ADVERTISEMENT

2K கிட்ஸின் காதல் இப்படியா இருக்கும்? இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - விமர்சனம்

02:48 PM Mar 16, 2019 | vasanthbalakrishnan

பசி, காமம் போல உலகின் ஆதி உணர்வுகளில் ஒன்று காதல். அன்று முதல் இன்றுவரை காதல் பற்றி எவ்வளவோ சொல்லப்பட்டும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்தாலும் காதல் இன்னும் புதிதாகவே இருக்கும் மர்மம் என்ன? ஒன்றே ஒன்றுதான். காதலில் எத்தனை பொதுமைகள் இருந்தாலும் ஒரு காதல் இன்னொரு காதலைப் போன்றது அல்ல. கைரேகை, கருவிழியைப் போல ஒவ்வொரு காதலும் தனித்துவமானது. அப்படி ஒரு பொதுமையான காதலையும் தனித்துவமான காதலர்களையும் பற்றிய படம்தான் ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’.

ADVERTISEMENT



பின்விளைவுகளை யோசிக்காமல் சட்டென்று கோபப்பட்டு விடும் ஆண். கோபத்தில் கூட அத்தனை மிருதுவாகப் பேசும் பெண். பல சந்தர்ப்பங்களில் முட்டிக்கொள்ளும் இந்த இரண்டு முரண்களும் ஒரு கட்டத்திற்கு மேல் முத்தமிட்டுக் கொள்கின்றன. ஆரம்பத்தில் காதலை இணைக்கும் அழகான இந்த முரண்கள் போகப்போக ஆபத்தாண முரண்களாகி காதலையே விலை கேட்கின்றன. இதையெல்லாம் கடக்கும் ஆழம் இஸ்பேடு ராஜா இதய ராணியின் காதலுக்கு இருக்கிறதா என்பதே படம்.

காதலிக்கும் முன் ஆணுக்கு இருக்கும் இன்க்ளூசிவ் மனப்பான்மை காதலிக்க ஆரம்பித்த பின்னும், ஏன் திருமணத்திற்கு பின்னும் இருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் கூறவேண்டும். எளிமையாக சொல்வதென்றால், காதலிக்கத் துவங்குவதற்கு முன் ஒரு பெண் ஆண் நண்பர்களுடன் இயல்பாகப் பழகுவதையோ பேசுவதையோ குற்றம் காணாத ஆணின் மனம், அதே பெண்ணை காதலிக்கத் துவங்கியபின் அதை இயல்பாக ஏற்பதில்லை. ‘அவன் கூட இந்நேரத்துக்கு என்ன பேச்சு?’ ‘பசங்க கூட தனியா ஏன் வெளிய போற?’ ‘இப்படி ஏன் பண்ற.. அங்க ஏன் போற?’ போன்ற அத்தனை கேள்விகளும் காதலுக்குப் பின் வருவதற்கான காரணம் ஆண்களிடைய இருக்கும் ஒரு ஓனர்ஷிப் மென்டாலிட்டிதான். காதலிக்க ஆரம்பித்தபின் அல்லது திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தனக்கே சொந்தம் என்று அவளை ஒரு பண்டமாக அணுகும் மனநிலையே இதற்கெல்லாம் அடிப்படை. ஆனால் இது அத்தனையும் அன்பின் பெயராலேயே நிகழ்த்தப்படுகின்றன.

‘என் மேல அவ்ளோதான் லவ்வா.. என் மேல நம்பிக்கை இல்லையா?’ என்று அன்பின் பெயரால் நிகழ்த்தப்படும் இந்த வன்முறைகள் குறித்த ஆழமான பார்வையையும் முன்வைக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பு எந்த புள்ளியும் வெறுப்பாக வெறியாக மாறுகிறது? அப்படி மாறினால் நாம் வைத்திருந்தது நிஜமான அன்புதானா என்பதுதான் படத்தின் மையக்கேள்வி. ஆனால் நுணுக்கமான இந்த சிக்கல் திரைக்கதையாய் மாறியிருப்பதில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ADVERTISEMENT



கௌதம், தாரா என இருவரது பாத்திரப்படைப்பும் அதை ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுதாத் இருவரும் கையாண்டிருக்கும் விதமும் கச்சிதம். குறிப்பாக ஷில்பா மஞ்சுநாத்தின் குரலும் டயலாக் மாடுலேஷனும் அந்தக் கதாப்பாத்திரத்தின் தன்மையை திடமாக்குகின்றன. இருவருக்குமான சின்ன சின்ன ஊடல்கள், அந்த சந்தர்ப்பங்களில் ஆணுக்கு எழும் சந்தேகங்கள், குழப்பங்கள், இருவருக்குமான பிரிவு போன்ற பல தருணங்கள் மிக இயல்பாக யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆண் பெண் யாதொருவர் மீதும் தவறென நிலைகுத்தாமல், சூழ்நிலைகள், அதையொட்டிய உணர்வு ஊசலாட்டங்கள், அதிலிருந்து எழும் நொடிப்பொழுது முடிவுகளை வைத்தே கட்டமைத்திருப்பது அழகு. கதை முழுவதும் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நிறைந்திருப்பதால் பாலசரவணன், மா.கா.பா உள்பட வேறு யாரும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. படத்தை தோளில் தூக்கிச் செல்லும் இன்னுமிருவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். படத்தின் மொத்த மூடையும் தீர்மானிப்பதில் இசைக்கும் ஒளிப்பதிவுக்கும் பெரும் பங்குண்டு. தொழில்நுட்பரீதியாக முழு நிறைவுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது படம்.

சிறிய சண்டைக்குப் பிறகும் கூட ‘கோபம்லாம் இல்லடா.. நீ எதையும் போட்டு குழப்பிக்காம தூங்கு’ என்பதில் துவங்கி ‘நான் உன்ன விட்டு பிரிஞ்சாலும் நான் திருப்பி உனக்காக வருவேன்னு நீ நம்பணும்’ என்பது வரை அந்த பாத்திரம் வலுவாய் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தில் பெரும்பாலும் குற்றவுணர்வில் தவிப்பதும் தாராதான். ‘நான் முன்னாடியே உன்ட்ட வந்துருக்கணும்’ ‘தப்பு பண்ணிட்டேன்’‘சாரி’ என கௌதம் செய்த தவறுகளுக்குக் கூட தாரா மன்னிப்பு கேட்பதும் குற்றவுணர்வும் உழல்வதும் பெறும் உறுத்தல். அதுவும் அன்பின் பெயரால் ஆண் பெண்ணை துன்புறுத்துவது குறித்த படத்தில். ஆனால் கௌதம் பெரும்பாலான இடங்களில் எந்த குற்றவுணர்விலும் சிக்கவில்லை. அதுகுறித்த வருத்தமும் வேதனையும் அவனிடம் இல்லை. கொஞ்சம் பொறுமை காத்தால் தாரா தனக்கே கிடைத்துவிடுவாள் என்கிற நிலைமையில் கூட பொறுமை காக்காமல் கோபத்தில் சூழைலை சிதைக்கும் ஒருவன் அதற்கும் தாரா மேல் கோபப்படுவதும், இறுதியில் தாராவே இதற்கும் மன்னிப்பும் கேட்பதுமே கூட ஒரு வன்முறைதானே?



காதலின் சோகத்தில் ஆண் போதைக்கும் அடிமையாவதும் அதன் தொடர்ச்சியாக ஒரு பாடலைப் பாடுவதும் காதல் படங்களின் க்ளிஷேவாக மட்டும் இல்லை... அந்த மொத்த காட்சிகளுமே படத்தின் நீளத்தைக் கூட்டியும் பார்வையாளர்களை படத்திலிருந்து அந்நியப்படுத்தவுமே செய்கின்றன. அதற்கு அடுத்தடுத்த காட்சிகள்தான் படத்தின் ஆன்மா. ஆனால் இந்த காட்சிகளில் அறுபட்ட தொடர்பினால் அந்த காட்சிகளின் தாக்கம் தடைபடுகிறது. அதிர்ச்சியான ஒரு முடிவை நோக்கி பயணிக்கிறது படம். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு ஆழமான காரணம் அதில் புதைந்திருக்கிறது. அத்தகைய கனமான முடிவுடன் நிறைவுபெற்றிருந்தால் படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமோ என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கடுத்து இடம்பெறும் காட்சிகள் பாசிடிவ்வான ஒரு நிறைவை கொடுத்தாலும் ஒரு பாசிடிவ் முடிவிற்காக உருவாக்கப்பட்டது போன்ற செயற்கைத்தன்மையுடனே இருக்கின்றன. காதலர்களைத் தாண்டிய, தற்காலத்தைய பழக்கவழக்கங்களுக்கு சற்று தள்ளி இருப்பவர்களுக்கு படம் மிக அன்னியமாகத்தான் இருக்கும். ’எதுக்கு சண்ட போடுறாங்க, எதுக்கு திரும்ப சேருறாங்க’ என்ற குழப்பமே அவர்களுக்கு மிஞ்சும்.

இருந்தாலும் சமகால காதலின் மிகநுணுக்கமான ஒரு பரிமாணத்தை பதிவு செய்ததில் தனித்துவம் பெறுகிறது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT