Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

தமிழகத்துக்கு விஜய் சேதுபதி தந்திருப்பது என்ன? மேற்குத் தொடர்ச்சி மலை - விமர்சனம் 

அதிகாலை நாலு மணிக்கு 'நேரமாயிடுச்சுடா எந்திரிடா' என்று மகனை எழுப்பும் தாய், எழுந்தவுடன் பெய்யும் மழை நீரில் முகத்தைக் கழுவிவிட்டு ஒரு சாக்குப்பையை தலையில் போட்டுக் கொண்டு தன் நாளைத் தொடங்கும் மகன், அவனது நாளுடன் தொடங்கும் படம், அதைப் போலவே நம்மையும் மெதுவாகவேதான் அழைத்துச் செல்கிறது. கதையைத் தொடங்கும் அவசரமில்லாத இந்தப் பொறுமையே ஒரு சாதாரண சினிமா ரசிகனுக்கு அதிர்ச்சிதான். ஆனால், அவசரமாக சொல்ல இது கதையில்லை, வாழ்க்கை என்பதை மெல்ல உணரும்போது நாமும் கோம்பையில், பண்ணைபுரத்தில், தேவாரத்தில் உலாவத்தொடங்குகிறோம்.

 

merku thodarchi malai1சினிமா என்னும் ஊடகத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். இயக்குனர் லெனின் பாரதியின் நிலைப்பாடு, 'சொல்லப்படாத கவனிக்கப்படாத வாழ்வை, அந்த வாழ்வில் விளையாடும் அரசியலை, அதிகம் பேசாமல், அப்படியே காட்டுவது' என்பது தெரிகிறது. இந்த நிலைப்பாட்டினால் படம் பார்ப்பவர்களை அதிகமாக சோதிக்கவுமில்லை என்பது அவரது பலம். கண்டிப்பாக தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கியமான வரவு லெனின் பாரதி. வெல்கம் வித் பொக்கே... 

 

 


செமகார (சுமை தூக்குபவன்) இளைஞன் ரங்கசாமிக்கு தனக்கென ஒரு நிலம் வாங்கவேண்டுமென்பதே கனவு. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தடையால் கலையும் அந்தக் கனவு இறுதியில் என்ன ஆனது என்பது மட்டும் கதையல்ல, இதை அடிப்படியாகக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் பிணைந்திருக்கும் பல வாழ்க்கைகளை சொல்லியிருக்கிறார் லெனின் பாரதி.

  merku thodarchi malai 2அந்த மலையில் நடைபாதையிலும், சுமை தூக்கும் மனிதர்கள், கழுதைகள் வழியாக தமிழ் - மலையாள மக்களிடையேயான உறவு, அந்தத் தொழிலாளர்களின் வாழ்வை ட்ரேட் யூனியன் காக்கும் விதம், முதலாளித்துவம் எடுக்கும் தந்திர ஆயுதம், உற்பத்தி செய்தவர்கள் உளைந்து போக பிழைக்க வந்த இடைத்தரகர்கள் வளர்ந்து நிலத்தை வளைப்பது... இப்படி சத்தம் போடாமல் படம் பேசும் அரசியல் நிறைய. 'நாளைக்குதானப்பா பத்திரம், நீயும் உள்ளூர்க்காரன், நானும் உள்ளூர்க்காரன்' என அட்வான்ஸ் வாங்க மறுக்கும் நிலவுரிமையாளர், 'உங்க அப்பன்தான் என்னை கடன்காரனா வச்சிருந்தான், நீயும் அப்படி பண்ணாத' என உரிமையுடன் உதவும் பாய், 'இவனை யூனியன் மெம்பராக்கிவிட்டா பொண்டாட்டியோட நல்லா பொழச்சுக்குவான்' என பரிந்துரைக்கும் கங்காணி... இப்படி மலை நெடுகிலும் ஈரமான  மனிதர்கள்.

 

 


'சாத்தா' கோவில், கிறுக்கு கெழவி, மரணம் வரை வைராக்கியமாக மூட்டை சுமக்கும் முதியவர், அதையே தன் சாதனையாக நம்பி பெருமையாக பேசுவது, கல்யாணப் பத்திரிக்கை கொடுக்க மலைக்கு வந்து ஏற முடியாமல் முழிக்கும் நம்மைப் போன்ற தரைவாழ்வின் பிரதிநிதி, ஊரில் அனைவரும் வம்பிழுக்கும் கங்காணி என மலையின் சுவாரசியங்களுக்கும் குறைவில்லை. இறுதிக் காட்சி பெரும் கோரமெல்லாம் இல்லை, ஆனால் மனதில் பெரும் கணம். நகரம், வளர்ச்சி, முதலீடு போன்ற சுயநலங்கள், சூட்சமங்கள்  தெரியாத எத்தனை உயிர்கள் இப்படி வாழ்கின்றன என்ற உண்மை ஒருவித குற்றவுணர்வை ஏற்படுத்துகின்றது.

  merku thodarchi malai 3'ஊருக்குள்ள ரோடு வந்தா மெஷின் வரும், மெஷின் வந்தா நம்ம மக்கள் வேலை போகும்' என தொழிலாளர்களுக்காகவே வாழும் சகாவு சாக்கோ, நிகழ்கால  வளர்ச்சியின் பலத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் அதே நேரம் மக்கள் அதற்கு இரையாக விடக்கூடாது என்ற தவிப்போடு வாழும் பொதுவுடைமை அரசியலின் குறியீடாக இருக்கிறார். நிலமில்லாதவர்களின் துயரை சொல்லியிருப்பதோடு, நிலமிருப்பவர்களும் கூட இயற்கையாலும் பிறராலும் விவசாயத்தில் அடையும் இழப்புகளையும் பேசியிருப்பது நலம். மொத்தத்தில் ஒரு நில அமைப்பின் வாழ்வியலை அப்படியே நம்மை வாழ வைத்திருக்கிறார் இயக்குனர்.

 

 


பொதுவாக ஒளிப்பதிவு வேறு ஒரு இடத்தின் அழகை நமக்கு எடுத்துக் காட்டும், ரசிக்க வைக்கும். சில நேரங்களில் மட்டும்தான் நம்மையே அந்த இடத்துக்குள் அழைத்துச் செல்வது போன்ற ஒளிப்பதிவு அமையும். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு நம்மை மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் அழைத்துச் சென்றிருக்கிறது. படத்தின் மிக மிக முக்கிய பங்கு, அந்த மலையை, அந்த வாழ்வை கடத்தியதில் அவருக்கு இருக்கிறது. பிரம்மாண்டத்துக்காக 'ஏரியல் வியூ' கொண்டு செல்லாமல், ஒவ்வொரு முறை 'ஏரியல் வியூ' செல்லும்போதும் ஒரு தாக்கத்தை நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறது ஈஸ்வரின் ஒளிப்பதிவு. இளையராஜாவின் இசை படத்தை வெளியே  தூக்கிநிறுத்தாமல், உள்ளிருந்து ஒரு கணத்தைத் தருகிறது.

  merku thodarchi malai 4இப்படி ஒரு படத்தை இன்னும் முழுமையாக வெகுமக்கள் அனுபவிக்கத் தடையாக இருக்கும் சில விசயங்கள்... இயக்குனர் முன்பே சொன்னது போல அங்கிருக்கும் மக்களையே பல பாத்திரங்களில் நடிக்கவைத்திருக்கிறார்கள். சில காட்சிகளில், ஒருவர் வசனம் பேசும்பொழுது மற்றொருவர் 'என்ன பாவனை காட்டுவது' என்ற குழப்பத்தில் இருப்பதும், பேசுபவர்களுமே கூட நடிக்க வராமல் சற்று செயற்கையாகத் தோன்றுவதும் குறை. உண்மை வாழ்வில் நகைச்சுவை இன்னும் பலமாகவே இருக்கும், இன்னும் அதிகமாக சிரிக்கவைக்கக்கூடியதாகவே இருக்கும். அதையும் கூட தவிர்த்து மெல்லிய வெறுமை இழையோட விட்டிருப்பது இயக்குனரின் முடிவாகக்கூட இருக்கலாம், ஆனாலும் அது ஒரு குறை. ஆண்டனி, காயத்ரி, ஆறு பாலா, அபு என நடிகர்களின் நடிப்பில் குறையில்லை.

இவற்றையெல்லாம் தவிர்த்து, இந்தப் படம் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி தமிழகத்துக்குத் தந்திருக்கும் சிறந்த பரிசு. அவர் மீதான அன்பு இன்னும் சற்று அதிகமாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலை... ஒரு வாழ்வின் முக்கியமான உண்மை ஆவணம். படிக்க கொஞ்சம் பொறுமை வேண்டும்.      

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்