விஜயகுமார் நாயகனாக நடித்து இயக்கி, தயாரித்திருந்த 'உறியடி' படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்தது. பல நல்ல படங்களைப் போலவே வெளிவந்தபொழுது கவனிக்கப்படாமல், வெளிவந்து சில ஆண்டுகள் கழித்து இணையத்தில் பார்க்கப்பட்டு கொண்டாடப்படுகிறது இந்தப் படம். வெளியான போது விமர்சகர்களாலும், பின்னர் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'உறியடி-2' படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விஜயகுமார் இயக்கத்தில் இந்த டீமில் '96' புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய இயக்குனர் விஜயகுமார், நடிகர் சூர்யாவுடனான தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். பேசும்பொழுது மேடையிலேயே கண் கலங்கினார்.
"சூர்யா சார் எதுக்காக இந்தப் படத்தை தயாரிக்கணும்? பொருளாதார விஷயங்களை எதிர்பார்த்தா? கிடையவே கிடையாது. இது எல்லோருக்கும் தெரியும். மக்கள் மீதும் சினிமா மீதும் பேரன்பு கொண்ட மனிதர் சூர்யா. இந்தப் படம் மக்களுக்கான ஒரு நல்ல படமா இருக்கும் என்று நம்பித்தான் இந்தப் படத்தை சூர்யா சார் தயாரித்தார். உங்கள் நம்பிக்கையை இந்தப் படம் கண்டிப்பா காப்பாத்தும் சார். அதுக்கான உழைப்பை எல்லோரும் கொட்டியிருக்கோம்" என்று நெகிழ்வோடு சொன்னார்.
தொடர்ந்து "2D நிறுவனத்தில் ஒரு விஷயம் தேவை என்று ஒருமுறை சொல்லி ஓகே வாங்கிவிட்டால், பிறகு அதைப் பற்றி எந்தக் கேள்வியும் எப்போதும் இருந்தது இல்லை. இந்த நிறுவனத்தில் எல்லா விஷயத்துக்கும் சரியான பிளானிங் இருக்கும். படத்தோட பூஜை தொடங்கி, ஆடியோ ரிலீஸ், டீசர், ட்ரைலர், படம் ரிலீஸ் என எல்லா விஷயங்களையும் சரியா திட்டமிட்டு எந்த இடத்திலும் பிரச்சனையில்லாமல் கொண்டுபோகும் நிறுவனம் இது. எனக்கு நல்லா தெரியும். தமிழ் சினிமாவில் 200 படங்கள் வருதுன்னா, 150 படங்களில் பிரச்சனை இருக்கும். அந்த வலி..." என்றவர் குனிந்து கண்கள் கலங்கினார். ஓரிரு நொடிகளில் தன்னை தேற்றிக்கொண்டு "சாரி, இப்படிலாம் நடக்கும்னு நினைக்கல. பிரச்சனையின் வலி எனக்கு நல்லா தெரியும். ஆனா இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லாம பார்த்துகிட்ட 2D நிறுவனம் இன்னும் நிறைய படங்கள் பண்ணனும்" என்றார்.