ADVERTISEMENT

கூடா நட்பினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..? தொரட்டி விமர்சனம் 

04:30 PM Jul 31, 2019 | santhosh

1980களில் ஊர்ஊராக சென்று ஆட்டுக்கிடை போட்டு விளைநிலங்களுக்கு ஆட்டு புழுக்கை உரம் கொடுக்க கடைபோடும் கீதாரி குடும்பங்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது ‘தொரட்டி’.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாயகன் ஷமன் மித்ரு குடும்பத்தோடு வெளி ஊரில் உள்ள தூரத்து உறவினர் உதவியுடன் ஆட்டுக்கிடை போடுகிறார். அங்கு அவருக்கு மூன்று திருடர்களுடன் நட்பு கிடைக்கிறது. அவர்கள் ஷமனிடம் உள்ள பணத்தில் கும்மாளம் அடிக்கின்றனர். இந்த கூடா நட்பினால் குடி பழக்கத்திற்கு ஆளாகும் ஷமன் மித்ருவிற்கு திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவார் என எண்ணி தன் தூரத்து உறவினர் பெண்ணான நாயகி சத்யகலாவை ஷமனுக்கு திருமணம் செய்து வைக்கிறது அவரது குடும்பம். இதற்கிடையே அந்த மூன்று திருடர்களும் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு தப்பித்து செல்லும்போது நாயகி சத்யகலா அவர்களை ஊர் மக்களிடம் காட்டி கொடுத்துவிடுகிறார். இதையடுத்து அவர்கள் போலீசால் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை அனுபவிக்கிறார்கள். பின்னர் வெளியே வரும் அவர்கள் நாயகி சத்யகலாவை பழிவாங்க எண்ணி அவரை கொலைசெய்ய முயற்சிக்கும்போது சத்யகலா இவர்களது நண்பன் ஷமனுடைய மனைவி என்று தெரியவருகிறது. இதையடுத்து நட்பா, வஞ்சகமா..? என குழப்பத்தில் இருக்கும் இவர்கள் சத்யகலாவை என்ன செய்தார்கள், இவர்கள் நட்பால் ஷமனுக்கு ஏற்பட்ட நிலைமை என்ன..? என்பதே 'தொரட்டி' படத்தின் கதை.

கீதாரி குடும்பத்தை சேர்ந்த ஆடு மேய்ப்பவர்களின் கண்ணீர் வாழ்க்கையை மிக இயல்பாக பதிவு செய்துள்ளது இந்த தொரட்டி. இவர்களுக்குள் கொலை, கொள்ளை செய்யத்துணியும் ஒரு கருப்பு ஆட்டு கூட்டம் நுழைவதால் எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை தெளிவாகவும், உணர்வுபூரவமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மாரிமுத்து. தென்தமிழகத்தின் வழக்காடலை சிறப்பாக வசனங்கள் மூலம் கடத்தி ரசிக்கவைத்துள்ளார். முதல்பாதி முழுவதும் கீதாரிகளின் வாழ்வியல், குடும்ப சூழல், நட்பு, காதல், திருமணம் முறை என கலகலப்பாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் செல்லும் படம் பிற்பகுதியில் துரோகம், கொலை, கொள்ளை என க்ளிஷேவான காட்சிகள் மூலம் நகர்ந்துள்ளது. இருந்தும் மண்சாந்த விஷயங்கள் படத்தோடு ஒன்றவைத்து அயர்ச்சியை தவிர்க்க முயற்சி செய்துள்ளது.

நாயகன் ஷமன் மித்ரு பாத்திரம் அறிந்து நடித்துள்ளார். தன் நடிப்பு, உடல் மொழி மூலம் கீதாரிகளை அப்படியே கண்முன் நிறுத்த முயற்சி செய்துள்ளார். படத்தின் மிக பெரிய பலமாக நாயகி சத்யகலாவின் நடிப்பு அமைந்துள்ளது. துடுக்கான பெண்ணாக வரும் அவர் காதல், ஊடல், கூடல் என காட்சிக்கு காட்சி மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியுள்ளார். இவரே படத்திற்கு இன்னொரு நாயகனாக இருந்து படத்தை தாங்கி பிடித்துள்ளார். ஷமனின் தந்தையாக வரும் அழகு படத்திற்கு ஜீவனை கூட்டியுள்ளார். ஷமனின் நண்பர்களாக வரும் திருடர்கள் கதாபாத்திரம் கவனம் ஈர்த்துள்ளனர்.

வேத் ஷங்கரின் இசையில் 'சவுகாரம்' பாடல் மனதை வருடியுள்ளது. ஜித்தன் ரோஷன் பின்னணி இசை படத்தோடு ஒன்றவைத்துள்ளது. குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவி கட்சிகளுக்கு உயிர் சேர்த்துள்ளது.

தொரட்டி - ஆடு மேய்ப்பவர்களின் எதார்த்த வாழ்வு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT