Skip to main content

90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா? தும்பா - விமர்சனம்    

Thumbaa

 

தேவர் பிலிம்ஸ் மற்றும் ராம நாராயணன் ஆகியோர் மிருகங்களை மையப்படுத்தி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். அவற்றில் பெரும்பாலான படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய படங்களாக அமைந்தன. ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் இந்த வகை படங்கள் வருவது என்பது அரிதாக இருக்கிறது. விலங்குகளை படப்பிடிப்பில் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இதற்கு முக்கிய காரணம். தற்போது அந்த வரிசையில், இதே டெம்ப்லேட்டில் வெளிவந்துள்ள 'தும்பா' டெம்ப்லேட்டை உடைத்து பழைய படங்களின் பரவசத்தை கொடுக்கிறதா?

 

 

கிடைத்த வேலையை செய்யும் தர்ஷனும், சுவற்றில் படம் வரையும் ஆர்ட்டிஸ்ட் தீனாவும் டாப்ஸ்லிப் மலைப்பகுதியின் வனப்பகுதியில் உள்ள புலி சிலைக்கு பெயிண்ட் அடிக்க செல்கின்றனர். வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபராக ஆசைப்படும் நாயகி கீர்த்தி பாண்டியன் புலியை  ஃபோட்டோ எடுக்க அதே பகுதிக்குச் செல்கிறார். அப்போது கேரள எல்லையின் வனப்பகுதியில் இருந்த தும்பா என்ற புலி தப்பித்து டாப்ஸ்லிப் பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. இந்த புலியை பிடித்து சட்டவிரோதமாக விற்று பணம் சமபாதிக்க ஆசைப்படுகிறார் டாப்ஸ்லிப்பின் வனத்துறை அதிகாரி. அந்த நேரம் பார்த்து அனுமதி இல்லாத காட்டுப்பகுதிக்கு சென்று புலியை படம் பிடிக்க நினைக்கும் கீர்த்தனா பாண்டியன், தீனா, தர்ஷன் உதவியை நாடுகிறார். இவர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு கீர்த்தனா பாண்டியனுக்கு உதவி செய்து மூவரும் வனப்பகுதிக்குள் செல்கின்றனர். அப்போது புலியோடு சேர்ந்து இவர்களுக்கும் வனத்துறை அதிகாரியால் ஆபத்து ஏற்படுகிறது. இதையடுத்து இவர்கள் ஆபத்தில் இருந்து தப்பித்து புலியை படம் பிடித்தார்களா, வனத்துறை அதிகாரியிடம் இருந்து தும்பா புலி தப்பித்ததா என்பதே தும்பா படத்தின் கதை.

 

Thumbaa

 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கவைக்கும் முயற்சியில் இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ஹரிஷ் ராம். ஆனால் அது குழந்தைகள் வரை மட்டும்தான் சென்று சேர்ந்துள்ளது. அதுகூட ஜங்கிள் புக் போன்று பல்வேறு தரமான ஹாலிவுட் படங்களை பார்த்துப் பழகிய 2K கிட்ஸ்-க்கு இது பெரிய பரவசத்தைத் தரவில்லை. படத்தில் இருக்கும் இரண்டு நல்ல விஷயங்கள்... ஒளிப்பதிவு, மற்றொன்று ஓர் அளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருக்கும் கிராஃபிக்ஸ் புலி. புலியின் ஒவ்வொரு அசைவும், மேனரிஸமும் ரசிக்கும்படியாகவே இருந்தது. நரேன் எளனின் ஒளிப்பதிவில் வனப்பகுதி அவ்வளவு அழகு. டாப்ஸ்லிப் என்ற மலைசார்ந்த வனப்பகுதியில் வசிப்பது போன்ற உணர்வை ஒளிப்பதிவு மூலம் நம்முள் அருமையாகக் கடத்தியுள்ளார் நரேன். விஷுவல்சிலும் கிராஃபிக்சிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, கதைக்கும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னும் கூட கவனிக்கத்தக்க படமாக இது மாறியிருக்கும். 

 

Thumbaa

 

பல இடங்களில் சோதிக்கும், சில இடங்களில் ரசிக்கும் விதமான காமெடி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் டிவி தீனா. இவருக்கு உதவியாளராக வரும் தர்ஷன் 'கனா'வில் வாங்கிய பெயரை கொஞ்சம் நினைத்துப் பார்த்து நடித்திருக்கலாம். எனினும் திரைக்கதையில் ஆழம் இல்லாததால் இவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாயகி கீர்த்தி பாண்டியன் துடுக்கான பெண்ணாக வந்து செல்கிறார். ஒரே காட்சியில் கெஸ்ட் ரோலில் தோன்றி நடனமாடிவிட்டு மறைகிறார் ஜெயம் ரவி. 

 

அனிருத் இசையில் 'புதுசாட்டம்' பாடல் கேட்கும் ரகம். சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை ஓகே. காடு, மலை என பசுமையான கதைக்களத்தை நல்ல திரைக்கதையின் மூலம் இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருந்தால் நிச்சயம் தும்பாவிற்கு தவிர்க்க முடியாத இடத்தை வழங்கியிருக்கலாம்.

 

தும்பா - இன்னும் தெம்பாக இருக்கவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்