் குடங்களுடன் சாலைகளை மறித்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் லாரியை பார்த்தால் விரட்டிக்கொண்டு ஓடும் நிலை இருக்கிறது.

சென்னைக்கு குடிநீர் தரும் புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவை காய்ந்து வறண்டு தரைத்தளம் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிறது.

ADVERTISEMENT

தண்ணீர் வறண்டது சென்னை மக்களுக்கு கெட்டகாலம் என்றாலும், பல்லாண்டுகளாக தூர் வாராமல் மண்மேவிக் கிடக்கும் ஏரிகளை தூர் வாருவதற்கு இதுதான் நல்ல நேரம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.


ஆளும் அதிமுகவுக்குள் இப்போது கோஷ்டிப் பூசல் உச்சத்தி்ல் இருப்பதால், பொதுப்பணித்துறையை கையில் வைத்திருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதைக் கையாள்வதிலேயே கவனமாக இருக்கிறார். முதல்வர் பதவிக்கு ஒரு பக்கம், கட்சிப் பதவிக்கு மறுபக்கம் என்று எடப்பாடியை நெருக்கடிகள் சூழ்ந்திருக்கின்றன.

ஆட்சி மாற்றத்துக்கு திமுக தீவிரமாக முயற்சி செய்துவரும் நிலையில், ஆட்சி கவிழ்ந்தால் கட்சியில் எடப்பாடிக்கு இரண்டாம் இடம்தான் கிடைக்கும் என்ற உண்மை அவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் கவலையில் தள்ளியிருக்கிறது.



இந்நிலையில்தான், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடுத்துச் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். ஜெயலலிதா காலத்திலும் இப்படித்தான் நிலைமை இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கும் முடிவை அதிகாரிகளே எடுத்திருக்கலாம். ஆனால், ஜெயலலிதாவை கேட்காமல் ஒரு அணுவும் அசையக்கூடாது என்பதால் இரவு நேரத்தில் தண்ணீரை திறந்துவிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் பலியாக நேர்ந்தது.

இப்போதும் ஏரியைத் தூர்வார நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிற நிலையில் ஊடகங்கள் வழியாக அதிகாரிகள் தகவல்களை வெளிப்படுத்தியும் கூட முதல்வர் அதைக் கவனிக்கிறாரா என்பதே தெரியவில்லை என்று புலம்புகிறார்கள்.

முழுவீச்சில் தூர்வாரும் பணிகளை முடுக்கிவிட்டால், மூன்று ஏரிகளும் இப்போது உள்ள கொள்ளளவைக் காட்டிலும் இருமடங்கு தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு ஆழப்படுத்த முடியும் என்கிறார்கள்.

என்ன நடக்கிறது பார்க்கலாம்…

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT