ADVERTISEMENT

‘சார்மிங்கிலிருந்து சால்ட் அண்ட் பெப்பர்’ - ஜெயம் ரவிக்கு வெளிச்சம் தந்ததா? - ‘சைரன்’ விமர்சனம்

04:28 PM Feb 16, 2024 | kavidhasan@nak…

எப்பொழுதும் சார்மிங்கான ஹீரோவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி, இந்த முறை சால்ட் அன் பெப்பர் லுக்கில் வயதான கதாபாத்திரத்தில் களம் இறங்கியிருக்கும் படம் சைரன். கெட்டப் மாற்றி தன் தோற்றத்தை புதியதாகக் காட்டி இருக்கும் ஜெயம் ரவி, இந்த படத்தையும் அதேபோல் புதியதாகக் காட்டியிருக்கிறார்களா? இல்லையா?

ADVERTISEMENT

செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலிலேயே இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயம் ரவி, பரோலில் தன் 12 வயது மகளைப் பார்க்க வெளியே வருகிறார். அவர் வெளியே வந்த நேரத்தில் யார் யார் மூலம், குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலுக்கு சென்றாரோ அவர்கள் எல்லாம் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இன்ஸ்பெக்டராக இருக்கும் கீர்த்தி சுரேஷின் சந்தேக பார்வை ஜெயம் ரவி மீது திரும்புகிறது. எப்பொழுதும் ஷாடோ போலீஸுடன் இருக்கும் ஜெயம் ரவி இந்த கொலைகளை செய்தாரா, இல்லையா? ஜெயம் ரவி ஜெயிலுக்குப் போகும் காரணம் என்ன? குற்றம் செய்தவர்களை யார் கொலை செய்தது? என்பதே சைரன் படத்தின் மீதிக் கதை.

ADVERTISEMENT

ஜெயம் ரவியை வைத்துக்கொண்டு பில்டப்புகள் இல்லாமல் நேராக கதைக்குள் சென்றுவிட்டு அதன்பின் ஸ்டேஜிங்கில் சற்று நேரம் எடுத்துக்கொண்டு போகப் போக ஆக்சிலேட்டர் கொடுத்து படத்தை மித வேகமாக நகர்த்தி கடைசியில் அழுத்தமான காட்சிகளோடு படத்தை முடித்து ஒரு நிறைவான திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ் ஆண்டனி. கதையிலும் தன் எழுத்திலும் மிக ஆழமான கருத்துக்களைப் படம் மூலமாக தெளித்த இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கூட வேகத்தைக் கூட்டி இருக்கலாம். ஆங்காங்கே கதைகளை விட்டு வெளியே செல்லாதபடி இருக்கும் வசனங்கள் அதே சமயம் சமூகத்திற்குத் தேவையான கருத்துக்களையும் உள்ளடக்கி படத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. தேவையில்லாத மாஸ் காட்சிகள், சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள், பாடல்கள் எனக் கண்களை உறுத்தும் அளவிற்கு எதையும் பெரிதாக வைக்காமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதை மட்டும் படத்தில் கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ் ஆண்டனி.

முந்தைய படங்களைக் காட்டிலும் தன் அனுபவ நடிப்பின் மூலம் முதிர்ச்சியான கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார் ஜெயம் ரவி. சின்ன சின்ன முக பாவனைகள் அசைவுகள் என அந்த முதிர்ச்சியான கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். எப்பொழுதும் கலகலப்பாக நடிக்கும் ஜெயம் ரவி இந்த படத்தில் சற்றே அடக்கி வாசித்து அதிலும் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். வாய் பேச முடியாத அதே சமயம் காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இன்னொரு நாயகி கீர்த்தி சுரேஷ், மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து மாஸ் காட்டியிருக்கிறார். தேவையில்லாத எமோஷ்னல்களை முகபாவனைகள் மூலம் வெளிப்படுத்தாமல் ஒரிஜினல் போலீஸ் எப்படி எல்லாம் நடந்து கொள்வார்களோ அப்படியெல்லாம் எதார்த்தமாக நடந்து கொண்டு அந்த கதாபாத்திரத்திற்கு வலுக்கூட்டி இருக்கிறார். இவரின் மிடுக்கான தோற்றமும் துடிப்பான வசன உச்சரிப்பும் அந்த கதாபாத்திரத்தை தூக்கிப் பிடித்திருக்கிறது.

அரசியல்வாதியாக வரும் அழகம் பெருமாள் தன் அனுபவ நடிப்பு மூலம் கவனம் பெற்றிருக்கிறார். ஜாதி வெறி பிடித்த போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, அந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக நியாயம் செய்திருக்கிறார். எரிச்சல் தரும்படியான இவரின் நடிப்பு கைத்தட்டல் பெற்றிருக்கிறது. நகைச்சுவைக்கு பொறுப்பேற்ற யோகி பாபுவின், ஒரே மாதிரியான நடிப்பும் வசன உச்சரிப்பும் இன்னும் எத்தனை படங்களுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. இருந்தும் ஒரு சில இடங்களில் மட்டும் மெல்லிய புன்னகைகளை வர வைத்து விடுகிறார். வில்லனாக மிரட்ட முயற்சி செய்திருக்கிறார் வில்லன் நடிகர் அஜய். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து நடிகர்களும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நிறைவாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக ஜெயம் ரவியின் மகளாக நடித்திருக்கும் நடிகை சிறப்பு.

எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவில் திரில்லர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக கையாண்டு படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார். சாம் சி.எஸ் பின்னணி இசை வழக்கம் போல் காதை கிழித்து விடுகிறது. மொத்தமாக இப்படத்தை பார்க்கும் பொழுது, முதல் பாதி மெதுவாக நகர்ந்து ஒரு கொலைக்குப் பின் வேகம் எடுத்து அதன் பின் கிரிப்பிங்கான திரைக்கதை மூலம் நிறைவான திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை சைரன் கொடுக்கத் தவறவில்லை.

சைரன் - சத்தம் அதிகம்; வெளிச்சம் குறைவு!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT