ADVERTISEMENT

இது நமக்கு நாமே செய்துக் கொள்கிற அநியாயம் - சூப்பர் டீலக்ஸை ஆதரிக்கும் வித்யா

12:25 PM Apr 04, 2019 | george@nakkheeran.in

விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடையே வரவேற்பையும், பாரட்டுகளையும் பெற்று வருகிறது. அதேநேரத்தில் பல சர்சைகளிலும் சிக்கியிருக்கிறது. குறிப்பாக விஜய் சேதுபதியின் ஷில்பா கேரக்டர் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று திருநங்கை சமூகத்தினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இன்னிலையில் திருநங்கை ஸ்மைலி வித்யா சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு ஆதரவாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர்...

ADVERTISEMENT

ADVERTISEMENT

“திருநங்கைகள் சேர்ந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் சில காட்சிகளை நீக்கணும், மாற்றணும் என்று வலியுறுத்தியிருக்காங்க. அதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. ஏற்கனவே பரியேறும் பெருமாள் படத்தில் ஒன்பது, உஸ் என்பது போன்ற வார்த்தைகளை ஒரு கெட்டவன் ஹீரோவுடைய அப்பாவைப் பார்த்துச் சொல்வத்தைத் தவறாக புரிஞ்சுக்கிட்டு அதுக்காக எதிர்ப்பு தெரிவிச்சு அந்த காட்சியையும் நீக்கியிருக்காங்க போல. அது எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்துச்சு. ஏனென்றால், மற்ற படங்களில் ஹீரோவொ, ஹீரோவின் நண்பனோ அந்த மாதிரியான தவறான வார்த்தைகளைச் சொல்லிக் கிண்டல் பண்ணுவது போல இந்த படத்தில் இல்லை. நாம் எப்படிப் பார்க்கப்படுகிறோம், அதனால் நாம் எந்தளவு பாதிக்கப்படுகிறோம் என்ற எதார்த்தத்தைக் காட்டியிருக்கும்போது அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இரண்டாவது பிரச்சனையாக சொல்லப்படுவது திருநங்கையைத் தலையில் முடியில்லாமல் காட்டியிருப்பது, திருநங்கை எப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்?, தன் மனைவி முன்னிலையில் எப்படி உடை மாற்றுகிறார்? என்பது போன்ற கேள்விகள் வருகின்றன. சிலருக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் பலருக்குத் தெரியும். பலர் தான் ஒரு திருநங்கை என்ற உணர்வை வெளிப்படுத்துவதற்கு முன்பே திருமணம் செய்துவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் குழந்தையும் பிறந்திருக்கின்றன. திருநங்கைகளில் சிலர் ஹார்மோன் பிரச்சனைகளால் முடியை இழந்து விடுகின்றனர். இது எல்லாமே எதார்த்தம் தான்.

வெறுமனே திருநங்கைகள், சிறுபான்மையினர் என்பதனாலேயே நம்மை ரொம்ப நல்லவர்களாக, அழகானவர்களாக மட்டும் காட்டவேண்டும் என்பதெல்லாம் அநியாயம். அது எதார்த்தமும் இல்லை. ஒருவர் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நம் நிறை குறை இரண்டையும் சேர்த்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மை ரொம்ப நல்லவர்களாக காட்டிக்கொள்வதால் மட்டும் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சரியில்லை.

பெரிய பிரச்சனையாக சொல்லப்படுவது திருநங்கை குழந்தைகளை கடத்தியதாக கூறும் காட்சி. அவர் ஒரு பெண்ணாக தன்னை உணரும்போதும் தனக்கு ரத்தமும் சதையுமாக ஒரு குழந்தை இருப்பதை ஏற்றுக்கொள்வதற்கும், தற்கொலைச் செய்துகொள்கிற மனநிலை வருவதற்கும் ஒரு வழுவான காரணம் வேண்டும். அந்த காரணமாகதான் நான் அதைப் பார்க்கிறேன். அதை அந்த கேரக்டரின் தனிப்பட்ட வாழ்க்கையாக மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். வேம்பு என்ற கேரக்டர் திருமணத்திற்குப் பிறகு வேறொருவருடன் உடலுறவு வைத்தார் என்பதற்காக எல்லா வேம்புகளும் அப்படி செய்வார்கள் என்று சொல்ல முடியுமா? அந்த அம்மா ஆபாச படத்தில் நடித்துள்ளார் என்பதால் எல்லா அம்மாக்களும் ரோட்டில் இரங்கி ஒரு அம்மாவை எப்படி அந்த மாதிரிக் காட்டினார்கள் என்று போராடுகிறார்களா? யாரும் அப்படிப் பண்ண மாட்டார்கள் தான். ஆனால், அந்த அம்மா அப்படி நடித்திருக்கிறாள், அந்த வேம்பு அதை செய்தாள், அந்த ஷில்பாவின் வாழ்கையில் அப்படி நடந்திருக்கிறது.

ஷில்பா குழந்தையைக் கடத்தின மாதிரி சொல்லியிருப்பது கஷ்டமாக இருந்தாலும் அதைக் கதைக்காக என கடந்துவிட முடியும். ஆனால், பெர்லின் கேரக்டர் ஷில்பாவை வன்புணர்வு செய்த பிறகு ஷில்பா ஒரு இடத்தில் அவர் என் புருஷன் மாதிரி, இப்பொதான் ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சுது என்று சொல்வதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதை யாரும் கவனிக்கவில்லை என்பதும் வருத்தமளிக்கிறது. தியாகராஜா குமாரராஜா இந்த விஷயத்திற்காக மன்னிப்புக் கேட்டால் நான் அதைப் பாராட்டுகிறேன். ஆனால், வேறெந்த விஷயத்திற்கும் மன்னிப்பு கேட்பதையோ, படத்தை எடிட் செய்வதையோ ஒத்துக்க முடியாது. அது ரொம்ப அநியாயம். திருநங்கைகளுக்கும் நமக்கு நாமே செய்துகொள்கிற அநியாயம். ஏனென்றால், மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நம்முடைய பலவீனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று மற்ற திருநங்கைகளின் எதிர்ப்புக்கு பதில் தெரிவிக்கும் விதமாக பேசியிருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT