Skip to main content

இப்படியெல்லாம் படமெடுக்கலாமா? பேரன்பு - விமர்சனம்

ஸ்பாஸ்டிக் (மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட) குழந்தையான பாப்பாவின் அருகில் இருந்து பார்த்துக்கொள்வதை தவிர்த்து பத்து ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்த தந்தை அமுதவன். பாப்பாவை பார்த்துக்கொள்ள முடியாமலும் வேறு பிரச்சனைகளாலும் மனைவி இன்னொருவருடன் வாழச் சென்றுவிட வேறு வழியின்றி பாப்பாவுடன் இருந்து பார்த்துக்கொள்ள வருகிறார் அமுதவன். உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் பாப்பாவை தொல்லையாகக் கருத, மனிதர்கள் இல்லாத தனிமையான இடத்தில் வீடு ஒன்றை வாங்கிக் குடிபோகிறார். மலைப் பகுதியில் மிக அழகான இடத்தில் அமைந்துள்ள அந்த வீட்டை ரியல் எஸ்டேட்காரர்கள் பல சதிகளை செய்து வாங்கிவிட, மீண்டும் மக்கள் கூட்டம் நிறைந்த நகரத்துக்கு தன் பாப்பாவுடன் தள்ளப்படுகிறார் அமுதவன். இன்னொரு பக்கம், தன்னை ஒரு பெண்ணாக உணர ஆரம்பிக்கும் பாப்பா, அந்த 13-14 வயதுக்கே உரிய உணர்வுகளை வெளிக்காட்ட ஆரம்பிக்க அதை எதிர்கொள்ள முடியாமல் குழம்பும் தந்தை, அந்த வாழ்க்கையை எப்படி தொடர்கிறார் என்பதே இயக்குனர் ராமின் 'பேரன்பு'.

 

mammoottyகடைசியாக எந்தத் திரைப்படத்தில் நாம் ஒரு ஸ்பாஸ்டிக் குழந்தையை பார்த்திருப்போம்? நினைவில் வரவே இல்லை. சரி, நம் வாழ்வில் கடைசியாக அப்படி ஒரு குழந்தையை எப்போது சந்தித்தோம்? தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு அப்படி ஒரு குழந்தை இருந்தாலும் அக்குழந்தையை சந்திப்பதை, அதனோடு பழகுவதை, முடிந்த அளவு நாம் தவிர்க்கத்தானே விரும்புகிறோம்? கதையாக சினிமாவும், நிஜத்தில் நாமும் தவிர்க்க விரும்பும் ஒரு விஷயத்தை நிஜத்துக்கு நெருக்கமான சினிமாவாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ராம்.

'இப்படிப்பட்ட குழந்தையை விட்டுவிட்டு ஓடிப்போனவள்' என்று எளிதில் கொச்சைப்படுத்தியிருக்கக்கூடிய அமுதவன் மனைவி பாத்திரத்துக்கும் கூட அவருக்கான நியாயத்தை கூறியது, ஒரு திருநங்கையின் வீடு, குடும்பம் எப்படியிருக்கும் என்பதை மனிதத்தோடு படமாக்கியது, மிகப்பெரிய  துரோகத்தை செய்த அஞ்சலி பாத்திரத்தை, "உங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்திருந்தால் என்னைப் போய் ஏமாற்றியிருப்பீங்க?" என்று மம்மூட்டி கடந்து போகும் இடம், தன் பையனை அடிக்கிறார்கள் என்று தெரிந்தும் அவனை அந்த ஹோமில் விட்டுவைக்க 'பூ' ராமு சொல்லும் காரணம்... இப்படி வாழ்க்கையின் எதார்த்தங்களை, உண்மைகளை, அன்பை ஒவ்வொரு காட்சியிலும் நிறைந்திருக்கும் ராமுக்கு பேரன்பு நிறைந்த வாழ்த்துகள். இயற்கை அற்புதமானது, இயற்கை புதிரானது, இயற்கை கொடூரமானது, இயற்கை பேரன்பானது என வாழ்க்கையை இயற்கையுடன் இணைத்து படத்தை அத்தியாயங்களாகப் பிரித்தது சினிமாவில் சாத்தியமாகும் சோதனைகளை உணர்த்துகிறது. இப்படிப்பட்ட சோகம் ததும்பும் கதையை அழுகையில்லாமல் கொண்டு சென்று பேரன்பும் பெருமகிழ்ச்சியும் தரும் முடிவைத் தந்திருக்கிறார். அமுதவன், உலகமயமாக்கலை வெறுக்கும் வழக்கமான ராம் நாயகன் இல்லையென்பதே ஒரு சர்ப்ரைஸ்தான். ஆனால் அதற்கு மேலான பிரச்சனைகள் இவருக்கு இருக்கிறது.

 

anjali peranbuமம்மூட்டி... பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடித்திருக்கும் தமிழ்ப் படம் 'பேரன்பு'. இந்த இடைவெளியைஅப்படியே நிரப்பிவிட்டது அவரது நடிப்பு. அமுதவனாக, மிக இயல்பாக வாழ்ந்திருக்கிறார். முதலில் ஏற்றக்கொள்ள மறுக்கும் மகளிடம் நடனமாடி, பாட்டுப்பாடி, நாய் போல் நடித்து இறுதியில் 'இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாது பாப்பா' என்று உட்காரும்போது பாப்பாக்களை வளர்க்கும் தந்தைகளின் சிரமத்தை பிரதிபலிக்கிறார். அஞ்சலியுடன் ஏற்படும் திடீர் உறவு, அடுத்த நாள் முழுதும் தொடரும்உற்சாகம், வந்திருப்பவர் அஞ்சலியின் கணவர் என்று தெரியாமல் அவரிடமே அஞ்சலியை சிலாகிப்பது என 60 வயதைத்தாண்டியும் மம்மூட்டி 'அழகன்'தான்.

சாதனா... படத்தில் எந்த இடத்திலும் இவர் 'தங்கமீன்கள்' சாதனாவாக, ஏன் பொதுவான ஒரு நடிகையாகக் கூடத் தெரியவேயில்லை. முழுதாக பாப்பாவாக மாறியிருக்கிறார். பேசுவது ஓரிரு வார்த்தைகள்தான், உடல்மொழிக்கும் வாய்ப்பில்லாத பாத்திரம்... சின்ன குறை கூட இல்லாமல் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் சாதனாவை சென்றடைந்து   விருதுகள் பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும். தமிழ் சினிமாவில் இந்தப் பாத்திரத்துக்கு முன்மாதிரிகள் பெரிதாக இல்லை என்பதே உண்மை. 'சப்பானி' கமல்ஹாசன், 'வில்லன்' படத்தில் அஜித், சமீபத்தில் 'ஜீரோ' இந்திப் படத்தில் அனுஷ்கா ஷர்மா, என எடுத்துக்கொண்டாலும் இந்த சாதனாவின் சாதனை வேற லெவல். வஞ்சகம் கலந்த அன்பைக் காட்டுவதில் அஞ்சலி பக்குவமாக நடித்துள்ளார். கற்றது தமிழ், அங்காடித் தெரு காலத்து அஞ்சலியின் சாம்பிளாக இருக்கிறார். திருநங்கை அஞ்சலி அமீர், தமிழ் பட ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம். மிக அழகான, இயல்பான நடிப்பு. அவருக்கு ராம் கொடுத்திருக்கும் பாத்திரம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நகர்வு.

 

sadhana peranbuகுறைகள் இருக்கத்தான் செய்கின்றன. மம்மூட்டியை ஏமாற்ற அஞ்சலி - பாவல் நவகீதன் செல்லும் தூரம், அவர்களின் பிரச்சனை சொல்லப்படாததால் நியாயமாகவும் இருக்கிறது. அதே காரணத்தால் நம்பமுடியாததாகவும் இருக்கிறது. ஸ்பாஸ்டிக் மகளின் பருவ உணர்வுகளை புரிந்துகொள்ளும் தந்தை அதற்காக செல்லும் எல்லை கொஞ்சம் அதீதம்தானே?

பேரமைதியான படத்தை பேரன்பாகக் கொடுத்திருக்கும் ராமுக்கு கைகொடுத்திருப்பவர் யுவன். கதையை தொந்தரவு செய்யாத, உணர்வுகளை உறுதியாகக் கடத்தும் இசை. ராம் படத்தில் நா.முத்துக்குமார் இல்லாதது பெரிய வெற்றிடம். வைரமுத்து தன் பாணியில் அறிவியல் - தத்துவம் கலந்த உண்மை சொல்லும் வரிகளால் படத்தின் உணர்வை சொல்லியிருக்கிறார். தேனி ஈஸ்வரின் கேமரா நம் கண்களாக மாறி அந்த வாழ்க்கையை அருகில் நின்று பார்க்கும் உணர்வை அளிக்கிறது.

'என் கதையைக் கேட்டால் நீங்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வை வாழ்கிறீர்கள் என்று தெரியும்' - இது படத்தின் தொடக்கத்தில் அமுதவன் சொல்வது. உண்மைதான், பேரன்பு வாழ்க்கையின் அர்த்தத்தை, ஆசிர்வாதத்தை அழகாக உணர்த்துகிறது. நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட கற்பிதங்களை உடைத்து புதிய வாழ்வை போதிக்கிறது. இப்படியெல்லாம் படம் எடுக்கலாமா என தமிழ் சினிமா ரசிகனை யோசிக்க வைக்கிறது ராமின் 'பேரன்பு'.    

                         
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...