Skip to main content

காமெடி படம்தான்... அதுக்காக? ஜாக்பாட் விமர்சனம்

இரண்டாவது ரவுண்டில் தொட்டதெல்லாம் வெற்றியாக அமைந்துகொண்டிருக்கும் ஜோதிகா கேரியரில் அடுத்ததாக வந்துள்ள 'ஜாக்பாட்' படம் அவருக்கு இன்னொரு ஜாக்பாட்டாக அமையுமா? சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வாழக்கையை நடத்திக்கொண்டிருக்கும் ஜோதிகாவும், ரேவதியும் சிறைக்கு செல்ல நேர்கிறது. அங்கு அவர்களுக்கு அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரம் புதைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த ரகசியம் தெரிய வருகிறது. வெளியே வரும் இவர்கள் அட்சயபாத்திரம் புதைக்கப்பட்டிருக்கும் லோக்கல் தாதா ஆனந்த் ராஜ் வீட்டிற்கு சென்று அதை யாருக்கும் தெரியாமல் எடுக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களின் முயற்சி ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு முறையும் தோல்வி அடைய, கடைசியில் இவர்களுக்கு அந்த அட்சயபாத்திரம் கிடைத்ததா இல்லையா என்பதே 'ஜாக்பாட்' படத்தின் கதை.

 

jyothika'குலேபகாவலி' படத்தின் அதே புதையல் கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, கதாபாத்திரங்களை ஆங்காங்கே சற்று மாற்றி அட்சயபாத்திரத்தில் வைத்துக் கொடுத்துள்ளார் இயக்குனர் கல்யாண். ட்ரைலர், ப்ரோமோக்களில் இருந்த அளவு  காமெடி படத்திலும் இருந்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வைத்துள்ளது இந்த ஜாக்பாட். ஆக்சன், காமெடி என மக்கள் பொழுதுபோக்காக ரசிக்கும் விஷயங்களை எடுத்துக்கொண்ட இப்படம் நல்ல கதைக்களம் மற்றும் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தும் அதை சரிவர பயன்படுத்தத் தவறியுள்ளது. பொதுவாக காமெடி படம் என்றால் அதிக லாஜிக் பார்க்காமல் நல்ல சிரிக்கக்கூடிய நகைச்சுவை காட்சிகள் படம் முழுவதும் படர்ந்து காணப்பட்டாலே அது வெற்றிப்படமாக அமைந்துவிடும். அப்படி பார்க்கப்போனால் கூட இந்தப் படத்தில் எல்லாம் சரிவர அமைந்தும் திரைக்கதை மற்றும் வசனங்கள் சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளன. கிட்டத்தட்ட சமகாலத்தின் அனைத்து காமெடி நடிகர்களும் இருக்கிறார்கள். ஆனால், காட்சிகளோ பழைய படங்களின் ஹிட் காட்சிகளை தழுவியும் தோற்றங்களை கிண்டல் செய்தும் ஆணுக்குப் பெண் வேடம் போட்டும் நகர்கின்றன.

 

 

jyothika revathyபடத்தின் ஆறுதலான விஷயங்களாக ஜோதிகா மற்றும் ஆனந்த் ராஜ் இருக்கிறார்கள். குறிப்பாக ஜோதிகா படம் முழுவதும் பம்பரமாகச் சுழன்றுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அனல்பறக்கவிட்டுள்ளார். நடனம், பன்ச் வசனங்கள், உடல் மொழி, முகபாவனைகள் என அத்தனையிலும் ஒரு முழு மாஸ் ஹீரோவின் அர்ப்பணிப்போடு செயல்பட்டுள்ளார். சிலம்பம் சுற்றும் காட்சி மற்றும் மழை ஃபைட் காட்சியில் ஆக்ஷன் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கிறார். அதேபோல் இவருடன் நடிப்பிலும், உடல்மொழியிலும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் ரேவதி. சிரமமான காட்சிகளில் ஈசியாக நடித்து அவரது வயது குறித்து வியக்கவைத்துள்ளார்.


காமெடி தாதா, பெண் போலீஸ் என இரட்டை வேடத்தில் கலக்கியுள்ளார் நடிகர் ஆனந்த்ராஜ். குறிப்பாக புற்றுக் கோவிலைத் தேடிச் செல்லும் இடத்தில் தப்புத்தப்பாக எழுதப்பட்ட பெயர்ப் பலகைகளை படித்து, விளக்கம் தரும் காட்சிகளில் சிரிப்பலையை உன்டாக்கி அயர்ச்சியை தவிர்க்க உதவி செய்துள்ளார். அதேபோல் ஆனந்தராஜின் அடியாட்களாக வரும் பழைய ஜோக் தங்கதுரை, 'கோலமாவு கோகிலா' டோனி, 'கும்கி' அஸ்வின் ஆகியோரும், ஜோதிகாவின் கையாட்களாக வரும் மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு மற்றும் இன்னொரு தாதா மன்சூர் அலிகான் ஆகியோரும் ஆங்காங்கே அவர்களுக்கேற்ப காமெடி செய்து படத்தை கரைசேர்க்க உதவி செய்துள்ளனர். சமுத்திரக்கனி, சச்சு, திவ்யதர்ஷினி, நண்டு ஜெகன் ஆகியோர் சிறிது நேரம் வந்து செல்கின்றனர். யோகி பாபு, தனது தோற்றத்தை தானே தரம் தாழ்ந்து கமெண்ட் அடித்து காமெடி செய்யும் வண்ணம் அமையும் கதைகளை இன்னும் எத்தனை நாளைக்கு தொடரப் போகிறார்?

 

 

anandrajவிஷால் சந்திரசேகர், படம் முழுவதும் வாசித்துத் தள்ளியிருக்கிறார். பின்னணி இசைக்கும் கொஞ்சம் இடைவெளி தேவைதானே? ஆர்.எஸ் ஆனந்தகுமார் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல். திலிப் சுப்புராயன் & ராக்பிரபு சண்டைப்பயிற்சி காட்சிகளுக்கு மாஸ் கூட்டியுள்ளது. காமெடி படமென்றாலும் கொஞ்சமேனும் லாஜிக்குகள், அறிவார்ந்த சிந்தனையெல்லாம் இருக்கலாம், தவறில்லை என்பதை மட்டும் இயக்குனர் கல்யாண் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஜாக்பாட் - மதிப்பு குறைவு! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்