ADVERTISEMENT

தமிழகத்தில் 'தூத்துக்குடி' நிகழ்ந்தது, 'போபாலு'ம் நிகழ்ந்தால்? உறியடி 2 - விமர்சனம்

07:01 AM Apr 03, 2019 | vasanthbalakrishnan

வெளிவந்தபோது பல காரணங்களால் கவனிக்கப்படாமல் போய், பிறகு இணையத்தில் கொண்டாடப்படும் அன்பே சிவம் ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம் போன்ற படங்களின் வரிசையில் உள்ள படம் 'உறியடி'. சினிமாவுக்கென எந்த கூடுதல் அழகும் சேர்க்கப்படாத அதன் கச்சாத்தன்மையும், புதிய கதைக்களம், அதிரடியான, நம்பகத்தன்மை வாய்ந்த திரைக்கதையும் 'உறியடி'யின் பலம். 'உறியடி'க்குக் கிடைக்காத நல்ல தயாரிப்பு நிறுவனம், விளம்பரம், பட்ஜெட் என அத்தனையுடனும் வெளிவந்திருக்கும் 'உறியடி 2'வில் உறியடியின் வீச்சும் தாக்கமும் இருக்கிறதா?

ADVERTISEMENT



சாதி மறுப்பு திருமணம் செய்த சமூக சீர்திருத்த மனம் கொண்ட தந்தையின் மகன் 'லெனின் விஜய்'யாக விஜயகுமார். என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடுகிறார். ஒரு கட்டத்தில் தனது நண்பர்களுடன் தனது ஊருக்கு அருகிலேயே செங்கதிர்மலையில் உள்ள தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறார். அங்கு நடக்கும் விஷவாயுக் கசிவு விபத்தில் தனது இரு நண்பர்களில் ஒருவர் உயிரிழக்க, விபத்திற்கான காரணத்தை ஆய்வு செய்கிறார் விஜய். தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியமே காரணமென்று தெரிகிறது. அதே நேரம் தொழிற்சாலை பிரச்சனையில் உள்ளூர் சாதிக் கட்சி நுழைந்து அனுகூலமடைகிறது. மாநிலத்தை ஆளும் கட்சியும் அந்தக் கூட்டணியில் கைகோர்க்கிறது. பெரும் முதலாளிகளின் லாபவெறிக்கு மக்களின் உயிரை பந்தி வைக்கும் அரசியல்வாதிகளை மக்களுடன் இணைந்து நாயகன் விஜய் குமார் எப்படி திருப்பியடிக்கிறார் என்பதே இந்த உறியடி 2.

ADVERTISEMENT



ஒரு தொழிற்சாலை இயங்கும் முறையை, அதில் தொடர்புடைய வாயுக்கள் உள்பட தெளிவாகக் குறிப்பிட்டு இதுவரை அதிக திரைப்படங்கள் சொன்னதில்லை. படத்தின் தொடக்கக் காட்சிகள் 'செங்கதிர்மலை' ஊர் மேல் நமக்கே ஒரு பரிவு ஏற்படுத்தும் வண்ணம் பாத்திரங்களை நமக்கு நன்கு அறிமுகம் செய்கின்றன. விஷவாயுக்கசிவு நிகழ்வதை படிப்படியாகப் பதற்றம் ஏற்றிக்காட்டும் இடைவேளைக்கு முந்தைய காட்சியும், விஷவாயுக் கசிவு ஏற்படுத்தும் துயரங்களைக் காட்டும் காட்சிகளும் முழு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சாதி அரசியலின் அசிங்கமான முகத்தை இந்த பாகத்திலும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் விஜய். "இந்த சாதியில் பிறந்தாலே நாங்க உங்களுக்கு சொந்தம்னு எதுவும் எழுதியிருக்கா?" போன்ற வசனங்கள் கூர்மையாகப் பேசுகின்றன. ஒரு பாதி போபால் விஷவாயு பேரழிவையும் ஒரு பாதி தூத்துக்குடியையும் நினைவுபடுத்துகின்றன. படம் முழுவதும் நிறைந்திருக்கும் சமூக அக்கறைக்கு விஜய்குமாரையும் இப்படி ஒரு படத்தை தயாரித்தளித்திருக்கும் நடிகர் சூர்யாவையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். அதே சமூக அக்கறையும் அரசியலும் படத்தில் பேச்சாக, வசனங்களாக நீண்டுகொண்டே போகின்றன. விஷவாயுக் கசிவின் தாக்கத்தைக் காட்டும் காட்சிகளும் இன்னும் கொஞ்சம் சுருக்கமாக இருந்திருக்கலாம்.



லெனின் விஜய்யாக விஜய் குமார், இன்னும் தெளிவாக இன்னும் பொலிவாக இன்னும் நன்றாக நடித்திருக்கிறார். 'டா' போடும் போலீசை உடனே 'டா' போடும் இடத்திலும் க்ளைமாக்சில் 'தத்தகிட தத்தகிட தித்தோம்' நிகழ்த்தும்போதும் முழு நாயகனாக ஈர்க்கிறார். வெகுளி+காமெடி நண்பராக 'பரிதாபங்கள்' சுதாகருக்கு தமிழ் சினிமாவில் இதுதான் ஒரு நல்ல தொடக்கம். நன்றாகவும் நடிக்கிறார். இவர்களைத் தவிர்த்து, நாயகி விஸ்மயா உள்பட பெரும்பாலானவர்கள் புதிய முகங்கள் அல்லது பிரபலமாகாத முகங்கள். இதுவே பாத்திரங்களை இயல்பாக்குகிறது. முக்கியமாக தொழிலதிபர் துரை, சாதிக்கட்சித் தலைவர் சங்கர் இருவரும் நல்ல நடிப்பால் வெறுப்பை சம்பாதிக்கிறார்கள். நாயகி விஸ்மயாவுக்கு காதலையும் தாண்டிய கதாபாத்திரம். அதைப் பயன்படுத்தி நல்ல நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்.

'96'இல் காதலால் கசிந்துருக வைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, 'உறியடி'யில் புரட்சியையும் ரௌத்திரத்தையும் கடத்த முயன்றிருக்கிறார். 'உறியடி' முதல் பாகத்தின் 'தத்தகிட தத்தகிட தித்தோம்' பின்னணி இசைதான் படத்தையும் நம் மனதையும் ஆக்கிரமிக்கிறது. 'வா வா பெண்ணே' பாடல் மென்மை. இதுதான் கோவிந்தின் ஸ்டைல், பலம் போல... பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு தொழிற்சாலையை அமானுஷ்யமாகவும், செங்கதிர்மலை கிராமத்தை யதார்த்தமாகவும் படமாக்கியுள்ளது. லினுவின் படத்தொகுப்பு, சிறப்பு.

தொழில்நுட்ப ரீதியில் உறியடியை விட உறியடி 2 மேம்பட்டு இருந்தாலும் குறி வைத்து தெறிக்க அடிப்பதில் முதல் பாகம் அளவுக்கு இல்லை. உறியடி... குடிமக்களின் உயிரை எளிதாகக் கருதும் அரசியல்வாதிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் விழும் அடி, இன்னும் கொஞ்சம் ஓங்கி, குறிவைத்து அடித்திருக்கலாம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT