ADVERTISEMENT

முனி மாதிரியான வெற்றியா? மற்ற படம் போல சறுக்கலா? - 'ருத்ரன்' விமர்சனம்!

03:45 PM Apr 15, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு அதிரடி மசாலா படம் மூலம் ரசிகர்களை சந்திக்க வந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்தப் படம் இவரின் முந்தைய முனி படங்கள் கொடுத்த வெற்றியைக் கொடுத்ததா? இல்லை இவரின் மற்ற படங்கள் கொடுத்த சறுக்கல்களைக் கொடுத்ததா?

ஒரு அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தில் தந்தை தாயுடன் ஒரே மகனாக வசிக்கும் ராகவா லாரன்ஸ் சந்தோஷமாக தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். அந்த சமயம் இவருக்கும் எதேச்சையாக அவர் சந்திக்கும் பிரியா பவானி சங்கருக்கும் காதல் மலர்கிறது. அந்தக் காதல் திருமணம் வரை செல்கிறது. அந்த சமயம் ஒரு கடன் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் இவரது தந்தை நாசர் இறந்து விட, அந்தக் கடன்களை அடைக்க வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்கிறார் ராகவா லாரன்ஸ். இதற்கிடையே இதுபோல் குடும்பத்தை இந்த ஊரிலேயே விட்டுவிட்டு வெளிநாடு செல்லும் நபர்களின் சொத்துக்களை வில்லன் சரத்குமாரின் கும்பல் அபகரித்துவிட்டு வயதானவர்களை போட்டுத் தள்ளி விடுகிறது. அந்த வகையில் வில்லன் சரத்குமார் அண்ட் டீம் ராகவா லாரன்ஸ் குடும்பத்தையும் கொன்றுவிடுகிறது. இதைத் தெரிந்து கொண்ட ராகவா லாரன்ஸ் எப்படி அவர்களை பழி தீர்த்திருக்கிறார் என்பதே இப்படத்தின் மீதி கதை.

மிகவும் அரதப்பழசான ஒரு கதையை அதிலும் அரதப்பழசான ஒரு திரைக்கதை மூலம் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் 5 ஸ்டார் கதிரேசன். படம் ஆரம்பித்தவுடன் ஒரு ஃபைட், ஒரு இண்ட்ரோ சாங், பிறகு ஃபேமிலி சென்டிமென்ட், லவ் மீண்டும் ஆக்சன், சென்டிமென்ட், ஆக்சன் என பழைய ஆதி காலத்து ஃபார்முலாவில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர். அதை சுவாரஸ்யமாக கொடுத்திருந்தால் இந்த படம் ரசிக்கப்பட்டு இருக்கும். ராகவா லாரன்ஸ் வழக்கமாக எந்த ஃபார்முலாவில் படம் நடிப்பாரோ அதே ஃபார்முலாவில் இந்த படமும் அமைந்து இருக்கிறது. அது அவரது ரசிகர்களை வேண்டுமானால் திருப்திப்படுத்தி இருக்கலாம் மற்றவர்களை திருப்திப்படுத்தியதா என்றால் கேள்விக்குறியே? அதேபோல், வழக்கமாக இரண்டாம் பாதி கிளைமாக்ஸ் நெருக்கத்தில் ஒரு சென்டிமென்ட் விஷயத்தை வைத்து ரசிகர்கள் மனதை பாரமாக்கும் வித்தையை இந்தப் படத்திலும் வைத்து அதன்மூலம் வெகுஜன மக்களை கவர முயற்சி செய்திருக்கிறது ருத்ரன் படக் குழு. அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பது போகப் போகத் தெரியும்.

வழக்கம்போல் மாஸ் மசாலா டான்ஸ் சென்டிமென்ட் பாடல்கள், ஃபைட் என தனக்கு என்ன வருமோ அதையே திரும்பத் திரும்ப இந்த படத்திலும் செய்திருக்கிறார் நாயகன் ராகவா லாரன்ஸ். இவரின் பஞ்ச் பேசி நடிக்கும் நடிப்பு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. மற்றபடி நியூட்ரல் ரசிகர்களுக்கு இது பிடித்திருக்கிறதா என்றால் சந்தேகமே!! நாயகி ப்ரியா பவானி சங்கர் வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி விட்டு வழக்கம் போல் சென்று இருக்கிறார். பெரிதாக ஒன்றும் அவர் செய்வதற்கு வாய்ப்பும் இல்லை. அவர் செய்யவும் இல்லை. நாயகனின் நண்பனாக வரும் காளி வெங்கட் வழக்கமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லனாக வரும் சரத்குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரியான வில்லத்தனம் காட்டி பயமுறுத்தி இருக்கிறார். சமகால வில்லன் கதாபாத்திரத்தை விட இவர் பிளாஷ்பேக்கில் வரும் கதாபாத்திரத்தை இன்னமும் சிறப்பாக செய்திருக்கிறார். இவருக்கு நண்பராக வரும் நடிகரும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். போலீசாக வரும் இளவரசு அவருக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். ராகவா லாரன்ஸின் அம்மா பூர்ணிமா அப்பா நாசர் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இன்ன பிற இதர நடிகர்களும் அவரவருக்கான வேலையை செய்திருக்கின்றனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடாத பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பாடல் மட்டும் வருடுகிறது. சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை வழக்கம் போல் இரைச்சலை ஏற்படுத்தி பார்ப்பவர்கள் காதிலிருந்து ரத்தம் வர வைத்துள்ளது. தேவையற்ற பல இடங்களில் வாசித்து தள்ளி இருக்கிறார். அதுவுமே படத்திற்கு பல இடங்களில் மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இவர் வரும் காலங்களில் இதே ஸ்டைலை ஃபாலோ பண்ணும் பட்சத்தில் சினிமாவில் இவர் நீடிப்பது கடினம். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் படத்தின் மேக்கிங் சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

நாம் எளிதில் யூகிக்கக்கூடிய லாஜிக் மீறல்கள் நிறைந்த அரதப் பழசான திரைக்கதையை தன் ஈர்ப்பான நடன அசைவுகள் மற்றும் பன்ச் வசனம் நிறைந்த ஆக்சன் மற்றும் மனதைத் தூண்டும் சென்டிமென்ட் காட்சிகளோடு ரசிக்க வைக்க போராடி உள்ளார் ராகவா லாரன்ஸ். இந்தப் போராட்டம் அவருக்கு கை கொடுத்ததா இல்லையா? என்றால் சந்தேகமே!


ருத்ரன் - கொஞ்சம் கஷ்டம் தான்!


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT