Skip to main content

"இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர்" - ஆஸ்கர் வென்ற படக்குழுவை பாராட்டிய பிரதமர்

 

The Elephant Whisperers team meets pm modi

 

கார்த்திகி கோன்சால்வேஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ஆவணக் குறும்படம் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பராமரிப்பு பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி, தாயைப் பிரிந்து உடம்பில் காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானையை ரகு எனப் பெயரிட்டு வளர்த்து வந்ததை குறித்து எடுக்கப்பட்டது. 

 

இப்படம் 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் விருது வாங்கியது. விருதினை இப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மேடையில் பகிர்ந்து கொண்டனர். இந்த விருதின் மூலம் உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் முதல் முறையாக தமிழ் படம் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்தது. படக்குழுவினரை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாயும் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வேஸ்-க்கு 1 கோடி ரூபாயும் ஊக்கத்தொகை கொடுத்தார். 

 

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வேஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா இருவரும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் திரைப்படத்தின் வெற்றி உலகளாவிய கவனத்தையும் பாராட்டுகளையும் ஈர்த்துள்ளது. இன்று, அப்படத்தின் அறிவார்ந்த குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.