ADVERTISEMENT

தமிழகம் - 25 மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்? Innova காரில் எத்தனை பேர் போகலாம்? 

08:13 PM May 17, 2020 | rajavel

ADVERTISEMENT


கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 31.05.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடன், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT


கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை என்று அறிவித்துள்ளார்.

தமிழகம் - 25 மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்?

அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN e-pass இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது.

மாவட்டத்திற்குள் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தைப் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒரு மாவட்டத்திலிருநது இன்னொரு மாவட்டத்திற்குச் சென்றுவர TN e-pass பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.

அரசுப் பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும் Innova போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்படுகிறது.


மாவட்டத்திற்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் TN e-pass இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசியப் பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதைக் கண்டிப்பாகப் பொதுமக்கள் தவிக்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் - தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்குக் குறைவாகப் பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீத பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயக்குவதற்கு அனுமதி.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது.

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்குத் தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்களிக்கப்படுகிறது. இதற்காகச் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், சென்னை மாநகர ஆணையரிடமும் அனுமதி பெற வேண்டும்.

மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் TN e-pass உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர பயன்படுத்தப்படும் டாக்ஸி, ஆட்டோவுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT