Skip to main content

அம்பேத்கர், இளவரசன் மற்றும் பலர் இருக்கும்... - பரியேறும் பெருமாள் விமர்சனம் 

Published on 29/09/2018 | Edited on 29/09/2018
pariyerum perumal


"எங்கப்பா செருப்பு தைக்கிறவரு, அதை சொல்லிச் சொல்லியே என்னை மேல வர விடாம மிதிச்சாய்ங்க... எல்லா வலியையும் சேர்த்து பேய் மாதிரி படிச்சேன். இன்னைக்கு நான் உனக்கு பிரின்சிபால். இப்போ அவுங்க எல்லோரும் எனக்கு வணக்கம் வைக்கிறாய்ங்க..." - பரியேறும் பெருமாள் படத்தில் சட்டக் கல்லூரி முதல்வர் பாத்திரம் பேசும் இந்த வசனம் ஒடுக்கப்பட்டோருக்கான வழிகாட்டல்...

"காலம் இப்படியேவா தம்பி இருக்கும்... நல்லா படிச்சு முடிங்க. ஒரு நாள் எல்லாம் மாறும்ல... அப்போ பார்ப்போம். இப்போதைக்கு என்னால இதுதான் சொல்ல முடியும்" - ஒரு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த தந்தை தன் மகளின் நண்பனான ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனிடம் பேசும் இந்த வார்த்தைகள் குற்ற உணர்வுடன், அதே நேரம் மாற்றத்துக்குத் தயாராக இருக்கும் பலரின் வாக்குமூலம்

"இதுக்கு காசெல்லாம் வேணாம். நம்ம குலசாமிக்கு செய்ற கடமையா இதை செய்றேன். ஏதாவது தப்பாப் போனா மட்டும் இதை வச்சு என்னை வெளிய எடுத்து விடு" - ஆணவக் கொலை செய்யப்போகும் ஒருவர் சொல்லும் இந்த வார்த்தைகள் தர்க்கங்களே இல்லாத, வெளியே வரத் தயாராக இல்லாத, காரணத்தை யோசிக்காமல் கெட்டி தட்டிப் போன சாதீய மனங்களின் பிரதிபலிப்பு

"நீங்க நீங்களா இருக்க வரைக்கும், நாங்க நாயா இருக்கணும்னு நினைக்கும் வரைக்கும் எதுவும் மாறாது" - அடிமைத்தனத்தை, வேறுபாட்டை, அவமானத்தை, வலியை சுமந்திருக்கும் ஒடுக்கப்பட்ட முதல் தலைமுறை கல்லூரி மாணவனின் விரக்திக் குரல் 

"என்னை போலீஸ் அடிச்சதை ஊருக்குள்ள சொல்லாத. இவன் நமக்காகப் பேசுவான்னு நம்புற நம்ம மக்களுக்கு நம்பிக்கை போயிரும். அப்புறம் ஒருத்தனும் பேசவே துணிய மாட்டாய்ங்க" - ஆர்.கே.ஆர்.ராஜா பாத்திரம் பேசும் இந்த வார்த்தைகள் தன் மக்களுக்காக துணிவை வளர்த்துக் கொண்டு ஆபத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு உண்மையான போராளியின் மனஓட்டம்

பரியேறும் பெருமாள், சாதிக் கொடுமைகள் குறித்தும் சாதி வேற்றுமை, சமூக நீதி குறித்தும் பேசிய பல தமிழ்ப் படங்களிலிருந்து வேறுபடுவது இந்த விவாதங்களால்தான். 'என்னை நீ அடக்கினாய், உன்னை நான் அடக்குவேன்' என்ற வன்மம் தவிர்த்து, 'வா ஒன்றாக அமர்ந்து டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்... என்ன வித்தியாசம்? அதை களையலாம்' என்று அழைக்கிறான் இயக்குனர் மாரி செல்வராஜின் 'பரியன்' என்கிற 'பரியேறும் பெருமாள்'. இதற்காகவே மாரியை மலர் கொடுத்து வரவேற்கலாம்.  

 

pariyerum perumal 2

             

ஒடுக்கப்பட்ட சாதிக்காரர்கள் அதிகம் வசிக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பரியேறும் பெருமாள் B.A., B.L, (மேல ஒரு கோடு) திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். கதிர் படிக்கும் அதே வகுப்புத் தோழி ஜோ (எ) ஜோதி மகாலக்ஷ்மியாக ஆனந்தி. இருவரும் நட்பாகப் பழகி, அவர்களின் அன்பு அடுத்தகட்டத்திற்கு செல்ல முற்படும் சமயத்தில்  கதிர் எதிர்கொள்ளும் சாதி ஆணவத் தாக்குதல், கல்லூரி மாணவர்களிடையே ஆழமாக ஊன்றியிருக்கும் சமூக அரசியல் பிளவுகள், இதனால் ஒரு முதல் தலைமுறை மாணவன் அடையும் உளவியல் வலி, எதிர்கொள்ளும் விதம் என இதுவரை தமிழ் சினிமா பேசாத பல பொருள்களை பேசியிருக்கிறது 'பரியேறும் பெருமாள்'.

2005ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையில் திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் சந்திக்கும் ஏற்ற தாழ்வுகளையும், சவால்களையும், அவமானங்களையும் அப்படியே கண்முன் நிறுத்தி, மேடையில் நின்று பேசும் பிரச்சாரமாக இல்லாமல் அருகில் வந்து பேசியிருக்கிறது படம். அடர்த்தியான விஷயங்கள் இருந்தாலும் காட்சிப்படுத்துதலில் அழகு, இயல்பான நகைச்சுவை, சுவாரசியமான வாழ்வியல் என ஒரு திரைப்படமாகவும் திருப்தியளிப்பது பரியேறும் பெருமாளின் வெற்றி. பரியனின் தேவதைகளாக வரும் டீச்சர்கள், ஆனந்தி பாத்திரம், அந்த சூழலிலும் சாதியை மனதில் வைத்துப் பழகாத நண்பன் ஆனந்த்தாக வரும் யோகிபாபு என தன் குருவான இயக்குனர் குரு ராமின் தடங்கள் மாரி செல்வராஜிடம் தெரிகின்றன. ரயில் தண்டவாளக் காட்சி தருமபுரி இளவரசனுக்கு அஞ்சலி. கல்லூரி முதல்வர் பாத்திரம் அம்பேத்கரின் வழித்தோன்றல். படம் முடியும் விதம், திரைப்படக் கலையை சமூகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதன் உச்சம். ஒவ்வொரு கொலையும் மரணமும் மறுநாள் நாம் செய்தியாகப் படிக்கும்போது எப்படி மாறிப்போகிறது என்பதைக் காட்டியது புத்திசாலித்தனம்.

 

yogi babu



ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனதின் அடையாளமாக 'கருப்பி' நாயின் பாத்திரப் படைப்பு திரை மொழியின் சாத்தியங்களை உணர்த்தியுள்ளது. ஆனால், 'கருப்பி' பாத்திரம் ரசிகர்களுக்கு நெருக்கமாகும் முன்னரே சற்று அவசரமாக முடித்துவைக்கப்பட்டது போல உணர்வு. பரியனின் தந்தையாக கிராமிய கலைக் குழுவில் பெண் வேடமணிபவர் பாத்திரம் இதுவரை நாம் அடைந்திராத அதிர்வை அளிக்கிறது. தன் தந்தை கவுன்சிலர் என்பதை கல்லூரியில் பயன்படுத்த முயன்று தோற்கும் யோகி பாபுவின் காமெடியும், ஒரு காட்சியில் மட்டுமே வந்து அரங்கையே சிரிக்க வைத்த சண்முகராஜனின் காமெடியும் சரியான ஆசுவாசம்.

பிரச்சனை உச்சகட்டத்திற்கு சென்றாலும் அதை உற்ற நண்பனிடம் கூட பகிராத பரியனின் (கதிர்) மனநிலை, தன் குடும்பமும் உறவுகளும் இத்தனை சாதி  உணர்வு உள்ளவர்கள் என்பது குறித்த தெளிவில்லாமல் அவர்களிடமே எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசும் ஜோதி மஹாலக்ஷ்மி (ஆனந்தி) பாத்திரம் ஆகியவை சற்று குழப்பமாக இருக்கின்றன.

பரியனாக நடித்திருக்கும் கதிர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனுடைய கோபத்தையும், அவமானத்தையும், ஏமாற்றத்தையும், எதிர்த்து நிற்கும் திமிரையும் தேவையான இடத்தில் தேவைக்கேற்ப காட்டி தனக்குக் கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளார். குறிப்பாக தோழி வீட்டு திருமணத்தில் அவர் சந்திக்கும் அவமானத்தையும் கல்லூரியில் பெஞ்ச் மாறி உட்காரும் இடத்திலும் நடிப்பில் அசத்தியுள்ளார். கதிரின் தேவதையாக வரும் ஆனந்தி, ஆரம்பத்தில் நமக்கும் தேவதையாகத் தோன்றுகிறார். காட்சிக்குக் காட்சி கள்ளமில்லா நடிப்பில் அழகாய் மிளிர்ந்துள்ளார். இத்தனை நாள் பார்த்த யோகிபாபு, இதில் புதிதாக இருக்கிறார். நடிப்பில் அவரின் எல்லையை அழகாய் விரிவுபடுத்தியுள்ளார் மாரி செல்வராஜ். இவர்களுக்கு அடுத்தபடியாக மறக்க முடியாத பாத்திரத்தில்  கராத்தே வெங்கடேசன் 'தாத்தா'வின் மிரட்டலான நடிப்பு நம்மை பயமுறுத்துகிறது. சத்தமில்லாமல் ஆயுதமில்லாமல் நம்மை மிரட்டி மனதில் நிற்கிறது இந்த வில்லன் பாத்திரம். கல்லூரி முதல்வராக 'பூ' ராமு, ஆனந்தியின் தந்தையாக மாரிமுத்து இருவரும் இருவேறு சமூகங்களின் சரியான அடையாளங்களாக பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

pari



சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரியனின் வலியையும் கோபத்தையும் உரத்த குரலில் பேசுகிறது. ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் படத்தின் பெரும்பகுதி காட்சிகளை கிம்பில் தொழில்நுட்பம் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். திருநெல்வேலி சட்டக் கல்லூரியில், புளியங்குளத்தில், அந்த ரயில் தண்டவாளத்தில் என அத்தனை இடங்களிலும் நாமும் நேரில் நின்று பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளார் ஸ்ரீதர்.

பல நூற்றாண்டு வலியை வெறும் சத்தமாக, யுத்தமாக சொல்லாமல் ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக, உரக்க, அதே நேரம் பொறுமையாகப் பேசியிருக்கிறான் பரியேறும் பெருமாள். ஒரு முக்கியமான திரைப்படத்தை  தயாரித்திருக்கிறார் பா.ரஞ்சித்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!