blood money movie review

Advertisment

அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்ற ஒருவர், அங்கு எதிர்கொள்ளும் துன்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படமாக ஓடிடியில் வெளிவந்துள்ளது ‘பிளட் மணி’. இதற்கு முன்னரும் இதேபோன்ற சில படங்கள் தமிழில் வெளியாகியிருந்தாலும் அப்படங்களிலிருந்து இந்தப் படம் எந்த வகையில் வேறுபட்டுள்ளது..?

குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற கிஷோர் மற்றும் அவரது தம்பி ஆகியோருக்கு அந்த ஊர் நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. இதற்கிடையே, ஊடகத்துறையில் செய்தியாளராக வேலை செய்யும் பிரியா பவானி சங்கருக்கு புரொமோஷன் கிடைக்க அவர் கிஷோர் கேசை கையிலெடுக்கிறார். இன்னும் முப்பது மணி நேரத்தில் தூக்கு என்று அறிவிக்கப்படும் சூழலில், அந்த தூக்கு தண்டனையிலிருந்து அவர்களை பிரியா பவானி சங்கர் காப்பாற்றினாரா, இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

அரபு நாடுகளில் யாரேனும் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனைக்கு ஆளாகும்போது, அவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக பணம் (பிளட் மணி) கொடுத்தால் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். அப்படி கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட கிஷோர் மற்றும் அவரது தம்பி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்த பிறகும் அவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. அது ஏன், எதற்காக என்பதை ஒரு ஸ்மூத்தான ஃபீல் குட்திரில்லர் படமாகக் கொடுத்துள்ளார் இயக்குநர் சர்ஜுன். காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு ஏற்படும்படியான திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர், அதை ரசிக்கும்படியும் கொடுத்துள்ளார். இருந்தும் படத்தில் வரும் சில சென்டிமெண்ட் காட்சிகள் மற்றும் பாடல்கள் வேகத் தடையாக அமைந்து, ஆங்காங்கே அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கதைக்களம் தமிழ் சினிமாவில் அதிகமாகப் பேசப்படாதது என்பதால், இந்தசின்னச் சின்ன குறைகள் மறைந்து முழு படமாக ரசிக்கும்படி அமைந்துள்ளது.

Advertisment

blood money movie review

படத்தில் கதையின் நாயகியாக பிரியா பவானி சங்கர் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அலட்டல் இல்லாத இவரது நடை, உடை, பாவனைகள் அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது. அப்பாவி கிராமத்து தந்தையாக வரும் கிஷோர், நடிப்பில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளார். இவருக்கும் அவரது மகளுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. சப்போர்டிங் நாயகனாக வரும் மெட்ரோ சிரிஷ், பிரியா பவானி சங்கருக்கு சப்போர்ட்டிவ்வான ரோலில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுப்பு பஞ்சு, கிஷோரின் குடும்பத்தாராக வருவோர் என அனைவரும் நடிப்பில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.படத்தின் நீளமும் படத்திற்குப் பிளஸ்சாக அமைந்துள்ளது.

சதீஷ் ரகுநந்தனின் பின்னணி இசை படத்துக்குப் பலமாக அமைந்துள்ளது. பாலமுருகனின் ஒளிப்பதிவில் குவைத் மற்றும் கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகள் கச்சிதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மொத்தத்தில் பல்வேறு பாசிட்டிவ் விஷயங்களோடு ரசிக்கும்படியான நல்ல திரில்லராக அமைந்துள்ளது ‘பிளட் மணி’ திரைப்படம்.

‘பிளட் மணி’ - ஃபீல் குட் செண்டிமெண்ட் திரில்லர்