Rangoli Movie Review 

வடசென்னையை மையப்படுத்தி எத்தனையோ கேங்ஸ்டர் கதைகள் உலா வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் முதல்முறையாக வடசென்னையை மையமாக வைத்து பள்ளி மாணவர்கள் குறித்த விழிப்புணர்வு கதை ஒன்று தயாராகி திரையரங்குக்கு வந்திருக்கிறது. இது வட சென்னை கேங்ஸ்டர் படங்கள் பெற்ற அதே வரவேற்பைப் பெற்றுள்ளதா?இல்லையா?

Advertisment

சலவைத்தொழிலாளியான ஆடுகளம் முருகதாஸுக்குதன் மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தனது ஏழ்மை காரணமாககார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கிறார் முருகதாஸின் மகன் ஹம்ரேஷ். எப்பொழுதும் மாணவர்களுடன் மோதல், சண்டை என அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் ஹம்ரேஷை முருகதாஸால் அடக்க முடியவில்லை. தன் மகனுக்கு சேர்க்கை சரியில்லாத காரணத்தினால் தான் அவன் இப்படி எல்லாம் அட்டகாசம் செய்கிறான் என நினைத்த ஆடுகளம் முருகதாஸ், கடன் வாங்கி தன் மகன் ஹம்ரேஷை பெரிய கான்வென்ட் பள்ளியில் சேர்க்கிறார். போன இடத்தில் இது நாள் வரை தமிழ் மீடியத்தில் படித்த ஹம்ரேஷ் அங்கு இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் தாக்குப் பிடிக்க மிகவும் சிரமப்படுகிறார். இதனால் அவர் கேலி கிண்டல்களுக்கு ஆளாகி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அதுபோக இந்த மாதிரி பெரிய பள்ளியில் படிப்பதால் தனக்கு பீஸ் கட்ட தன் குடும்பம் படும் கஷ்டத்தை எண்ணி மிகவும் வருந்துகிறார். இதற்கிடையே தன்னுடன் சக மாணவியாக படிக்கும் பிரார்த்தனா உடன் அவருக்கு காதலும் ஏற்படுகிறது. இதனால் அவரது படிப்பும் சற்று பாதிக்கப்படுகிறது. இதையடுத்து அவர் இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டாரா, இல்லையா? ஒழுங்காக படித்தாரா, இல்லையா? பிரார்த்தனா உடனான காதல் என்னவானது? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

Advertisment

அறிமுக நாயகன் ஹம்ரேஷ், கார்ப்பரேஷன் பள்ளியிலிருந்து கான்வென்ட் பள்ளிக்கு மாறும் மாணவனுடைய மனநிலை உளவியல் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை மிக எதார்த்தமாகவும் அழகாகவும் வெளிப்படுத்தி தான் ஒரு அறிமுக நடிகர் என்பதே தெரியாத அளவுக்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு உறுதுணையாக இவருடன் நடித்த சக மாணவர்களும், அவருடைய காதலி பிரார்த்தனாவும் சிறப்பாக நடித்து கதைக்கும் படத்திற்கும் வலு சேர்த்து இருக்கின்றனர். பொதுவாக ஒரு கஷ்டப்படும் ஏழைக் குடும்பம் என்று ஒரு படத்தில் காட்டப்படுவது எப்படி இருக்கும் என்றால் எப்பொழுதும் சோகமாகவே இருக்கும். ஆனால் இந்தப் படத்திலோ நாயகன் ஹம்ரேஷ் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை ஆடுகளம் முருகதாஸ் தாய் சாய் ஸ்ரீ மற்றும் மூத்த மகள் அக்‌ஷயா ஹரிஹரன் ஆகியோர் எப்பொழுதும் ஸ்போர்ட்டிவாகவே எல்லா விஷயத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பாக ஆடுகளம் முருகதாஸ் மற்றும் அவரது மனைவி சாய் ஸ்ரீ உடைய கெமிஸ்ட்ரி இந்த படத்தில் மிகச் சிறப்பாக அமைந்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. இந்தப் படத்தில் இவர்கள் இருவருமே நாயகன் நாயகி போல் தோற்றமளித்து படத்தை தாங்கிப் பிடித்திருக்கின்றனர். இப்படி இவர்களது கதாபாத்திரத்தை மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் வடிவமைத்து அதன் மூலம் ஒரு கலகலப்பான அதேசமயம் மனதை வருடும்படியான மெசேஜ் உடைய திரைக்கதையை அமைத்து கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குநர் வாலி மோகன் தாஸ்.

Rangoli Movie Review 

ஒரு ஏழைக் குடும்பம் தன் பிள்ளையைப் படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதையும், அந்த மாதிரியான குடும்பத்திலிருந்து வரும் பிள்ளை ஒரே நேரத்தில் இரண்டு விதமான பள்ளிகளில் படிக்கும் பொழுது அவர் சந்திக்கும் உளவியல் ரீதியான பிரச்சனைகளையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி அதை ரசிக்கும் படியும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வாலி மோகன் தாஸ். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் நகர்ந்து இறுதிவரை கலகலப்பாகவும் அதேசமயம் கலங்கும்படியும் நகர்ந்து கடைசியில் சற்று கதைக்கு நெருக்கம் இல்லாத ஒரு கிளைமாக்ஸ் காட்சியோடு முடிந்துள்ளது. முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் ரிப்பீட்டான காட்சிகள் ஆங்காங்கே தென்படுவது படத்திற்கு சற்றே அயற்சியைக் கொடுத்திருக்கிறது. அதேபோல் ஒரு ஏழை மாணவன் தான் படிக்கும் கார்ப்பரேஷன் பள்ளியிலும் சிறப்பாகவே படிக்கிறான். இருந்தும் சேர்க்கை சரியில்லை என்ற ஒரு காரணத்திற்காக அவரை கான்வென்ட் பள்ளியில் சேர்த்த பிறகு அந்த மாணவன் தன் குடும்ப கஷ்டத்திற்காக மீண்டும் ஏற்கனவே படித்த பள்ளிக்கு திரும்புவது என்பது சற்றே ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லாமல் இருப்பது கதையுடன் நம்மை ஒட்ட வைக்க மறுக்கிறது. பிராக்டிக்கலாக பார்க்கும் பட்சத்தில் இவை நடைமுறைக்கு சற்றே தள்ளி இருப்பது படத்துடன் நம்மை தள்ளி இருக்கச் செய்கிறது. மாணவன் படிப்பது 11 ஆம் வகுப்பு. அதுவும் அரையாண்டுகள் கடந்து விடுகிறது. அப்படி இருக்கும் சமயத்தில் அவர் இன்னமும் படிக்க இருப்பதோ ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே. இதுவரை தன் குடும்பம் எவ்வளவோ கஷ்டப்பட்டு அந்த மகனை படிக்க வைக்கின்றனர். அவர்களுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு என்பது அவ்வளவு பெரிய விஷயமாக இருக்க வாய்ப்பு இல்லை. இப்படியான சூழலில் ஒரு மாணவன் தன் குடும்பம் படும் கஷ்டத்தை நினைத்து தான் படிக்கும் இடத்திலிருந்து மற்றொருஇடத்திற்கு மாற்றப்படுவது என்பது அவருடைய ஸ்கூல் கேரியரை பாதிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதைப் பார்க்கும் மாணவர்கள் இதேபோல் தவறான முடிவை எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த மாதிரியான சின்ன விஷயங்களை மட்டும் தவிர்த்து விட்டு இப்படத்தை பார்க்கும் பட்சத்தில் இது ஒரு தவிர்க்க முடியாத படமாக மாறுகிறது.

Rangoli Movie Review 

கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையில் மெலடி பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக ‘எங்கெங்கும் வானம்’ பாடலில் பாடல் ஆசிரியர் வேல்முருகனின் பாடல் வரிகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அதேபோல் பின்னணி இசையும் சரியான கலவையில் அமைந்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. மருதநாயகம் ஒளிப்பதிவில் பள்ளிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு படமாக பார்க்கும் பட்சத்தில் இப்படத்தில் பிராப்பர் திரைக்கதைக்கான எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் எதார்த்த சினிமா பாணியில் தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அப்படியே கண்முன் நிறுத்தும்படியான திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும்படி கொடுத்த இயக்குநர் வாலி மோகன் தாஸ், முடிவு காட்சிகளில் ஏனோ சற்றுத்தடுமாறி இருக்கிறார்.படத்தின் முடிவாகச் சொல்ல வரும்மெசேஜ் சற்றேஎதார்த்த வாழ்வுக்குத்தள்ளி இருப்பது மட்டும் சற்று மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. மற்றபடி படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

ரங்கோலி - கலர்ஃபுல்!