ADVERTISEMENT

மலையாளத்தில் 'ஜோசப்' செய்த மேஜிக்கை தமிழில் செய்ததா 'விசித்திரன்' - விமர்சனம்

04:20 PM May 07, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக தமிழில் வெளியாகியுள்ளது விசித்திரன். ஆர்.கே சுரேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த விசித்திரன் மலையாளத்தில் ஜோசப் நிகழ்த்திய மேஜிக்கை நிகழ்த்தியுள்ளதா..?

பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே ஒரு சம்பவத்தால் போலீஸில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு எந்நேரமும் குடியும் பீடியுமாக இருக்கிறார் நாயகன் ஆர்.கே சுரேஷ். எப்படிப்பட்ட வழக்கையும் சிபிஐ போலீஸாரை விட வேகமாகவும், விவேகமாகவும், மிக புத்திசாலித்தனமாகவும் கண்டுபிடிக்கும் திறமை கொண்ட ஆர்.கே சுரேஷ், தன் மனைவி பூர்ணா விபத்தில் இறந்ததை கொலை என கண்டுபிடிக்கிறார். இதையடுத்து அந்த கொலையை துப்பறியும் அவர், இந்தக் கொலைக்குப் பின் ஒரு மிகப்பெரிய மெடிக்கல் மாஃபியா இருப்பதை கண்டுபிடிக்கிறார். இந்த அதிர்ச்சிகரமான உண்மையை அவர் எப்படி வெளி உலகுக்கு கொண்டு வருகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

மலையாளத்தில் ஜோசப் படத்தை இயக்கிய அதே இயக்குநரான பத்மகுமார் இயக்கத்தில் வெளியாகி உள்ளது விசித்திரன் படம். இப்படத்தை அதை இயக்குநர் இயக்கியதுதானோ என்னவோ மலையாள படம் மாதிரியே தமிழ் படமும் மிகவும் மெதுவாக நகர்ந்துள்ளது. எந்த ஒரு இடத்திலும் திரைக்கதை வேகம் எடுக்காமல் போனாலும், மாறாக எங்கேயேயும் தடம் மாறாமல் ஒரே நேர்கோட்டில் சிறப்பாக பயணித்து உறைய வைக்கும் க்ளைமாக்ஸ் காட்சியோடு படம் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இருந்தும் தமிழ் ரசிகர்களை கொஞ்சம் மனதில் வைத்து ஆங்காங்கே சில எலமெண்ட்களை சேர்த்து இன்னும் கூட திரைக்கதையின் வேகத்தை கூட்டி இருக்கலாம். இருந்தும் கதையில் இருக்கும் அழுத்தமும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாக அமைந்து படத்தை கரை சேர்த்துள்ளது. ஒரு திரில்லர் படத்திற்கு என்ன தேவையோ அவை எல்லாவற்றையும் சிறப்பாக கையாண்டு, எதிர்பாராத முடிவோடு நிறைவான படமாக விசித்திரனை கொடுத்துள்ளார் இயக்குநர்.

தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அந்த அளவு நியாயம் செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நாயகன் ஆர்.கே சுரேஷ். ஆர்ப்பாட்டமில்லாத இவரது வசன உச்சரிப்பும், அமைதியான நேர்த்தியான நடிப்பும் படத்துக்கு வலு சேர்த்துள்ளது. படத்தின் நாயகிகளாக நடித்திருக்கும் பூர்ணாவும், மதுஷாலினியும் அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர். குறிப்பாக வயதான கதாபாத்திரத்தில் பூர்ணா அழகாக தெரிகிறார். அளவாக நடித்து சிறப்பு செய்துள்ளார். மது ஷாலினியின் சிறிது நேரமே வந்தாலும் கவனம் ஈர்த்துள்ளார்.

ஆர்.கே. சுரேஷின் போலீஸ் நண்பர்களாக வரும் இளவரசு, மாரிமுத்து ஆகியோர் நல்ல நண்பர்களாக நடித்து படத்திற்கு தூணாக அமைந்துள்ளனர். அதேபோல் படத்தின் திரைக்கதைக்கு பக்கபலமாக இருந்து காட்சிகளை சுவாரசியமாக நகர்த்த உதவி புரிந்துள்ளனர்.

படத்தின் இன்னொரு நாயகனாக ஜிவி பிரகாஷின் இசை அமைந்துள்ளது. பாடல்களைக் காட்டிலும் இவரது பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. செண்டிமெண்ட் காட்சிகளிலும் சரி, துப்பறியும் காட்சிகளிலும் சரி இவரது பின்னணி இசை சரியான கலவையில் அமைந்து ரசிக்க வைத்துள்ளன. ஒளிப்பதிவாளர் வெற்றி மகேந்திரனின் ஒளிப்பதிவில் மலையும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இண்டோர் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.

படம் ஆரம்பித்து சற்று மெதுவாக நகர்ந்து பின் வேகமெடுத்து இறுதியில் எதிர்பாராத கிளைமாக்ஸோடு முடிந்து ஒரு நிறைவான திரில்லர் படத்தை பார்த்த அனுபவத்தை தந்துள்ளது.

விசித்திரன் - விவரமானவன்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT