Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

இது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம் 

காஞ்சனா... தனக்கென ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமா ரசிகர்களிடையே உருவாக்கி வைத்திருக்கும் ஒரு ப்ராண்ட்... களம்... அடையாளம்... இப்படி எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். வேறு படங்கள் என்ன ரிசல்ட் கொடுத்தாலும் மீண்டும் ஒரு முனி/காஞ்சனாவில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்வார் ராகவா லாரன்ஸ். பொதுவாக இரண்டாம் பாகங்கள் அதிகம் வெல்லாத தமிழ் திரையுலகில் நான்காம் பாகம் வரை வெற்றிகரகமாக வந்துவிட்டார். முனி, காஞ்சனா, காஞ்சனா -2 என அவர் பெற்ற வெற்றி காஞ்சனா 3இல் தொடர்கிறதா?

 

ragava lawrenceமக்களை சீட் நுனிக்குக் கொண்டு வந்து தொடர்ந்து பயத்திலேயே வைக்கும் திகில் படங்களாக வந்து மிகப்பெரிய வெற்றியை பெறாமல் இருந்த காலகட்டத்தில் பேய் + சாமி + காமெடி ஃபார்முலாவில் கதையை உருவாக்கி 'மாஸ் வெற்றி' எனப்படும் மிகப்பெரிய வெற்றியை சாதித்தார் லாரன்ஸ். அந்த வெற்றி தந்த நம்பிக்கையில் அடுத்தடுத்து அதே ஃபார்முலாவில், அதே கதையமைப்பில் வருகின்றன முனி, காஞ்சனா தொடர் திரைப்படங்கள். இவர் தொடங்கி வைத்த பின், தமிழில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் பேய் + காமெடி கூட்டணியில் வெளிவந்துவிட்டன. அந்த அலை ஓய்ந்தும் விட்டது. இந்த நிலையில்  வந்திருக்கிறது காஞ்சனா.

பேய் என்றாலே பயப்படும் ராகவா, ஒரு பங்களா, அங்கு செல்லும் ராகவாவின் குடும்பம், நிகழும் திகில் நிகழ்வுகள், சரி செய்ய வரும் சாமியார்கள், பேய் சொல்லும் ஃபிளாஷ்பேக்... இதே கதைதான் இந்தக் காஞ்சனாவிலும். பேய், திகில் என்பதைத்தாண்டி சாமிப்படமாகவும் ராகவா லாரன்ஸுக்கு மாஸ் சேர்க்க முயற்சி செய்யும் படமாகவும் இருக்கிறது இந்தக் காஞ்சனா. எப்பொழுதும் கவர்ச்சிக்கு ஒரு ஹீரோயின் வைத்துக்கொள்ளும் ராகவா, இந்த முறை மூன்று நாயகிகளை சேர்த்துக்கொண்டுள்ளார். எப்பொழுதும் சென்டிமெண்டான அந்த  ஃபிளாஷ்பேக்குக்கு வேறு நடிகர்களை பயன்படுத்தும் ராகவா இந்த முறை அந்த இடத்தையும் விட்டுவைக்காமல் அவரே எடுத்துக்கொண்டுள்ளார். இதுதான் காஞ்சனா 3இல் காட்டப்பட்டிருக்கும் வித்தியாசம்.

பார்ட் 2, பார்ட் 3 என தொடர்ந்தாலும் அலுக்காமல் பயம் கொடுக்கும் திகில் காட்சிகள் ராகவாவின் ஸ்பெஷல். அது இந்தப் படத்திலும் சிறப்பாக அமைந்திருக்கிறது. பேய் ஓட்ட வரும் சாமியார் பாத்திரங்களில் அனைத்து மதங்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுப்பது ராகவாவின் வழக்கம். இந்தப் படத்தில் புதிதாக கிருத்துவ மதம் சார்ந்த பேய் ஓட்டுபவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி காம்போவின் காமெடி படத்திற்கு பெரும் பலம், நமக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட்.

 

kanchana heroinesஎன்னதான் ஜாலியான குடும்பமென்றாலும் தந்தைகளின் கண் முன்னே லாரன்ஸின் மேல் குதித்து ஏறுகிறார்கள் மகள்களாக வரும் ஓவியா, வேதிகா, நிக்கி ஆகியோர். தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என அனைவரும் இருக்க அவர்களை ஃபிகர்கள் என்று அழைக்கிறார், 'மூன்று பேரையும் மெயின்டைன் பண்ணுவேன்' என்கிறார் ராகவா. இது என்ன வகையான காமெடி என்றும் இது என்ன வகையான குடும்பம் என்றும் நமக்குள் கேள்வியெழுகிறது. படத்தின் குறிப்பிடத்தக்க பகுதி ராகவா லாரன்ஸ் நிஜவாழ்வில் செய்யும் சேவைகளை சொல்வதாகவே இருக்கிறது. நல்ல விஷயம்தான் என்றாலும், படத்தை பாதிக்கும் அளவுக்கு இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் மனிதர்கள் பேயை விட அதிகமாகப் பறக்கிறார்கள்.

லாரன்ஸ்... பயந்தவராக நன்றாக நடிக்கிறார், நடனம் அசத்தலாக இருக்கிறது. ஆனால், தேவையில்லாத இடத்தில் பேசும் பன்ச்களும் எல்லா இடத்திலுமே அதீத சத்தத்தில் கத்துவதும் கொஞ்சம் அலுப்பை உண்டாக்குகின்றன. ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி என மூன்று நாயகிகளுக்கும் ஒரே வேலை. அதை ஒரே மாதிரி செய்திருக்கிறார்கள். தனித்துவம் என்று பெரிதாக எதுவுமில்லை. கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி மற்றும் அந்த சின்னப் பெண் ஆகியோரின் நகைச்சுவை பெரும்பாலும் சிரிக்கவைக்கிறது. எத்தனை முறை அதே பாணியை பார்த்தாலும் முற்றிலுமாக சலிக்காத அளவுக்கு நடித்திருக்கிறார்கள். சூரி இருக்கிறார், இருப்பது தெரியாமல் இருக்கிறார்.

வெற்றி, சுஷில் சௌத்ரி ஆகியோரின் ஒளிப்பதிவு திகிலைக் கூட்டியிருக்கிறது. தமனின் இசை திகில் காட்சிகளில் செம்ம... மற்ற காட்சிகளில் கொஞ்சம் ஓவர் டோஸ். ஆங்காங்கே இடைவெளி விட்டு இசைத்திருக்கலாம். மதன் கார்க்கி நடத்தும் 'டூபாடூ' நிறுவனத்தில் பல்வேறு புதியவர்கள் இசைத்துப் பாடிய பாடல்களைப் பெற்று பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் புதிய முயற்சியில், மதன் கார்க்கி எழுதிய 'கெட்ட பய சார் இந்த காளி' பாடல் மட்டுமே நினைவில் நிற்கிறது.

'பிரண்ட்ஸை பார்த்துட்டு வறேன்'னு சொல்லிவிட்டு ராகவா லாரன்ஸ் திடீரென்று செல்கிறார், அங்கு ஒரு பாடல் வருகிறது, பேய் உள்ளே வந்ததும் தோற்றத்தோடு சேர்த்து உடைகள் எல்லாமே மாறுகின்றன... இப்படி பல குறைகள் இருந்தாலும் சிரிக்க வைத்து சிரிக்க வைத்து பயமுறுத்துவதில் மீண்டும் பார்டரில் பாஸ் பண்ணியிருக்கிறது காஞ்சனா 3.                     

                   

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்