ADVERTISEMENT

சாதி வெறி! வர்க்க பேதம்! கீழவெண்மணியில் கருகிய 44 உயிர்கள்! -டிசம்பர் 25-ஐ மறக்க முடியுமா?

04:50 PM Dec 25, 2018 | cnramki

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்…

ADVERTISEMENT

“ஐயோ.. எரியுதே..” என்று அலறிய 44 பேர் பூட்டிய குடிசைக்குள் தீயில் கருகி உயிரை விட்டனர். 19 குழந்தைகள், 20 பெண்கள், 5 ஆண்கள் என உயிர் பறிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பினர். வலியுடன் வரலாறு பதிவு செய்திருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் ரத்தச் சரித்திரம் இதோ -

ADVERTISEMENT

அப்போது நிலச்சுவான்தார்கள், பண்ணையார்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. தங்களின் நிலத்தில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வேளாண் தொழிலாளர்களை அடிமைகளாகவே அவர்கள் நடத்தினர். நிலமற்ற ஏழை மக்களை, இந்திய-சீனப் போரால் ஏற்பட்ட பஞ்சம் வாட்டி வதைத்திட, குறைந்த கூலி கொடுத்து அதிக வேலை வாங்கினார்கள். ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டம் – நாகப்பட்டினத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்திலும் இதே நிலைதான். கூலி உயர்வு கேட்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்களின் உதவியுடன் சங்கம் ஆரம்பித்தனர் விவசாயத் தொழிலாளர்கள். இவர்கள் கூலியை உயர்த்திக் கேட்டவுடன், போட்டி சங்கமாக நிலக்கிழார்கள் ஒன்றுசேர்ந்து நெல் உற்பத்தியாளர் சங்கத்தைத் தொடங்கினர்.

இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைவராக இருந்த நெல் உற்பத்தியாளர் சங்கத்தினருக்கு, அறுவடைக்கூலி இரண்டு மரக்காலோடு மேலும் ஒரு படி சேர்த்துக் கேட்ட விவசாயத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதாயிற்று. “சங்கம் ஆரம்பிக்கிறியா? சரிசமமாக எங்களுக்கு எதிரே அமர்ந்து பேசுறியா? கைகட்டி, வாய்பொத்தி வேலை பார்த்துட்டு, உரிமை இருக்குன்னு கேள்வி கேட்கிறியா?” என்று ஆவேசமானார்கள் நெல் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களான நிலக்கிழார்கள். இதனைத்தொடர்ந்து, முத்துகுமார், கணபதி ஆகிய இருவரைக் கட்டிவைத்து அடித்தனர். அதனால், தொழிலாளர்கள் அவர்களுடன் மோதினர். கீழவெண்மணியில் கலவரம் மூண்டது. ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் மீது கடும் வஞ்சம் கொண்டிருந்த கோபாலகிருஷ்ண நாயுடு “ஊரையே கொளுத்தி ஒண்ணுமில்லாம பண்ணிருவேன்..” என்று ஆவேசமானார். அன்றைய திமுக முதல்வர் அண்ணாதுரைக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் வே.மீனாட்சிசுந்தரம், கீழவெண்மணி விவசாயிகளின் அவலநிலையை விளக்கிக் கடிதம் எழுதினார். பாதுகாப்பு கேட்டு எழுதப்பட்ட அந்தப் புகார் கடிதத்தை தமிழக அரசோ, காவல்துறையோ கண்டுகொள்ளவில்லை.

1968, டிசம்பர் 25 மாலை.. பண்ணையார் ஆட்கள், தொழிலாளர் தலைவர் டீக்கடை முத்துச்சாமியைத் தூக்கிச்சென்று, சாலைத்தெருவில் உள்ள ராமானுஜ நாயுடு வீட்டில் அடைத்து வைத்தனர். இதையறிந்த கிராமத்தினர் அந்த வீட்டின் முன் திரண்டு, வெளியில் அனுப்பச் சொல்லி குரல் எழுப்பினர். வீட்டை எதுவும் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில், முத்துச்சாமியை பின்வாசல் வழியாக வெளியே அனுப்பினர். அந்த மோதலில் பண்ணை அடியாள் இருக்கை பக்கிரிசாமி கொல்லப்பட்டார். முத்துச்சாமியை, விவசாயிகள் மீட்டதைக் கேட்டு ஆவேசமானார் கோபாலகிருஷ்ண நாயுடு. மிராசுதார்களையும், ஆட்களையும் திரட்டிக்கொண்டு, அவரே வீதியில் இறங்கினார். பெட்ரோல் டின், துப்பாக்கி சகிதமாக, சுமார் 200 பேர், இரவு 9 மணிக்கெல்லாம் கீழவெண்மணி கிராமத்திற்குள் நுழைந்தனர். மூன்று பக்கமும் சூழ்ந்து தாக்குதல் நடத்தினர். கிராமத்தினர் அவர்கள் மீது கல்லெறிய, பதிலுக்கு சுட ஆரம்பித்தனர். அதனால், பயத்தில் கிராமத்தினர் ஓட ஆரம்பித்தனர். அடியாட்களோ அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் ஓடஓட விரட்டினார்கள்.

ஆண்களில் பலர், துப்பாக்கி ரவை பாய்ந்து, வெட்டுப்பட்டு, தப்பித்து ஓடினார்கள். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் தப்பிக்க முடியாத நிலையில், மண்சுவராலான ராமையாவின் குடிசைக்குள் பதுங்கினார்கள். தென்னை மட்டையைக் கொளுத்தி, வழிநெடுகிலும் ஒவ்வொரு வீடாகத் தீவைத்த பண்ணை அடியாட்கள், ராமையாவின் குடிசையில் கிராமத்தினர் ஒளிந்திருப்பதைக் கண்டனர். அந்தக் குடிசைக்குத் தீ வைத்துவிட்டு, உயிரோடு யாரும் வெளியேறிவிடாதபடி சூழ்ந்து நின்றனர். அலறித்துடித்து அத்தனை உயிர்களும் அடங்கியபிறகே, அந்த இடத்தைவிட்டுச் சென்றனர்.

கூலி உயர்வுக்காகப் போராடிய தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த கொலைவெறித் தாண்டவம், சாதி வெறி பின்னணியில், 44 உயிர்களைத் தீயில் கருகச் செய்தது. இதில் கொடுமை என்னவென்றால், விவசாயிகளை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீசார், இந்தப் படுகொலைக்குத் துணைபோனதுதான்.

இருதரப்பினர் மீதும் வழக்குள் பதிவாயின. இருக்கை பக்கிரிசாமி என்ற அடியாளைக் கொலை செய்ததற்காக, கோபால் உள்ளிட்ட 22 விவசாயிகள் மீதும், குடிசையைக் கொளுத்தி 44 பேர் உயிரைப் பறித்ததற்காக, கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்கு விசாரணை நடந்து, தீர்ப்புகள் வெளிவந்தன.

தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்கிய பண்ணை அடியாள் இருக்கை பக்கிரிசாமியை அடித்துக் கொன்ற வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இன்னொருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. மேலும் 6 பேருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் 10 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில், தாழ்த்தப்பட்ட விவசாயத் தோழர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. 44 பேரை உயிரோடு எரித்துக்கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் 7 மிராசுதார்களுக்கும் ஜாமின் கிடைத்தது.

கீழவெண்மணி வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கவனிப்போம்!

‘வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருமே (23 பேர்) மிராசுதார்களாக இருப்பது வியப்பளிக்கிறது. இவர்களில் பலரும், பணக்காரர்களாகவும், பெரிய நிலச்சுவான்தார்களாகவும் உள்ளனர். சமூக அந்தஸ்தும், கவுரவுமும் உள்ள இவர்கள், இந்தக் குற்றத்தைச் செய்திருக்க மாட்டார்கள். விவசாயிகளைப் பழி தீர்ப்பதற்கு எவ்வளவு ஆர்வமாக இருந்திருந்தாலும், வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல், சம்பவம் நடந்த இடத்திற்கு தாங்களாகவே நேரில் நடந்து சென்று வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்கு கடினமாக இருக்கிறது.’

கட்டுரை ஒன்றில் நீதியரசர் தி.சுதந்திரம் இப்படிச் சொல்கிறார்

‘நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது நாம் அறிந்ததுதானே என்று அவசரப்பட்டுச் சொல்லிவிடலாகாது. விசாரித்துத் தீர்ப்பு வழங்கும்போது, தெரிந்தவர், தெரியாதவர், வேண்டியவர், வேண்டாதவர், தேவையானவர், தேவையற்றவர் என்ற பாகுபாடு கண்ணில் பட்டுவிடக்கூடாது. எவ்வித சலனத்திற்கும் உட்படாமல், தியானத்தில் ஆழ்ந்து சிந்திப்பதுபோல், கண்களால் பாராமல், காதுகளால் மட்டும் கேட்டு முடிவுக்கு வரவேண்டும். மொத்தத்தில், பாகுபாடின்றி, எல்லோர்க்கும் சமமான, ஆழ்ந்து சிந்தித்து, அளந்து எடைபோட்ட நியாயமான தீர்ப்பே பகரப்படவேண்டும் என்பதின் அடையாளம்தான், கண்கள் கட்டப்பட்ட நீதிதேவதையின் உருவமாக இருக்கிறது.’

இதே நாளில் தமிழகத்தை உலுக்கிய கீழவெண்மணிப் படுகொலை விவகாரத்தில், பெரிதாக நாம் என்ன சொல்லிவிட முடியும்?

வர்க்கபேதம் ஒழியட்டும்!

சாதிதுவேஷம் விலகட்டும்!

நீதி வெல்லட்டும்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT