ADVERTISEMENT

எப்படி இருக்கிறது வெந்து தணிந்தது காடு? - விமர்சனம்

10:31 AM Sep 16, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு. மாநாடு கொடுத்த வெற்றி ஒரு பக்கம், சிம்புவின் நண்பர் கூல் சுரேஷ் போன இடம், வந்த இடம், நின்ற இடம் என்று எல்லா இடங்களிலும் இந்த படத்தின் தலைப்பை சொல்லி சொல்லி ட்ரெண்ட் கிரியேட் செய்தது இன்னொரு பக்கம் என பல்வேறு எதிர்பார்ப்புகளை கிளப்பிய இப்படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?

தென் தமிழகத்தில் இருந்து மும்பைக்கு பிழைப்பு தேடி செல்லும் சிம்பு அங்கு ஒரு பரோட்டா கடையில் வேலை செய்கிறார். அந்த புரோட்டா கடையின் முதலாளி கடையில் வேலை செய்யும் தமிழர்களை கூலிப்படையாக உபயோகப்படுத்தி வருகிறார். முதலாளி காட்டிய இடத்தில் பாய்வதும், ஏன் என்று கேட்காமல் பலரை போட்டு தள்ளுவதும் என இருக்கும் தொழிலாளிகளுக்கு மத்தியில் சிம்புவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வேறு வழி இன்றி கூலிபடையாக மாறுகிறார். இப்படி சாதாரண கூலிபடை அடியாளாக தொடங்கிய சிம்பு எப்படி கேங்ஸ்டர் ஆகிறார் என்பதே ‘வெந்து தணிந்தது காடு’ முதல் பாக படத்தின் மீதி கதை.

நெல்லை தமிழ் பேசும் முத்து என்ற இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு அதிரடி திரில்லர் கேங்ஸ்டர் படத்தை கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். முதல் பாதி முழுவதும் ஆங்காங்கே சில வேகத்தடைகளுடன் மெதுவாக கடந்து செல்லும் படம் இடைவேளைக்குப் பிறகு சூடு பிடித்து கொஞ்சம் வேகமும், விவேகமுமாக பயணித்துள்ளது. படத்தில் பெரிதாக எந்தத் திருப்பமும் இல்லை என்றாலும் ஆங்காங்கே சில எபிசோடுகள் மற்றும் சின்ன சின்ன உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் மூலம் முழு படத்தையும் ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். குறிப்பாக இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் காட்சி, பிற்பகுதியில் வரும் ஆக்சன் காட்சிகள் என ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுக்கும்படியான சில காட்சிகள் சிறப்பாக அமைந்து தியேட்டரில் கைத்தட்டல் பெற்றுள்ளன.

அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து முத்து கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டி இருக்கிறார் நாயகன் சிம்பு. முன்பு எப்பொழுதும் பார்த்திராத ஒரு புது சிம்புவை இப்படத்தில் காணலாம். முந்தைய படங்களின் சாயல்கள் பெரும்பாலும் எங்குமே தெரியாத அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி யதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். இவருக்கு விருதுகள் நிச்சயம். சிம்புவின் அம்மாவாக வரும் ராதிகா ஏழை கிராமத்து தாய்மார்களை அப்படியே கண்முன் நிறுத்தி பார்ப்பவர்களை கலங்க செய்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் இவரின் கதாபாத்திரம் மனதில் பதியும்படி அமைந்துள்ளது. நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி சில காட்சிகளே வந்தாலும் தான் ஒரு புதுமுகம் என்ற உணர்வை கொடுக்காமல் ஆழமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி சென்றுள்ளார். காதல் காட்சிகளில் இவருக்கும் சிம்புவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. சிம்புவின் நண்பராக வரும் அப்புகுட்டி தனக்கு கொடுத்த வேலையை அழகாக செய்துள்ளார். மற்றபடி படத்தின் வில்லன்களாக நடித்திருக்கும் நடிகர்கள் வழக்கமான கௌதம் மேனன் வில்லன்களைப் போலவே மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஏ ஆர் ரகுமானின் இசை. மறக்குமா நெஞ்சம், மல்லிப்பூ, உன்ன நெனச்சதும் மற்றும் சிம்பு பாடிய பாடல் என அத்தனை பாடல்களும் மனதை வருடி உள்ளன. அதேபோல் பின்னணி இசை மூலம் ஒரு புது உலகத்திற்கே நம்மை கொண்டு சென்றுள்ளார் இசை புயல் ஏ ஆர் ரகுமான். இவரின் யூனிக்கான சப்தங்கள் நம்மை மும்பை நகருக்கே கூட்டி சென்று அங்கு உலாவும் படி உணர செய்துள்ளது. சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் கிராமம் மற்றும் மும்பையின் இன்டீரியர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஆக்ஷன் காட்சிகளும் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டு ரசிக்க வைத்துள்ளது.

என்னதான் ஆங்காங்கே பல எபிசோடுகள் சிறப்பாக அமைந்திருந்தாலும் அடுத்தடுத்து யூகிக்கும்படியான காட்சிகளும், படத்தின் நீளமும் படத்திற்கு சற்று பெரிய மைனஸ் ஆக அமைந்து பார்ப்பவர்களுக்கு அயர்ச்சி கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் படம் முழுவதும் பல இடங்களில் தென்படும் தொய்வுகளும் படத்திற்கு பாதகமாக அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஓரளவு சரி செய்யும் படி படத்தின் நீளத்தை குறைக்கும் பட்சத்தில் இது ஒரு சூப்பர் ஹிட் படமாக மாற வாய்ப்பு இருக்கிறது.

வெந்து தணிந்தது காடு - சிம்புவின் டெடிகேஷனுக்கு வணக்கத்தை போடு!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT