ADVERTISEMENT

"பாஜகவில் மூத்த தலைவர்கள் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள்; வாயில் வந்ததையெல்லாம் அண்ணாமலை பேசுகிறார்..." - ராம. சுப்பிரமணியன் பேச்சு

11:04 PM Dec 02, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் பலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வந்த நிலையில் இதுதொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " இது நூறு சதவீதம் உண்மை, பெரும்பாலான மூத்த பாஜக நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

அண்ணாமலை வந்த பிறகு ஏதோ உயரப் பறக்கின்ற மாதிரி கட்சியைக் காட்டிக்கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த நிலைமைக்குக் கட்சி வந்துள்ளதே என்று பலரும் தங்கள் வருத்தத்தைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த நிலைமை சரியாகுமா இல்லை இதேபோன்ற நிலைதான் தொடருமா என்ற சந்தேகமும் தற்போது மூத்த தலைவர்களுக்கு வந்துள்ளது. அறிவாளிகள் இருந்த கட்சி என்பதைத் தாண்டி குற்றச்செயல்கள் செய்பவர்கள் இருக்கும் கட்சி என்ற பெயருக்கு தற்போது ஆளாகியுள்ளது. அண்ணாமலை தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். வேறு யார் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

அவர் தடாலடி அரசியல் செய்து வருவது ஒருபுறம் இருந்தாலும் முக்கியமான தலைவர்களை எல்லாம் அவர் ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டார். உங்கள் பத்திரிகைகளில் கூட தமிழக விவகாரம் தொடர்பாக இல.கணேசன் பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இல.கணேசன் போன்றவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட தலைவர் தெரியுமா? வெறும் ஒற்றைப்பையைக் கையில் மாட்டிக்கொண்டு தமிழகத்தில் பாஜகவை வளர்த்தவர்கள். கட்சி இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் இவரைப் போன்றவர்கள் கட்சிக்கு உழைத்ததுதான். ஆனால் அதைக்கூட நினைத்துப் பார்க்காமல் தான்தோன்றித் தனமாகச் செயல்பட்டால் கட்சி சிதைந்து போவதை யாராலும் தடுக்க முடியாது. பழைய ஆட்கள் எல்லாம் பாஜகவில் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலில் அண்ணாமலை பேசும்போது தான் என்ன பேசுகிறோம் என்று தெரிந்து பேச வேண்டும். வாயில் வந்ததையெல்லாம் பேசக்கூடாது. தனக்கு மட்டும்தான் பேசத் தெரியும் என்பதைப் போல் என்ன பேசுகிறோம் என்று புரியாத அளவிற்குப் பேசுவதை முதலில் அண்ணாமலை தவிர்க்க வேண்டும். நாம் பேசுவது மக்களிடம் எப்படிப் போய்ச் சேரும் என்று முதலில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் புரிந்துகொண்டு பேச வேண்டும். பழைய ஆட்கள் எல்லாம் போனால் பரவாயில்லை என்பதெல்லாம் என்ன மாதிரியான புரிதல் என்று தெரியவில்லை. பழையன கழிதல் என்றால், இன்றைக்கு பாஜக இந்த அளவுக்கு வருவதற்குக் காரணமே அவர்கள் தானே, அதை இவர் இல்லை என்று மறுப்பாரா? இன்றைக்கு பாஜக நிழலில் அவர் இருப்பதற்கே அவர்களின் உழைப்புதானே பிரதானமாக இருந்தது" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT