ADVERTISEMENT

“திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும்” - விஷ்ணு விஷால்

07:19 PM Jan 29, 2024 | kavidhasan@nak…

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் வெண்ணிலா கபடி குழு. இதில் சரண்யா மோகன், கிஷோர், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இமேஜின் கிரியேஷன் தயாரித்திருந்த இப்படத்திற்கு செல்வ கணேஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், 2019 ஆம் ஆண்டில் விக்ராந்த் நடிப்பில் வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் வெளியானது.

ADVERTISEMENT

இந்த நிலையில் வென்ணிலா கபடி குழு வெளிவந்து இன்றுடன் 15 ஆண்டுகளைக் கடக்கிறது. இதையொட்டி சுசீந்திரன் கூறுகையில், “வெண்ணிலா கபாடி குழு இன்றுடன் 15 வருடங்கள் நிறைவானதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதல் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆனந்துக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி” என்றுள்ளார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான விஷ்ணு விஷால், “என் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. என் திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது திரை வாழ்க்கைக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்த என் இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி. திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல முயன்றுள்ளேன்.

எனது படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எந்த வித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த வகையில் எனது திரைப்படங்கள் மக்களிடம் பாஸிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் நான் பெருமைப்படுகிறேன். எனது பதினைந்து வருடப் பயணத்தில் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்யவே முயன்றிருக்கிறேன். இதுவரை நான் நடித்துள்ள 20 படங்களில் பாதிக்கு மேல் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் வாழும் என்பதே எனக்குப் பெருமை.

என் திரைப் பயணத்தின் இந்த 15வது ஆண்டு எனக்கு இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. 'லால் சலாம்' எனும் அற்புதமான படத்தில், நம் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமை மற்றும் சிறந்த மனிதரான ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது பயணம் சரியான தருணத்திலும் சரியான திசையிலும் உச்சத்தை நோக்கிச் செல்வது மகிழ்ச்சி.! 'வாழ்க்கை உங்களைச் சோதிக்கும். உங்கள் திறமைக்குப் பல சவால்களைத் தரும். ஆனால் விடாமுயற்சியுடன் தெளிவான நோக்கத்துடன். உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்தி வலுவாக நின்றால், வெற்றியை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT