publive-image

“மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்கிற பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் அறிவிப்பு வெற்று நாடகம்” என மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள தைக்கால் கிராமத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நேற்று (03.08.2021) நடைபெற்றது. இதனை மமகதலைவர் ஜவாஹிருல்லா திறந்துவைத்தார்.

Advertisment

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்ளைச் சந்தித்த அவர், “அகில இந்திய அளவில் மருத்துவ சேர்க்கையில் 27% இடஒதுக்கீடு வழங்கிய ஒன்றிய அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதே நேரம் தமிழக அரசு மற்றும் முதல்வரின் தொடர் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகத்தான் இதை நாங்கள் உணர்கிறோம். தமிழகத்தைப்போல்,இந்திய அளவிலும் அனைத்து தேர்வுகள் பணிகளில் 50% இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும். இந்தக் கோரிக்கையை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

Advertisment

தொடர்ந்து அவரிடம், “பாஜக தமிழகத் தலைவர் வரும் 5ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளாரே..” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கர்நாடகத்தை ஆளும் பாஜக முதல்வர் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறார். அணை கட்டினால் தமிழகம் பாதிக்கபடும் என இங்குள்ள அனைத்து கட்சியினரும் குரல் கொடுத்துவருகிறோம். இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார். கர்நாடகத்தில் பணியாற்றியபோது நான் கன்னடர் என பேசியவர்தான் அண்ணாமலை. அப்படிபட்டவரின் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வெற்று நாடகமாகத்தான் பார்க்க வேண்டும். பாஜக தலைவர்கள், பிரதமர் மோடியை நேரில் சென்று வலியுறுத்தலாம் அல்லது பிரதமர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்கட்டும். அது சரியானதாக இருக்கும். அதைவிடுத்து பிள்ளையைக் கிள்ளிவிடுவதும் அவர்களே, தொட்டிலை ஆட்டுவதும் அவர்களாகவே இருப்பது நகைப்பாக இருக்கிறது. அவர்களின் இந்த அறிவிப்புகள் எல்லாமே நாடகம்தான்” என்று தெரிவித்தார்.